மேரி தெரேசா: வத்திக்கான்
அக்காலத்தில் வறுமையில் வாடிய புலவர் ஒருவர், அந்த நாட்டு அரசரின் அரண்மனைக்குச் சென்று, அரசரின் புகழ்பாடி, அதற்கு வெகுமதியாக பொற்காசுகளைப் பெற்று, தனது ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். போக்குவரத்து வாகன வசதிகள் இல்லாத அக்காலத்தில், அவரால், அன்றே அவரது ஊர்போய் சேர முடியவில்லை. இரவானது. எங்கே தங்குவது என்று சுற்றுமுற்றும் பார்த்தார், அங்கே ஒரு மரம் தெரிந்தது. பொற்காசுகளை வைத்திருந்த துணி முடிச்சை தலையணையாக வைத்துக்கொண்டு, அந்த மரத்தடியில் உறங்கத் தயாரானார் புலவர். அவர் படுத்து சிறிது நேரத்தில் அந்தப் பக்கமாய் திருடர்கள் வந்துகொண்டிருந்த ஒலிக்கோவையைக் கேட்டார். அத்திருடர்கள் பக்கத்து ஊரில் திருடிவிட்டு உல்லாசமாக ஆடிப்பாடி வந்துகொண்டிருந்தனர். தன்னிடம் வந்து, தனது துணிமுடிச்சைக் கேட்டால், பொற்காசுகளை இழக்கவேண்டியிருக்கும், பின்னர், தனது குடும்பம், பசி பட்டினியால் சாகுமே என்று புலவர் அச்சமுற்றார். அவர் நினைத்தது போலவே அத்திருடர்கள் அவரை மரத்தடியில் கண்டு அவரிடம் வந்து, ஏன் இங்கே இருக்கிறாய்? என்று அதட்டினர். அப்போது அவர், உள்ளுணர்வு பெற்றவராய், அருகில் இருந்த இடத்தைச் சுட்டிக்காட்டி, அங்கே, உள்ளே புளுக்கமாக இருந்தது, அதனால் சற்று காற்று வாங்கலாமே என, இந்த மரத்தடியில் படுத்திருக்கிறேன் என்றார். புலவர் சொன்னதைக் கேட்டதும், திருடர்கள் கண்சிமிட்டும் நேரத்திற்குள்ளாக, அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். ஏனெனில் புலவர் சுட்டிக்காட்டிய இடம், ஒரு புதைகுழி மைதானம். எப்போதும் விழிப்புணர்வோடு இருந்தால், ஆபத்திலிருந்து தற்காத்துக்கொள்ளலாம் என்பதை, இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது. தற்போதைய கொரோனா தொற்றுநோய் காலத்தில், விழிப்புடன் இருங்கள் என்ற விண்ணப்பத்தை அடிக்கடி கேட்டு வருகிறோம். ஆம். தன்னைப் பற்றிய விழிப்புணர்வு, மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும்.
No comments:
Post a Comment