Tuesday, 11 September 2012

Catholic News in Tamil - 08/09/12


1. ஹசாரிபாக் மறைமாவட்டத்திற்குப் புதிய ஆயர்

2.  23வது அனைத்துலக மரியியல் மாநாட்டுப் பிரதிநிதிகளுக்குத் திருத்தந்தை உரை

3. திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம் நம்பிக்கை நிறைந்த ஒரு செயல்

4. திருத்தந்தையின் திருப்பயணத்திற்காக லெபனன் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் இணைந்து செபம்

5. கஜகஸ்தானில் புதிய பாத்திமா அன்னைமரி ஆலயம்

6. ஆப்ரிக்கத் தெருச்சிறார்/பெண்கள் குறித்த திருப்பீடக் கருத்தரங்கு

7. தலத்திருஅவை ஆதரவு பெற்ற மிசோராம் மக்கள் கழகம் நேர்மையான தேர்தல் ஒப்பந்தத்தில் கையொப்பம்

8. அனைத்துலக எழுத்தறிவு தினம் செப்டம்பர் 08

9. ஆப்கானிஸ்தானில் 5 வயதுக்குட்பட்ட ஏறக்குறைய பத்து இலட்சம் சிறார் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிப்பு

------------------------------------------------------------------------------------------------------

1. ஹசாரிபாக் மறைமாவட்டத்திற்குப் புதிய ஆயர்

செப்.08,2012. இந்தியாவின் ஹசாரிபாக் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அருள்பணி Jojo Anand அவர்களை இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஹசாரிபாக் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிய இயேசு சபை ஆயர் Charles Soreng அவர்களின் பணி ஓய்வை ஏற்றுக் கொண்ட திருத்தந்தை, Simdega மறைமாவட்டத்தின் மறைபரப்புப் பணி மையத்தின் இயக்குனர் அருள்பணி Jojo Anand, ஹசாரிபாக் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமித்துள்ளார்.
1959ம் ஆண்டு மே 17ம் தேதி Simdega மறைமாவட்டத்தின் Minjiutgarha-Kutungia என்ற ஊரில் பிறந்த புதிய ஆயர் ஆனந்த், 1992ம் ஆண்டில் குருவானார். 2005ம் ஆண்டில் உரோம் சலேசியன் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் மறைக்கல்வியியலில் முதுகலைப்பட்டம் பெற்ற இவர், அவ்வாண்டிலிருந்து Simdega மறைமாவட்ட குருகுல முதல்வராகவும் பணியாற்றினார். அத்துடன், மறைபரப்புப்பணி மையத்தின் இயக்குனராக இருந்து கொண்டு அம்மறைமாவட்ட குருத்துவ மாணவர்களையும் வழிநடத்தி வந்தார்.

2.  23வது அனைத்துலக மரியியல் மாநாட்டுப் பிரதிநிதிகளுக்குத் திருத்தந்தை உரை

செப்.08,2012. வருகிற அக்டோபரில் தொடங்கவிருக்கும் விசுவாச ஆண்டு அனைத்துக் கிறிஸ்தவ விசுவாசிகளுக்கும் உண்மையான அருளின் ஆண்டாக அமையவும், இதில் அன்னைமரியாவின் விசுவாசம், முதிர்ச்சியடைந்த கிறிஸ்தவ வாழ்வுக்கு எடுத்துக்காட்டாய் இருக்கவும் மரியியல் வல்லுனர்கள் உதவுமாறு கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இறைவனின் பிள்ளைகள் என்ற தங்களது அழைப்பை மிகுந்த அர்ப்பணத்தோடும், ஆவலோடும், கொள்கைப்பிடிப்போடும் வாழ்வதற்கு கிறிஸ்தவர்கள் அன்னமரியை கலங்கரை விளக்காக நோக்குவதற்கு மரியியல் வல்லுனர்கள் உதவுமாறும் திருத்தந்தை பரிந்துரைத்தார்.
23வது அனைத்துலக மரியியல் மாநாட்டில் கலந்து கொண்ட ஏறக்குறைய 350 பிரதிநிதிகளை காஸ்தெல் கந்தோல்ஃபோவில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, 1962ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதியன்று அருளாளர் பாப்பிறை 23ம் அருளப்பர், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தைத் தொடங்கி வைத்து ஆற்றிய உரையில் இறைவனின் தாய் மரியா பற்றிக் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டினார்.
431ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதியன்று, எபேசு பொதுச்சங்கத்தில் மரியா, இறைவனின் தாய் என்று அறிவிக்கப்பட்டதையும் எடுத்துச் சொன்ன திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டதன் 50ம் ஆண்டைச் சிறப்பிக்கவிருக்கும் இவ்வேளையில், அன்னை மரியா நமக்கு விசுவாசத்தின் எடுத்துக்காட்டாய் இருக்கிறார் என்றும் கூறினார்.

3. திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம் நம்பிக்கை நிறைந்த ஒரு செயல்

செப்.08,2012. திருத்தந்தையின் லெபனன் நாட்டுத் திருப்பயணம் மிகுந்த துணிச்சல் மற்றும் நம்பிக்கை நிறைந்த ஒரு செயல் என்று பன்னாட்டு அளவில் கூறப்பட்டு வருகின்றது என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
வத்திக்கான் வானொலிக்கும் வத்திக்கான் தொலைக்காட்சிக்கும் அளித்த வார நிகழ்ச்சியில் இவ்வாறு கூறியுள்ள அருள்தந்தை லொம்பார்தி, கத்தோலிக்க சமுதாயம் அதிகமாக இருக்கின்ற லெபனன் நாட்டுக்குத் திருத்தந்தை மேற்கொள்ளவுள்ள இத்திருப்பயணம், சிரியாவில் சண்டை தொடங்குவதற்கு முன்னரே தீர்மானிக்கப்பட்டது என்று கூறினார்.
சிரியாவில் இடம்பெறும் சண்டை திருத்தந்தையின் திருப்பயணத்தை நேரிடையாகப் பாதிக்காது எனினும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு ஆயர் மாமன்றத்தில் சொல்லப்பட்ட பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படாமலே இருக்கின்றன என்று கூறினார் அருள்தந்தை லொம்பார்தி.
திருத்தந்தையின் லெபனன் நாட்டுக்கானத் திருப்பயணம் இம்மாதம் 14 முதல் 16 வரை நடைபெறவிருக்கின்றது.

4. திருத்தந்தையின் திருப்பயணத்திற்காக லெபனன் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் இணைந்து செபம்

செப்.08,2012. லெபனன் நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தையின் திருப்பயணம் வெற்றிகரமாக அமைவதற்கு இறைவன் மற்றும் அன்னைமரியாவின் பாதுகாப்பை இறைஞ்சி அந்நாட்டுக் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் திருவிழிப்பு செபம் ஒன்றை நடத்தவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற வெள்ளிக்கிழமையன்று திருத்தந்தை லெபனன் நாட்டுக்குச் செல்லவிருப்பதையொட்டி, வருகிற புதன்கிழமையன்று, தலைநகர் பெய்ரூட்டின் நான்கு இடங்களிலிருந்து மெழுகுதிரிகள் மற்றும் லெபனன் கொடிகளுடன் ஊர்வலமாகப் புறப்படும் இளையோர் அந்நகரின் மரியா பூங்காவில் இரவு 8 மணியளவில் ஒன்று சேருவார்கள். பின்னர் செபங்கள் ஆரம்பிக்கப்படும் என்று அருள்பணி Antoine Daou  கூறினார்.
இந்தச் செப வழிபாடு குறித்துப் பேசிய லெபனன் ஆயர் பேரவையின் பல்சமய உரையாடல் பணிக்குழுச் செயலர் அருள்பணி Daou, இந்த நாள் தேசிய விடுமுறை நாள் என்றும், லெபனனில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே நல்லிணக்கம் இருக்கின்றது என்பதை இச்செப நிகழ்வு மூலம் உலகுக்கு உணர்த்த விரும்புவதாகவும் கூறினார்.
அமைதி, அன்பு, சுதந்திரம், பாதுகாப்பு என்ற தலைப்பில் நடைபெறவுள்ள இச்செப நிகழ்வில் அந்நாட்டின் சமயக் குழுக்களின் பிரதிநிதிகளும் அதிகாரிகளும், இன்னும் ஆயிரக்கணக்கான விசுவாசிகளும் கலந்து கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.

5. கஜகஸ்தானில் புதிய பாத்திமா அன்னைமரி ஆலயம்

செப்.08,2012. மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் புதிய பாத்திமா அன்னைமரி ஆலயம் ஒன்றைத் இஞ்ஞாயிறன்று திருநிலைப்படுத்துகிறார் கர்தினால் ஆஞ்சலோ சொதானோ.
திருத்தந்தையின் பிரதிநிதியாக கஜகஸ்தான் குடியரசில் இப்புதன் முதல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுவரும் கர்தினால்கள் அவைத் தலைவரான கர்தினால் சொதானோ, அந்நாட்டின் Karaganda நகரத்தில் எழுப்பப்பட்டுள்ள பாத்திமா அன்னைமரி ஆலயத்தைத் திருநிலைப்படுத்தவுள்ளார்.
முன்னாள் சோவியத் யூனியன் ஆட்சியில் Gulags எனப்படும் கட்டாயவேலை முகாம்கள் பல, இந்த Karaganda நகரத்தில் இருந்தன என்று செய்திகள் கூறுகின்றன.

6. ஆப்ரிக்கத் தெருச்சிறார்/பெண்கள் குறித்த திருப்பீடக் கருத்தரங்கு

செப்.08,2012. ஆப்ரிக்கக் குடும்பங்களின் மாண்பு மற்றும் தனிப்பட்ட குடும்பங்களின் பாதுகாப்பு குறித்து, டான்சானிய நாட்டு Dar-es-Salaamல் வரும் வாரத்தில் தொடங்கவுள்ள கருத்தரங்கில் கவனம் செலுத்தப்படும் என்று கர்தினால் Antonio Maria Vegliò கூறினார்.
ஆப்ரிக்கத் தெருச்சிறார் மற்றும் ஆப்ரிக்கப் பெண்கள் குறித்து வருகிற செவ்வாய்க்கிழமை(செப்.11-15,2012) தொடங்கவிருக்கும் ஐந்து நாள் கருத்தரங்கு குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த, திருப்பீட குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்வோர் அவைத் தலைவர் கர்தினால் Vegliò இவ்வாறு கூறினார்.
2008ம் ஆண்டில் இலத்தீன் அமெரிக்காவிலும், 2009ம் ஆண்டில் ஐரோப்பாவிலும், 2010ம் ஆண்டில் ஆசியா மற்றும் ஓசியானியாவிலும் இத்தகைய கருத்தரங்கை நடத்தியிருப்பதாகத் தெரிவித்த கர்தினால் Vegliò, இவ்வாண்டு ஆப்ரிக்காவில் நடத்தவிருப்பதாகக் கூறினார்.
இந்தக் கருத்தரங்கில் 31 ஆப்ரிக்க நாடுகளிலிருந்து 15 ஆயர்கள் உட்பட 85 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று கூறினார் கர்தினால் Vegliò.
இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து சென்றார்(லூக்.24:15)”  என்ற தலைப்பில் இந்தக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

7. தலத்திருஅவை ஆதரவு பெற்ற மிசோராம் மக்கள் கழகம் நேர்மையான தேர்தல் ஒப்பந்தத்தில் கையொப்பம்

செப்.08,2012. இந்தியாவின் மிசோராம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தல்கள், நேர்மையான வழிகளில் நடப்பதற்கு உறுதியளிக்கும் ஒப்பந்தத்தில் தலத்திருஅவை ஆதரவு பெற்ற மிசோராம் மக்கள் கழகம் கையெழுத்திட்டுள்ளது.
மிசோராம் மாநிலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்கள், சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதற்கு உறுதியளிக்கும் விதத்தில், அம்மாநிலத்தின் பெரிய கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது மிசோராம் மக்கள் கழகம்.
இந்த ஒப்பந்தத்தில் ஏமாற்று வேலைகளைத் தவிர்ப்பது உட்பட 27 படிநிலைகள் கொண்ட தேர்தல் வழிமுறைகள் குறிக்கப்பட்டுள்ளன என்று யூக்கா செய்தி நிறுவனம் அறிவித்தது.
வேட்பாளர்களை ஆதரிக்கும் தொண்டர்கள், அக்கட்சி அடையாளங்களைக் கொண்ட தொப்பிகள், சட்டைகளில் அணியும் சின்னங்கள், பனியன்கள் போன்றவற்றை அணிவதில்லை என்றும், தேர்தல் பிரச்சாரத்தின்போது கட்சிக் கொடிகளைப் பயன்படுத்துவதில்லை என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிக்கப்பட்டுள்ளதாக அச்செய்தி நிறுவனம் கூறியது.

8. அனைத்துலக எழுத்தறிவு தினம் செப்டம்பர் 08

செப்.08,2012. நாடுகளில் அமைதி மற்றும் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு எழுத்தறிவு மிகவும் முக்கியம் என்பதால், சிறாரும், இளையோரும், வயது வந்தோரும் எழுத வாசிக்கக் கற்றுக் கொள்வதன் மூலம் தங்கள் வாழ்வை மாற்றிக் கொள்வதற்கு அதிக முயற்சிகள் எடுக்கப்படுமாறு ஐ.நா.அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
எழுத்தறிவுக்கும் அமைதிக்கும் இடையே இருக்கும் அடிப்படை உறவை வலியுறுத்தி இச்சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்ட உலக எழுத்தறிவு தினத்தையொட்டி அறிக்கை வெளியிட்ட ஐ.நா.வின் கல்வி, கலாச்சாரம் மற்றும் அறிவியல் நிறுவனமான யுனெஸ்கோ இயக்குனர் Irina Bokova, சிறார் மற்றும் வயது வந்தோர் எழுத்தறிவு பெறுவதற்கு இருக்கும் வாய்ப்புக்களைத் தடைசெய்யும் சண்டைகளை நாம் அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.
எழுத்தறிவு பத்தாண்டுகள் என்ற தலைப்பில் எல்லாரும் எழுத்தறிவு பெறுவதற்கு 2002ம் ஆண்டிலிருந்து எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளின் பலனாக, உலக அளவில் மிகுந்த பலன் கிடைத்திருந்தாலும், ஏறத்தாழ 77 கோடியே 50 இலட்சம் பேர் இன்னும் எழுத்தறிவற்றவர்கள் என்றும், இவர்களில் 85 விழுக்காட்டினர் 41 நாடுகளில் வாழ்கின்றனர் என யுனெஸ்கோ அதிகாரிகள் கூறுகின்றனர்.
2011ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் 74 விழுக்காடாகும். .

9. ஆப்கானிஸ்தானில் 5 வயதுக்குட்பட்ட ஏறக்குறைய பத்து இலட்சம் சிறார் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிப்பு

செப்.08,2012. ஆப்கானிஸ்தானில் பன்னாட்டு அளவில் பெருமளவில் மனிதாபிமான உதவிகள் இடம்பெற்று வந்தாலும் அந்நாட்டில் 5 வயதுக்குட்பட்ட ஏறக்குறைய பத்து இலட்சம் சிறார் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று AP செய்தி நிறுவனம் கூறியது.
MICS என்ற அமைப்பு எடுத்த கணக்கெடுப்பின்படி ஆப்கானிஸ்தானில் 29.5 விழுக்காட்டுச் சிறார் ஊட்டச்சத்துக் குறைவாலும், 30 விழுக்காட்டுச் சிறார் பசியின் கொடுமையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிகிறது.
ஆப்கானிஸ்தானில் போதுமான உணவு இருக்கின்றபோதிலும், ஊட்டச்சத்துக் குறித்த அறிவின்மையும், வறுமையும், தாய்ப்பால் கொடுப்பது குறித்த தவறான எண்ணமுமே இதற்கு காரணங்கள் என்றும் அவ்வமைப்பு கூறியது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...