Tuesday, 11 September 2012

Catholic News in Tamil - 07/09/12

1. திருத்தந்தை : கிறிஸ்துவில் வேரூன்றிய புனித வாழ்வும், விவேகமும் தொலைநோக்கும் கொண்ட மேய்ப்பர்கள் மறைப்பணிக்குத் தேவை

2. மத்திய கிழக்கு நாடுகளில் மறைந்து கொண்டிருக்கும் திருஅவைகளைக் காப்பாற்றுவதற்குத் திருத்தந்தையிடம் வேண்டுகோள்

3. மாரனைட் ரீதி முதுபெரும் தலைவர் : சிரியாவில் கிறிஸ்தவர்கள் உறுதியானதன்மையை விரும்புகின்றனர்

4. திருத்த‌ந்தையின் பொது நிக‌ழ்ச்சிக‌ளை உட‌னுக்குட‌ன் பார்க்க, கேட்க, வாசிக்க உதவும் புது தொழில்நுட்பம்

5. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நிறுத்தப்படுமாறு ஆயர்கள் வேண்டுகோள்

6. மன்னார் மறைமாவட்ட மக்கள் பல கூறுகளில் நல்லதொரு வாழ்க்கையை எதிர்நோக்குகின்றனர் மன்னார் ஆயர்

7. பாகிஸ்தான் சிறுமி Rimsha Masih பிணையலில் விடுதலை

8. அதிகப் பாதுகாப்பான உலகம் அமைவதற்கு அணுப் பரிசோதனைகள் நிறுத்தப்பட வேண்டும் ஐ.நா.

9. உலகப் பொருளாதார அறிக்கையில் சுவிட்சர்லாந்து முதலிடம்


------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : கிறிஸ்துவில் வேரூன்றிய புனித வாழ்வும், விவேகமும் தொலைநோக்கும் கொண்ட மேய்ப்பர்கள் மறைப்பணிக்குத் தேவை

செப்.07,2012. கிறிஸ்துவில் வேரூன்றிய புனித வாழ்வும், விவேகமும், தொலைநோக்குப் பார்வையும் கொண்டு, நற்செய்திக்குத் தாராளமாகத் தங்களையே வழங்க முன்வந்து, அனைத்துத் திருஅவைகளையும் தங்கள் இதயங்களில் ஏற்கும் மேய்ப்பர்கள் மறைப்பணிக்குத் தேவை என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஆப்ரிக்கா, ஆசியா, இலத்தீன் அமெரிக்கா, ஓசியானியா ஆகிய பகுதிகளில் அண்மைக் காலத்தில் ஆயர்களாக நியமனம் பெற்ற ஏறக்குறைய நூறு ஆயர்களை காஸ்தெல் கந்தோல்ஃபோவில் இவ்வெள்ளிக்கிழமை சந்தித்த திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
உரோமையில் திருப்பீட மறைப்பரப்புப் பேராயம் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் இந்த ஆயர்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை, இந்த ஆயர்கள் பணிசெய்யும் நாடுகளில் வளர்ந்து வரும் பல இளம் திருஅவைகள், வருங்கால உலகளாவியத் திருஅவையின் நம்பிக்கையின் ஓர் அடையாளமாக இருக்கின்றன என்று கூறினார்.
மறைப்பரப்புப் பணியிலிருந்து பிறக்கும் திருஅவை, அப்பணியோடு வளர்கிறது என்றும் கூறிய அவர், விசுவாசத்தைச் சரியான முறையில் பண்பாட்டுமயமாக்கி அறிவிப்பதன் மூலம், மக்களின் கலாச்சாரத்தில் நற்செய்தியை வேரூன்றச் செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.
ஆயர்கள் தங்களது குருக்கள்மீது சிறப்புக் கவனம் செலுத்தி, தங்களது எடுத்துக்காட்டான வாழ்வு மூலம் அவர்களை வழிநடத்தி, தந்தைக்குரிய அன்புடன் அவர்களை வரவேற்று அவர்களோடு ஒன்றித்து வாழுமாறும் கேட்டுக் கொண்ட திருத்தந்தை, குருக்களுக்குத் தொடர்ப் பயிற்சியளித்து அவர்களது வாழ்வில் திருநற்கருணை எப்போதும் மையமாக விளங்குவதற்கு ஆவன செய்யுமாறும் பரிந்துரைத்தார்.
இந்த ஆயர்களின் தலத்திருஅவைகளில் காணப்படும் சமூக உறுதியற்றதன்மை மக்களின் அன்றாட வாழ்க்கையில் கடும் பாதிப்பை ஏறபடுத்தி வருகின்றது என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இயற்கைப் பேரிடர்கள், மதத் தீவிரவாதம், மதச் சகிப்பற்றதன்மை, மதப் பாகுபாடு, இனச்சண்டை போன்றவற்றாலும் இந்தத் திருஅவைகள் பாதிக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டார்.
இறைவார்த்தைப் பணி, மக்கள் மத்தியில் ஒப்புரவையும் ஒன்றிப்பையும் வளர்ப்பதாக இருக்குமாறு ஆயர்களிடம் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

2. மத்திய கிழக்கு நாடுகளில் மறைந்து கொண்டிருக்கும் திருஅவைகளைக் காப்பாற்றுவதற்குத் திருத்தந்தையிடம் வேண்டுகோள்
செப்.07,2012. மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கிறிஸ்தவர்கள் வெளியேறுவதைத் தடுப்பதற்குத் திருத்தந்தை உதவுமாறு அவரின் லெபனன் திருப்பயணத்தின்போது கோரிக்கை முன்வைக்கப்படும் என்று ஈராக்கின் கிர்குக் பேராயர் லூயிஸ் சாக்கோ கூறினார்.
இம்மாதம் 14 முதல் 16 வரை லெபனன் நாட்டில் திருப்பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தையிடம் மத்திய கிழக்கு நாடுகளின் திருஅவைத் தலைவர்கள் இந்த விண்ணப்பத்தை முன்வைக்கவிருப்பதாக மேலும் கூறினார் பேராயர் சாக்கோ.
மத்திய கிழக்கு நாடுகளில் மக்களாட்சி மற்றும் சுதந்திரம் குறித்து அரசியல் அளவிலான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவது ஒருபுறமிருக்க,  மறுபுறம் தீவிரவாதமும், பிரிவினைவாதமும் வளர்ந்து வருகின்றதெனவும் அவர் கூறினார்.
மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து கிறிஸ்தவர்கள் வெளியேறுவது குறைவதாகத் தெரியவில்லை எனவும் பேராயர் சாக்கோ கவலை தெரிவித்தார்.

3. மாரனைட் ரீதி முதுபெரும் தலைவர் : சிரியாவில் கிறிஸ்தவர்கள் உறுதியானதன்மையை விரும்புகின்றனர்

செப்.07,2012. சிரியாவில் வாழும் கிறிஸ்தவர்கள் அந்நாட்டு அரசுத்தலைவர் Bashar al-Assadவுக்கு ஆதரவளிக்கவில்லை, ஆனால் அவர்கள் நாட்டில் உறுதியானதன்மையை விரும்புகின்றனர் என்று  லெபனன் மாரனைட்ரீதி கத்தோலிக்க முதுபெரும் தலைவர் Bechara Raï கூறினார்.
சிரியா நாட்டுக் கிறிஸ்தவர்கள் அரசு சார்பில் இருந்து அரசுத்தலைவர் Assadவுக்கு ஆதரவளிக்கிறார்கள் என்ற மேற்கத்திய நாடுகளின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த முதுபெரும் தலைவர் Raï, கிறிஸ்தவர்கள் அரசுத்தலைவர் Assadவுக்குச் சார்பாக இல்லை, மாறாக நாட்டுக்குச் சார்பாக இருக்கிறார்கள் என்று கூறினார்.
மத்திய கிழக்கிலுள்ள மிகப் பழமையான கிறிஸ்தவச் சமூகங்களில் சிரியாவிலுள்ள கிறிஸ்தவச் சமூகமும் ஒன்று. சிரியாவின் 2 கோடியே 20 இலட்சம் மக்களில் ஏறக்குறைய 5 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். இவர்கள் அண்மை ஆண்டுகளாக ஓரளவு சமய சுதந்திரத்தைக் குறிப்பாக அரசுத்தலைவர் Assadல் ஊக்குவிக்கப்பட்ட வழிபாட்டுச் சுதந்திரத்தை அனுபவித்து வருகின்றனர் என்று  செய்திகள் கூறுகின்றன.
மேலும், சிரியாவில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் கடும் வன்முறைகளால் ஏறத்தாழ 13 இலட்சம் சிறார் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யூனிசெப் நிறுவனம் கூறுகிறது.

4. திருத்த‌ந்தையின் பொது நிக‌ழ்ச்சிக‌ளை உட‌னுக்குட‌ன் பார்க்க, கேட்க, வாசிக்க உதவும் புது தொழில்நுட்பம்

செப்.07,2012. திருத்த‌ந்தை க‌ல‌ந்துகொள்ளும் பொது நிக‌ழ்ச்சிக‌ளை உட‌னுக்குட‌ன் பார்ப்ப‌த‌ற்கும், கேட்ப‌த‌ற்கும், அது குறித்து வாசிப்ப‌த‌ற்கும் நேய‌ர்க‌ளுக்கு உத‌வும் நோக்கில் அன்ட்ராய்டு தொழில்நுட்ப‌த்தின்கீழ் ஒரு புது பயன்பாட்டுமுறையை அறிமுக‌ப்ப‌டுத்தியுள்ள‌து வ‌த்திக்கான் வானொலி.
திருத்த‌ந்தையின் தின‌ச‌ரி பொதுச‌ந்திப்புக‌ள் உட்ப‌ட‌ திரு அவையின் ப‌ல்வேறு ந‌ட‌வ‌டிக்கைக‌ளையும் ஒரே நேர‌த்தில் ஒரே வ‌லைத்த‌ள‌ நுட்ப‌ம் வ‌ழி அறிய‌ உத‌வும் இது, த‌ற்போது ஆங்கில‌ம், இத்தாலிய‌ம், இஸ்பானிய‌ம் ம‌ற்றும் ஃப்ரெஞ்ச் மொழிக‌ளில், திருத்த‌ந்தையின் தின‌ச‌ரி திட்ட‌ங்க‌ளை விளக்கமாக, பல்வேறு தொடர்புகளுடன் வ‌ழங்குவ‌தாக‌ இருக்கும். ப‌டிப்ப‌டியாக‌, வ‌த்திக்கான் வானொலியின் ஏனைய 39 மொழிக‌ளிலும் இது ப‌ய‌ன்பாட்டுக்கு வ‌ரும் என‌வும் அறிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.
வ‌த்திக்கான் தொலைக்காட்சி மைய‌த்துட‌ன் இணைந்து ஆற்ற‌ப்ப‌டும் இச்சேவையில், திருத்த‌ந்தையின் பொதுச‌ந்திப்புக‌ள் தொட‌ர்புடைய‌ ஒலி ஒளி காட்சிக‌ளும் இட‌ம்பெறும். அன்ட்ராய்டுக்கென‌ வ‌த்திக்கான் வானொலி த‌யாரித்துள்ள‌ இந்த‌ தொழில்நுட்ப‌த்தை நேய‌ர்க‌ள் http://rv.va/android என்ற‌ வ‌லைத்த‌ளத்திற்குச் சென்று இல‌வ‌ச‌மாக‌ ப‌திவிற‌க்க‌ம் செய்து ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்ள‌லாம்.


5. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நிறுத்தப்படுமாறு ஆயர்கள் வேண்டுகோள்

செப்.07,2012. இலங்கையில் பல்வேறு வடிவங்களில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரானத் தங்களது கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் அளவுக்கு, ஏன் சில சமயங்களில் மரணத்தில் முடியும் அளவுக்குச் சிறைக்கைதிகளுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறுவதையும், விவசாயிகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், பதிலடித் தாக்குதல்கள், கல்வித்துறையில் சீர்திருத்தம் கேட்பவர்க்கெதிரான அடக்குமுறைகள் என இலங்கையில் இடம்பெறும் பல்வேறு மனித உரிமை மீறல்களைக் குறிப்பிட்டுள்ளனர் ஆயர்கள்.
தற்போது நாடு எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு அரசியல்ரீதியாகத் தீர்வு காணப்படுமாறு தங்கள் அறிக்கையில் வலியுறுத்தியுள்ள இலங்கை ஆயர்கள்,  அனைத்துக் குடிமக்களின் மனித உரிமைகள் உறுதி செய்யப்படுமாறும் கேட்டுள்ளனர்.
கடந்த காலத்தில் நாடு எதிர்கொண்டுள்ள அனைத்தையும் நோக்கும்போது தற்போது நாட்டுக்கு அமைதி தேவைப்படுகின்றது என்றும், அரசியல் தலைவர்கள் இதற்காக உழைக்குமாறும் இலங்கை ஆயர்களின் அறிக்கை கூறுகின்றது.


6. மன்னார் மறைமாவட்ட மக்கள் பல கூறுகளில் நல்லதொரு வாழ்க்கையை எதிர்நோக்குகின்றனர் மன்னார் ஆயர்

செப்.07,2012. இலங்கையில் போர் முடிந்த காலத்திற்குப் பின்னர்  மன்னார் மறைமாவட்ட மக்கள் பல கூறுகளில் நல்லதொரு வாழ்க்கையை எதிர்நோக்குகின்றனர் என்று அம்மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப், அரசுத்தலைவர் மகிந்த இராஜபக்ஷேவுக்கு எழுதியுள்ள திறந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
நீதியுடன்கூடிய நிலையான அமைதிக்கு இட்டுச்செல்லும் ஒப்புரவுப்  பாதையில் பல எதிர்பார்ப்புக்கள் இருக்கின்றன என்றுரைக்கும் ஆயரின் கடிதம், பிறமதத் தலைவர்கள், பொது மக்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து நிலையான அமைதியையும் ஒப்புரவையும் அடைவதற்கும், அதில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் களைவதற்கும் ஆயர்கள் முயற்சித்து வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
மக்களின் மனங்களை வெல்வதற்குக் கடும் மனித மற்றும் மனிதாபிமானப் பிரச்சனைகளைத் தாங்கள் தொடர்ந்து எதிர்கொள்வதாகவும் மன்னார் ஆயரின் கடிதம் கூறுகின்றது. 


7. பாகிஸ்தான் சிறுமி Rimsha Masih பிணையலில் விடுதலை

செப்.07,2012. பாகிஸ்தானில் தேவநிந்தனைக் குற்றச்சாட்டின்பேரில் அண்மை வாரங்களாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மனநலம் குன்றிய 14 வயதுச் சிறுமி Rimsha Masih பிணையலில் விடுதலை செய்யப்படுமாறு இஸ்லாமாபாத் நீதிமன்றம் ஒன்று இவ்வெள்ளியன்று ஆணை பிறப்பித்துள்ளது.
இத்தகவலை அறிவித்த தேசிய நல்லிணக்கத்துக்கான பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் Paul Bhatti, இச்செய்தி அனைத்துப் பாகிஸ்தான் சமுதாயத்துக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் கொடுத்திருப்பதாக அறிவித்தார்.
சிறுமி Rimsha Masih விவகாரத்தில் நீதி செயல்படுத்தப்பட்டுள்ளது என்று சொல்லி  பாகிஸ்தான் கிறிஸ்தவரும் கிறிஸ்தவரல்லாதவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் எனக் கூறியுள்ள கத்தோலிக்க அரசியல்வாதி Paul Bhatti, ரிம்ஷா விவகாரத்தில் அந்நாட்டின் காவல்துறையும் அரசும் ஆற்றிய பணியைப் பாராட்டியுள்ளார். 
மேலும், சிறுமி ரிம்ஷாமீது தேவநிந்தனைக் குற்றம் சாட்டிய இசுலாம் மதகுரு காலித் சிஷ்டி அதே குற்றச்சாட்டின்பேரில் இம்மாதம் முதல் தேதி கைது செய்யப்பட்டார். இவருக்குத் தற்போது ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
காலித் சிஷ்டி என்ற இந்த மதகுரு, அந்தச் சிறுமியிடமிருந்து எடுக்கப்பட்ட ஒரு பையில் எரிந்த சில காகிதங்களுடன் குர்ஆனின் சில பக்கங்களையும் வைத்ததாக சாட்சி ஒருவர் நீதிபதியிடம் கூறியதைத் தொடர்ந்து இவர் கைது செய்யப்பட்டார்.


8. அதிகப் பாதுகாப்பான உலகம் அமைவதற்கு அணுப் பரிசோதனைகள் நிறுத்தப்பட வேண்டும் ஐ.நா.

செப்.07,2012. அதிகப் பாதுகாப்பான உலகத்தைப் பார்ப்பதற்கு அணுப் பரிசோதனைகள் நிறுத்தப்படுவது அவசியம் என, அணுப் பரிசோதனைகளுக்கு எதிரான மூன்றாவது அனைத்துலக நாளில் ஐ.நா.அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இந்த நாளையொட்டி ஒலி-ஒளிச் செய்தி வெளியிட்ட ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், அணுப் பரிசோதனைகள் மனித நலவாழ்வுக்கும் உலகின் நிலையான தன்மைக்கும் அச்சுறுத்தல் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து விதமான அணுப் பரிசோதனைகள் தடை ஒப்பந்தத்தில் 183 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இவற்றில் 157 நாடுகள் அதனை அமல்படுத்தியுள்ளன. ஆயினும் இந்த ஒப்பந்தம் உலக அளவில் அமலுக்கு வருவதற்கு இன்னும் இரு நாடுகளின் கையெழுத்து தேவைப்படுவதாக ஐ.நா.செய்திகள் கூறுகின்றன.
1991ம் ஆண்டிலிருந்து அணுப் பரிசோதனைகளுக்கு எதிரான அனைத்துலக நாள் ஆகஸ்ட் 29ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

9. உலகப் பொருளாதார அறிக்கையில் சுவிட்சர்லாந்து முதலிடம்

செப்.07,2012. உலகப் பொருளாதாரத்தில் சுவிட்சர்லாந்து முதலிடத்தையும், சிங்கப்பூர் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன என்று உலகப் பொருளாதார அமைப்பு வெளியிட்டுள்ள, உலகளாவிய போட்டித்திறன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஒரு நாட்டின் தனியார் மற்றும் அரச நிறுவனங்களின் உள்கட்டமைப்பு, நாட்டின் நலவாழ்வு, சந்தைத்திறன், தொழிழ்நுட்ப வளர்ச்சி, போட்டித்தன்மை போன்ற முக்கிய 12 பிரிவுகளின்கீழ் பொது மற்றும் தனியார்த் தரவுகளைப் பயன்படுத்திக் கணக்கிடப்பட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்படுகிறது.
இவ்வியாழனன்று வெளியிடப்பட்ட 2012-2013ம் ஆண்டிற்கான உலகளாவிய போட்டித்திறன் அறிக்கையின்படி, 144 உலகப் பொருளாதார நாடுகளின் தரவரிசைப் பட்டியலில், சுவிட்சர்லாந்து முன்னிலையில் உள்ளது. தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக சுவிட்சர்லாந்து இப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து வருகிறது எனத் தெரிய வந்துள்ளது.
புது வகையான கல்விமுறை, அதிக அளவிலான ஆராய்ச்சிகள் மற்றும் தனியார் துறைகள்-கல்வி இவற்றுக்கு இடையேயான வலுவான ஒத்துழைப்பு ஆகியவை சுவிட்சர்லாந்தில் மேலோங்கி இருப்பதே இதற்குக் காரணமாகவும் சொல்லப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தையடுத்து சிங்கப்பூர் இரண்டாவது இடத்தையும் ஃபின்லாந்து மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...