Wednesday, 2 January 2013

Catholic News in Tamil - 01/01/2013

 
1.  திருத்தந்தை - மனிதர்கள் அடிப்படையில் அமைதியை விரும்புகிறவர்கள் என்பதை வெகுவாக நம்புகிறேன்

2.  திருத்தந்தையின் மூவேளை செப உரை

3.  திருத்தந்தை - நன்மையே உறுதியாக வெல்லும் என்பதைச் சொல்வதே நம்பிக்கை ஆண்டில் நமது முக்கியப் பணி

------------------------------------------------------------------------------------------------------

1.  திருத்தந்தை - மனிதர்கள் அடிப்படையில் அமைதியை விரும்புகிறவர்கள் என்பதை வெகுவாக நம்புகிறேன்

சன.01,2013. மனிதர்கள் அடிப்படையில் அமைதியை விரும்புகிறவர்கள் என்பதை, தான் வெகுவாக நம்புவதாலேயே, இவ்வாண்டுக்குரிய அமைதி நாளுக்கு "அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்" என்ற வார்த்தைகளைத் தன் அமைதிச் செய்தியின் கருப்பொருளாகத் தேர்ந்தெடுத்ததாகத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
2013ம் ஆண்டின் முதல் நாளன்று வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் ஆடம்பரத் திருப்பலியை நிகழ்த்தியத் திருத்தந்தை, தன் மறையுரையின் துவக்கத்தில் இவ்வாறு கூறினார்.
வன்முறைகளை வளர்க்கும் போர்களமாகக் காட்சிதரும் இவ்வுலகில், ஏழைகள் செல்வந்தர்கள் இடையே உள்ள வேறுபாடுகள், சுயநலத்தின் ஆதிக்கம், கட்டுப்பாடற்ற முதலாளித்துவம் என்ற வேதனைக்குரிய போக்குகள் அதிகம் காணப்பட்டாலும், அமைதியை வளர்க்கும் முயற்சிகளும் பெருமளவில் வளர்ந்து  வருவது ஆறுதலைத் தருகிறது என்று திருத்தந்தை தன் மறையுரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.
தூய கன்னி மரியா இறைவனின் தாய் என்ற பெருவிழாவையும், 46வது அகில உலக அமைதி நாளையும் சிறப்பிக்கும் வகையில் திருத்தந்தை ஆற்றிய இத்திருப்பலியில், பல்வேறு நாட்டுத் தூதர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே, மற்றும் திருப்பீடத்தின் உயர் அதிகாரிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.
நம்மை அரவணைத்துக் காக்கும் பெற்றோரைப் போல விளங்கும் இறைவனின் காணக்கூடிய வடிவமாக நம்மத்தியில் வாழ்ந்த இறைமகனின் முகத்தை ஆழ்ந்து தியானிப்பது அமைதியைப் பெறும் ஓர் உறுதியான வழி என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
அமைதியின் இளவரசரான இயேசுவை நாம் ஆழ்நிலை தியானத்தில் கண்டு, அமைதிபெற இறைவனின் தாயான மரியா நமக்கு உதவி புரிவாராக என்று திருத்தந்தை தன் மறையுரையை நிறைவு செய்தார்.

2.  திருத்தந்தையின் மூவேளை செப உரை

சன.01,2013. 'ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக!ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!' என்ற விவிலிய இறைஆசீரோடு 2013ம் ஆண்டின் முதல் நாளில் உங்களை வாழ்த்த ஆவல் கொள்கிறேன் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
புத்தாண்டு நாள் திருப்பலியை நிறைவு செய்த பின், புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகள் மற்றும் உல்லாசப் பயணிகளுக்கு நண்பகல் மூவேளை ஜெப உரையும் வழங்கிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
ஒளியும் வெப்பமும் எவ்வாறு உலகிற்கு ஆசீராக உள்ளதோ அவ்வாறே இறைவனின் ஒளியும் மனித குலத்திற்கு உள்ளது. முதலில் அன்னைமரிக்கும், யோசேப்புக்கும், சில இடையர்களுக்கும் பெத்லகேமில் தோன்றிய இந்த ஒளி, பின்னர், சூரியன் உதித்து மேலெழும்பி வருவதுபோல் உலகம் முழுவதும் பரவியது.
புனித பூமியில் மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும் அமைதியின் நற்செய்தியை வழங்கினார் இயேசு. ' உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக! '  என்று அன்று வானதூதர்கள் பாடியது இன்றும் பேச்சுவர்ர்த்தைகளை கட்டியெழுப்பவும், புரிந்துகொள்ளுதலையும் ஒப்புரவையும் ஊக்குவிக்கவும் தேவைப்படும் அன்பின் நடவடிக்கைகளுக்கான நாதமாக உள்ளது. இதனாலேயே, இயேசு பிறப்பின் எட்டு நாட்களுக்குப்பின் நாம் உலக அமைதி தினத்தைச் சிறப்பிக்கின்றோம்.
இவ்வுலகம் தரமுடியாத அமைதியைத் தரவந்தார் குழந்தை இயேசு. அவரே பகைமைகளின் சுவரைத் தகர்த்தெறிந்தார். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர் என, தன் மலைப்பொழிவில் அறிவித்தவர் அவரே.
அமைதி ஏற்படுத்துவோர் யார்? தீமையை நன்மையால் வெல்வோர், உண்மையின் சக்தியுடனும், செபம் மற்றும் மன்னிப்பு எனும் ஆயதங்களுடனும், நேர்மையான செயல்பாடுகளின் வழியாகவும், அறிவியல் ஆய்வுகள் மூலமான வாழ்வின் பணிகளுடனும், கருணை நடவடிக்கைகள் மூலமும் செயலாற்றுவோரே அவர்கள். அமைதியான வழியில் ஆரவாரமின்றி மனித குல முன்னேற்றத்திற்கு பணியாற்றுவோரே அவர்கள்.
இந்த புதிய ஆண்டு அனைத்து மக்களுக்கும் குடும்பங்களுக்கும் நாடுகளுக்கும் உலகம் முழுமைக்கும் அமைதியின் பாதையாக இருக்க வேண்டுமென உதவுமாறு அனனை மரியின் பரிந்துரையை வேண்டுகிறேன் எனக்கூறி தன் மூவேளை செப உரையை நிறைவு செய்த திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.
இதற்கிடையே, இணையதளத்தின் டுவிட்டர் பக்கத்திலும், இவ்வாண்டின் முதல் நாளான செவ்வாயன்று, ஏழு மொழிகளில் 'இந்த புத்தாண்டில் இறைவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதித்து காப்பாராக' என்ற வாழ்த்தையும் வெளியிட்டுள்ளார் பாப்பிறை.

3.  திருத்தந்தை - நன்மையே உறுதியாக வெல்லும் என்பதைச் சொல்வதே நம்பிக்கை ஆண்டில் நமது முக்கியப் பணி

சன.01,2013. உலகில் நன்மை இன்னும் அதிகமாய் உள்ளது, நன்மையே உறுதியாக வெல்லும் என்பதைச் சொல்வதே நம்பிக்கை ஆண்டில் நமது முக்கியப் பணி என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஒவ்வொரு ஆண்டின் இறுதி நாள் மாலையில், அவ்வாண்டில் இறைவன் செய்த நன்மைகளுக்கு நன்றி கூறும் Te Deum நன்றி வழிபாட்டை புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருத்தந்தை நிறைவேற்றுவது வழக்கம்.
2012ம் ஆண்டின் இறுதிநாளான இத்திங்கள் மாலை ஐந்துமணிக்கு திருத்தந்தை நிகழ்த்திய நன்றி வழிபாட்டில் மறையுரை ஆற்றியத் திருத்தந்தை, உலகில் நன்மைகள் பெருமளவில் நிகழ்ந்தாலும், தீய நிகழ்வுகளே ஊடகங்கள் வழியே நம் கவனத்தை அதிகம் கவர்கின்றன என்று கூறினார்.
செய்திகள் என்ற பெயரில் வன்முறைகளே நம்மை வந்தடைந்தாலும், நன்மையையும், அன்புச் சேவைகளும் இவ்வுலகில் பெருமளவில் பரவிக் கிடக்கின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள அமைதியும், தியானமும் நமக்குப் பெரும் உதவியாக இருக்கும் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
சுயநலத்தையும், சந்தேகத்திற்குரிய நன்னெறி கொள்கைகளையும் பரப்பி வரும் உலகில் இளையோர் உண்மையைத் தேடுகின்றனர் என்பதை நாம் ஒவ்வொரு ஆண்டும் கண்டு வருகிறோம் என்பதை வலியுறுத்தியத் திருத்தந்தை, வருங்கால இளையோரை உருவாக்குவதில் பெற்றோர் வகிக்கும் முக்கியமான பொறுப்பையும் சுட்டிக்காட்டினார்.
திருத்தந்தையின் மறையுரைக்குப் பின், இறைவனுக்கு நன்றி கூறும் Te Deum பாடல் பாடப்பட்டது. வழிபாட்டின் இறுதியில், திருத்தந்தை, பேராலயத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்குத் திருநற்கருணை ஆசீர் வழங்கினார்.


No comments:

Post a Comment

Pope prays for global peace and for all victims of religious persecution

  Pope prays for global peace and for all victims of religious persecution Pope Francis calls for peace in conflict zones, solidarity with t...