மேரி தெரேசா: வத்திக்கான்
ஓர் ஊரில் பெரிய செல்வந்தர் ஒருவர் இருந்தார். அந்த ஊரில் அவருடைய நிலங்களை குத்தகைக்கு வாங்கி விவசாயம் செய்பவர்களில், வயது முதிர்ந்த ஒருவரை அவருக்கு மிகவும் பிடிக்கும். ஏனெனில் ஆண்டின் இறுதியில், அவருக்குச் சேரவேண்டிய பணத்தை, எந்த பிரச்சனைகள் பற்றியும் புலம்பாமல் செலுத்தி வந்தவர், அந்த முதியவர் மட்டுமே. ஒருநாள் அந்த செல்வந்தர், தனது குத்தகை நிலங்களைப் பார்வையிட வந்தபோது, அந்த முதியவர் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினார். அப்போது செல்வந்தர் அவரிடம், இப்போது என்ன செய்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவர், எல்லா வேலைகளையும் முடித்து, பழைய கஞ்சியை சாப்பிடப்போகிறேன். அதற்குமுன் அதைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லப்போகிறேன் என்றார். அப்போது செல்வந்தர் அவரிடம், பழைய சோற்றைச் சாப்பிடும் அளவுக்கு எனக்கு ஒரு நிலைமை வந்தால், அப்போது நான் கடவுளுக்கு நன்றி சொல்லமாட்டேன் என்றார். அப்போது அந்த முதியவர், ஐயா, எனக்குத் தேவையானதைக் கொடுக்கக்கூடிய கடவுளுக்கு நான் எப்போதுமே நன்றியுடையவனாகத்தான் இருப்பேன் என்று சொன்னார். பின்னர், முதியவர் அவரிடம், ஐயா, நேற்று இரவு என் கனவில் ஒரு தேவதை வந்து, இன்று இரவு இந்த ஊரில் மிகப்பெரிய செல்வந்தர் ஒருவர் இறந்துவிடுவார் என்று சொன்னது, இதற்கு அர்த்தம் தெரியவில்லை என்றார். அப்போது செல்வந்தர், அந்த கனவு தனக்குச் சொல்லப்பட்டது என்று மனதிற்குள்ளே நினைத்து, கனவை நம்புவது முட்டாள்தனம், அதை அப்படியே விட்டுவிடுங்கள் என்று சொல்லிவிட்டு வீட்டுக்குத் திரும்பினார். பின்னர் அந்த செல்வந்தர், அந்தப் பகுதியிலே புகழ்பெற்ற மருத்துவர் ஒருவரை அழைத்து தன்னைப் பரிசோதிக்கும்படிக் கூறினார். மருத்துவரும், உடலில் எந்தக் குறையும் இல்லை என்று சொன்னார். அப்போது செல்வந்தர் மருத்துவரிடம், இன்று இரவு முழுவதும், என்னோடு தங்கி இருங்கள், மறுநாள் காலையில் நான் நலமாக இருந்தால் நீங்கள் போகலாம் என்று கூறினார். அதுபோலவே மறுநாள் செல்வந்தரும் நலமாக இருந்தார். அதனால் மருத்துவரையும் மகிழ்வோடு வழியனுப்பி வைத்தார் செல்வந்தர். அவர் சென்றபின்னர் செல்வந்தரின் வாகன ஓட்டுனர் அவரிடம் வந்து, ஐயா, நேற்று நாம் பேசிக்கொண்டிருந்த அந்த முதியவர் இன்று இரவு இறந்துவிட்டார் என்று சொன்னார். அப்போது செல்வந்தர், இந்த ஊரில் பெரிய செல்வந்தர் நான் அல்ல, யார் ஒருவர் தனக்குக் கிடைப்பதில் மனநிறைவுகொண்டு, அதற்காக அவரால் கடவுளுக்கு நன்றி சொல்ல முடிகிறதோ அவர்தான் இந்த உலகத்திலேயே பெரிய பணக்காரர் என்பதை உணர்ந்தார். (நன்றி- சுல்தானா பர்வீன்)
No comments:
Post a Comment