Tuesday, 1 December 2020

இனவெறி என்பது, படைத்தவருக்கு எதிரான நிந்தனை

 கர்தினால் Gianfranco Ravasi


கர்தினால் இரவாசி : நாம் அனைவரும் ஒரே மனிதகுலமாக இருக்கையில், இனவெறி என்பது, மனித உறவுகளுக்கும், சமூக, மற்றும் ஆன்மீக நிலைகளுக்கும் எதிரானது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இன அடிப்படையிலான முற்சார்பு எண்ணங்களை எதிர்த்துப் போரிடுவதற்கு சிறந்தவழி, அடுத்தவரை நாடிச் செல்வதும், மனிதர்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை அங்கீகரித்து ஏற்பதுமாகும் என கூறினார் கர்தினால் Gianfranco Ravasi.

உரோம் நகரின் Lumsa பல்கலைக்கழகம், திருப்பீடக் கலாச்சார அவையின் பெண்களுக்கான பிரிவு, திருப்பீடத்திற்கான நாடுகளின் தூதரகங்கள் ஆகியவை இணைந்து, 'இனவெறியும், பெண்களும், கத்தோலிக்கத் திருஅவையும்' என்ற தலைப்பில் ஏற்பாடு செய்த, இணையவழி கருத்தரங்கில்  உரையாற்றியபோது, திருப்பீடக் கலாச்சார அவையின் தலைவர் கர்தினால் இரவாசி அவர்கள் இதனைக் குறிப்பிட்டார்.

மனிதவாழ்வின் புனிதத்தன்மையை பாதுகாக்கிறோம் எனக் கூறிக்கொண்டே, இனவெறியை ஏதாவது ஒருவகையில் ஏற்றுக்கொள்வது, சகித்துக்கொள்ளப்பட முடியாதது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் புதன் மறைக்கல்வியுரை ஒன்றில் கூறிய வார்த்தைகளுடன் தன் இணையவழி உரையைத் துவக்கிய கர்தினால் இரவாசி அவர்கள், நாம் அனைவரும் ஒரே மனிதகுலமாக இருக்கும்போது, இனவெறி என்பது, மனித உறவுகளுக்கும், சமூக, மற்றும் ஆன்மீக நிலைகளுக்கும் எதிரானது என்றார்.

இதே கருத்தரங்கில் இணைய வழி தொடர்புகொண்டு உரையாற்றிய, பாப்பிறை உர்பான் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், காங்கோ நாட்டவருமான அருள்சகோதரி Rita Mboshu Kongo அவர்கள்,  கல்வியின் துணைகொண்டு  இனவெறியை ஒழிக்கமுடியும் என்பதால், நல்லதொரு மனச்சான்றை மக்கள் மனதில் உருவாக்கும் நோக்கத்தில், மக்களை நன்முறையில் தயாரிக்கும் கல்விக்கு, திருஅவை முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

இதே கருத்தரங்கில், 'இனவெறி என்பது, இறைவனுக்கு எதிரான நிந்தனை' என்ற கருத்தை வலியுறுத்தி, திருப்பீடத்திற்கான பானமா நாட்டு தூதரும் உரையொன்று வழங்கினார்.

No comments:

Post a Comment