1. கிறிஸ்மஸ் விழாக்களில் இந்து சகோதர, சகோதரிகள் கலந்துகொண்டது, புதிய ஆண்டிற்குத் தேவையான நம்பிக்கையை வளர்த்துள்ளது - பேராயர் பார்வா
2. பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் இந்தியர்களைத் தலைகுனிவுக்கு உள்ளாக்குகிறது - அனைத்திந்திய கிறிஸ்தவ கழகம்
3.
பாலியல் வன்கொடுமையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆறுபேரின் சார்பில் எந்த
வழக்கறிஞரும் வாதாடப்போவதில்லை - புதுடில்லி வழக்கறிஞர்கள்
4. 2012ம் ஆண்டில் 12 திருப்பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் - Fides அறிக்கை
5. வியட்நாமில், 14 கத்தோலிக்கர்கள் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்
6. தூசிகளையும், ஈரப்பதத்தையும் நீக்குவதற்கு Sistine சிற்றாலயத்தில் புதிய கருவிகள் புத்தாண்டில் பொருத்தப்பட உள்ளன
7. 2012ம் ஆண்டில் மதம் சார்ந்த செய்திகள் அமெரிக்க ஊடகங்களில் அதிகம் இடம்பெற்றன
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. கிறிஸ்மஸ் விழாக்களில் இந்து சகோதர, சகோதரிகள் கலந்துகொண்டது, புதிய ஆண்டிற்குத் தேவையான நம்பிக்கையை வளர்த்துள்ளது - பேராயர் பார்வா
சன.02,2013. கிறிஸ்மஸ், புத்தாண்டு விழாக்களையொட்டி ஒடிஸ்ஸா மாநிலத்தின் பல்வேறு கோவில்களில் மக்கள் கூட்டம் நிரம்பியிருந்தது மகிழ்வையும், நம்பிக்கையையும் தருகிறது என்று கட்டக் புபனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா கூறினார்.
2007-2008 ஆகிய ஈராண்டுகள் ஒடிஸ்ஸாவில் நிகழ்ந்த வன்முறைகளுக்குப் பின், அங்குள்ள
கிறிஸ்தவ கோவில்களில் திருவிழாக்கள் அச்சத்துடனேயே கொண்டாடப்பட்டு
வந்துள்ளன என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிய பேராயர் பார்வா, இவ்வாண்டு நிகழ்ந்த கொண்டாட்டங்கள் பெரும்பாலும் அச்சமின்றி அமைந்தது நம்பிக்கை தரும் ஓர் அடையாளம் என்று கூறினார்.
இவ்வாண்டு நிகழ்ந்த விழாக்களில் இந்து சகோதர, சகோதரிகள் பெருமளவு கலந்துகொண்டது, புதிய ஆண்டிற்குத் தேவையான நம்பிக்கையை வளர்த்துள்ளது என்றும் பேராயர் பார்வா ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
2013ம் ஆண்டுக்கென பேராயர் பார்வா விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தியில், இளையோர் நற்செய்தியைப் பரப்பும் பணியாளர்களாய் விளங்க வேண்டும் என்ற சிறப்பு அழைப்பை விடுத்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அமைதியான முறையில் செல்வதற்கு, காவல் துறையினர் மேற்கொண்ட முயற்சிகளையும் பேராயர் புகந்து கூறி, கிறிஸ்தவ சமுதாயத்தின் நன்றியையும் எடுத்துரைத்தார்.
2. பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் இந்தியர்களைத் தலைகுனிவுக்கு உள்ளாக்குகிறது - அனைத்திந்திய கிறிஸ்தவ கழகம்
சன.02,2013. பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோரைப் பற்றிய விவரங்களை அரசு சேகரித்து, உடனுக்குடன் அவற்றின் மேல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்திந்திய கிறிஸ்தவக் கழகத்தின் தலைவர் ஜோசப் டிசூசா கூறினார்.
பெண்களின்
பாதுகாப்பு என்ற அம்சத்தில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது
என்பதை ஐ.நா. அவை அறிவித்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய அனைத்திந்திய
கிறிஸ்தவ கழகம், இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் இந்தியர்களைத் தலைகுனிவுக்கு உள்ளாக்குகிறது என்று கூறியுள்ளது.
பாலியல் வன்கொடுமைகளுக்கு அதிகம் இலக்காவது தலித் பெண்கள், மற்றும் பழங்குடி பெண்கள் என்பதை வலியுறுத்திக் கூறும் இவ்வறிக்கை, குடும்பங்களுக்குள் நடைபெறும் வன்முறைகள் குறித்தும் கருத்து வெளியிட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கலவரங்களின்போதும், கந்தமால்
கலவரங்களின்போதும் குழுக்களாகப் பாலியல் வன்கொடுமைகளைச் செய்தவர்கள்
இன்னும் தண்டிக்கப்படாமல் இருப்பது பெரும் அநீதி என்று அனைத்திந்திய
கிறிஸ்தவக் கழகத்தின் பொதுச்செயலர் ஜான் தயாள் கூறினார்.
புது டில்லியில் நடைபெற்ற இவ்வன்கொடுமையைப் பற்றி கருத்து வெளியிட்ட தலாய் லாமா, அகிம்சைக்குப் புகழ்பெற்ற இந்தியாவில் நன்னெறி விழுமியங்கள் குறைந்து வருவது வேதனையைத் தருகிறது என்று குறிப்பிட்டார்.
3.
பாலியல் வன்கொடுமையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆறுபேரின் சார்பில் எந்த
வழக்கறிஞரும் வாதாடப்போவதில்லை - புதுடில்லி வழக்கறிஞர்கள்
சன.02,2013.
டிசம்பர் மாதத்தில் புது டில்லியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையில்
குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆறுபேரின் சார்பில் எந்த வழக்கறிஞரும்
வாதாடப்போவதில்லை என்று புது டில்லியின் அனைத்து வழக்கறிஞர்களும்
முடிவெடுத்துள்ளனர்.
23
வயதான மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் பாலியல்
வன்கொடுமைக்கு இலக்கானது இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இக்குற்றம்
பற்றிய 1000 பக்கங்கள் அடங்கிய விவரங்களை காவல்துறையினர் நீதி மன்றத்தில்
தாக்கல் செய்துள்ளனர். இவ்வழக்கு விசாரணை இவ்வியாழனன்று ஆரம்பமாகும்
நிலையில், குற்றம் சுமத்தப்பட்ட ஆறு பேரின் சார்பில் யாரும் வாதாடப் போவதில்லை என்று டில்லி வழக்கறிஞர்கள் முடிவெடுத்துள்ளனர்.
இந்த
வழக்கு விரைவில் முடிந்து குற்றவாளிகள் தகுந்த தண்டனை பெறவேண்டும் என்பதே
இம்முடிவுக்குக் காரணம் என்று வழக்கறிஞர்கள் சார்பில் பேசிய Sanjay Kumar கூறினார்.
இக்கொடுமைகளுக்கு உள்ளான பெண், மருத்துவ சிகிச்சைகள் பலனின்றி டிசம்பர் 29ம் தேதி உயிரிழந்ததால், நாட்டின் பல்வேறு நகரங்களில் புத்தாண்டு விழாக்கள் நிறுத்தப்பட்டன.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் கண்டித்து, புது
டில்லியில் பெண்கள் புத்தாண்டு நாளன்று அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வன்கொடுமைகளுக்குப் பலியான இளம்பெண்ணுக்கு இப்புதனன்று இறுதி ஊர்வலம்
நடைபெற்றது.
4. 2012ம் ஆண்டில் 12 திருப்பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் - Fides அறிக்கை
சன.02,2013. கடந்து சென்ற 2012ம் ஆண்டில் 12 திருப்பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று Fides செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும் Fides செய்தி நிறுவனம் வெளியிடும் இத்தகவலின்படி, கடந்த ஆண்டு 10 அருள்பணி யாளர்கள், ஒரு அருள் சகோதரி மற்றும் அருள் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பொது நிலையினர் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்ட பன்னிருவரில், ஆறுபேர் லத்தீன் அமெரிக்காவிலும், நான்கு பேர் ஆப்ரிக்காவிலும், இருவர் ஆசியாவிலும் கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்வருள் பணியாளர்களின் கொலைகள் உலக ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவில்லை என்றும், இவர்கள் அனைவரும் அமைதியான முறையில் தங்கள் விசுவாசத்திற்கு சான்று பகர்ந்துள்ளனர் என்றும் Fides அறிக்கை மேலும் கூறுகிறது.
கொல்லப்பட்ட திருப்பணியாளர்களை மறைசாட்சிகள் என்று தீர்மானிப்பது திருஅவையின் பொறுப்பு என்று கூறும் இவ்வறிக்கை, இவர்கள் கொல்லப்பட்டச் சூழலின் அடிப்படையில் இத்தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
5. வியட்நாமில், 14 கத்தோலிக்கர்கள் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்
சன.02,2013. வியட்நாமில், அரசின் அடக்கு முறைகளுக்கு எதிராக இணையத்தளத்தில் கருத்துக்களை வெளியிட்ட 14 கத்தோலிக்கர்கள் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்.
வியட்நாம் அரசு சட்டத்தின் 79வது பிரிவின்படி, அரசைக்
கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள 14
கத்தோலிக்கர்கள் இம்மாதம் 6ம் தேதி நடைபெற விருக்கும் விசாரணையின்
இறுதியில் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.
அரசின் நடவடிக்கைகள் மிகுந்த துயரத்தையும், அச்சத்தையும் உருவாக்கியுள்ளது என்று வியட்நாம் ஆயர் பேரவையின் நீதி, அமைதிப் பணிக்குழுவின் செயலர் அருள்தந்தை Le Quoc Thang கூறினார்.
வியட்நாமில், 2012ம்
ஆண்டு இணையதளத்தின் மூலம் கருத்துக்களைப் பரிமாறி வந்த 40க்கும்
அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மனித உரிமைகள் கண்காணிப்பு
அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
6. தூசிகளையும், ஈரப்பதத்தையும் நீக்குவதற்கு Sistine சிற்றாலயத்தில் புதிய கருவிகள் புத்தாண்டில் பொருத்தப்பட உள்ளன
சன.02,2013. வத்திக்கானில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற Sistine சிற்றாலயத்தில் உருவாகும் தூசிகளையும், ஈரப்பதத்தையும் நீக்குவதற்கு புதிய கருவிகள் புத்தாண்டில் பொருத்தப்பட உள்ளன.
இச்சிற்றாலயத்தை ஒவ்வோர் ஆண்டும் 50 இலட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பார்வையிட வருவதால், அங்கு
உருவாகும் தூசி மற்றும் அவர்களின் மூச்சுக் காற்றின் ஈரப்பதம் அக்கோவிலில்
அமைந்துள்ள ஒவியங்களைச் சிதைக்கும் ஆபத்து உள்ளதென்பதால் இந்த ஏற்பாடு
செய்யப்பட உள்ளது என்று வத்திக்கான் அருங்காட்சியகத்தின் இயக்குனர் Antonio Paolucci கூறினார்.
பயணிகள் வரும்பாதையில் 300 அடிக்கும் நீளமான ஒரு கம்பளம் தற்போது விரிக்கப்பட்டு, பயணிகளின் காலணிகளில் உள்ள தூசிகளைக் குறைக்கும் வழிகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
உலகப் புகழ்பெற்ற மிக்கேலாஞ்சலோவின் ஓவியங்கள் அடங்கிய Sistine சிற்றாலயம் 1512ம் ஆண்டு திறக்கப்பட்டது என்பதும், 2012ம்
ஆண்டு அக்டோபர் 31ம் தேதி திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இவ்வாலயத்தின் 500ம்
ஆண்டு நிறைவைக் கொண்டாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
7. 2012ம் ஆண்டில் மதம் சார்ந்த செய்திகள் அமெரிக்க ஊடகங்களில் அதிகம் இடம்பெற்றன
சன.02,2013. 2012ம் ஆண்டில் மதம் சார்ந்த செய்திகள் அமெரிக்க ஊடகங்களில் அதிகம் இடம்பெற்றன என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒவ்வோர் ஆண்டும் நிறைவடையும் வேளையில், அவ்வாண்டைப்
பின்னோக்கிப் பார்ப்பது ஊடகங்களின் வழக்கம். 2012ம் ஆண்டில் நடைபெற்ற
நிகழ்வுகளைப் பின்னோக்கிப் பார்த்த அமெரிக்க ஊடகங்கள், அந்நாட்டில் மதம் சார்ந்த விவாதங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன என்று கூறியுள்ளன.
பிள்ளைப் பேறு, கருக்கலைப்பு
ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய சட்டவரைவுகள் அமெரிக்கப் பாராளுமன்றத்தில்
விவாதிக்கப்பட்டபோது இடம்பெற்ற செய்திகள் முதன்மை இடத்தில் உள்ளன.
இவ்வாண்டு நடைபெற்ற அரசுத் தலைவர் தேர்தலிலும் மதம் ஒரு முக்கிய இடம்பெற்றது என்று ஊடகங்கள் கூறியுள்ளன.
அமெரிக்காவில், 1990ம் ஆண்டு 6 விழுக்காடு மக்கள் மத நம்பிக்கை கொண்டிருந்தனர் என்றும், இவ்வெண்ணிக்கை தற்போது 19 விழுக்காடாக உயர்ந்திருப்பதும் ஒரு முக்கிய செய்தியாக இவ்வாண்டில் இடம்பெற்றது.
No comments:
Post a Comment