ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
இந்தியாவின் இளம் பொறியியலாளர் Vidyut Mohan அவர்களை, பூமிக்கோளத்தின் இளம் நாயகர்களில் ஒருவராக, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் அமைப்பான UNEP, டிசம்பர் 15, இச்செவ்வாயன்று அறிவித்துள்ளது.
அறிவியல், பொறியியல் ஆகிய துறைகளில், நீடித்து நிலைக்கும் முன்னேற்ற இலக்குகளை செயல்படுத்தும் ஏழு ஆர்வலர்களை உலகெங்கிலுமிருந்து அடையாளம் கண்டு, அவர்களுக்கு, ஐ.நா.வின் சுற்றுச்சூழல் அமைப்பு ஒவ்வோர் ஆண்டும் விருதுகள் வழங்கி வருகிறது.
2020ம் ஆண்டுக்குரிய விருதுகள் அறிவிக்கப்பட்ட வேளையில், இந்தியாவைச் சேர்ந்த வித்யுத் மோகன் அவர்களுடன், கென்யா, சீனா, கிரீஸ், பெரு, குவைத், அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஏழு இளையோர் இந்த விருதுக்கென தெரிவு செய்யப்பட்டனர் என்பதும் அறிவிக்கப்பட்டது.
காற்று மாசுப்பாட்டினால் துன்புறும் டில்லி மாநகரின் பிரச்சனைக்குத் தீர்வுகாணும் நோக்கத்துடன், இளம் பொறியியலாளர் வித்யுத் மோகன் அவர்கள் கண்டுபிடித்துள்ள ஓர் இயந்திரம், நிலத்திலிருந்து கிடைக்கும் கழிவுப்பொருள்களைக் கொண்டு விவசாயிகளுக்குத் தேவையான உரத்தையும், கூடுதல் எரிசக்தி தரும் நிலக்கரி போன்ற பொருள்களையும் உருவாக்குகிறது.
இதேபோல், கென்யாவில் வாழும் Nzambi Matee என்ற இளம் பெண் பொறியியலாளர், தான் செய்து வந்த வேலையைத் துறந்துவிட்டு, நகர்களில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு, பூமியில் பதிக்கக்கூடிய கற்களை உருவாக்கி வருகிறார்.
30 வயதுக்குட்பட்ட இந்த ஏழு இளம் நாயகர்கள் ஒவ்வொருவருக்கும் ஐ.நா. நிறுவனம் 10,000 டாலர்கள் பரிசாக வழங்கியுள்ளதோடு, சுற்றுச்சூழலை மேம்படுத்த அவர்கள் மேற்கொள்ளும் ஆய்வுகளில் கூடுதல் உதவிகள் செய்வதற்கும் முன்வந்துள்ளது.
No comments:
Post a Comment