மேரி தெரேசா: வத்திக்கான்
சில ஆண்டுகளுக்கு முன்பு, மனிதர் ஒருவர், நார்வே நாட்டில் Bodo என்ற
நகரில் இருந்த நான்கு சக்கர வாகனங்கள் விற்கும் ஒரு பெரிய நிறுவனத்திற்குள்
நுழைந்தார். அவர், அந்த நிறுவனத்திடம், எனக்கு உடனடியாகப் ஒரே மாதிரியான
பதினாறு நான்கு சக்கர வாகனங்கள் வேண்டும் என்றார். அந்த நிறுவன உரிமையாளர்,
அந்த மனிதரை, ஏளனமாக ஏற இறங்கப் பார்த்தார். ஏனெனில் அவரின் தோற்றம், அவர்
உடுத்தியிருந்த உடை போன்றவை மிகவும் சாதாரணமாக இருந்ததது. அவரிடம் அவர்,
“நகைச்சுவையாகப் பேசுவதற்கு இது நேரமல்ல!” என்று சொல்லி அவரை வெளியே
அனுப்பி வைத்தார். அந்த மனிதரோ அதே நகரில் இருந்த வேறொரு நிறுவனத்திற்குச்
சென்றார். அங்கிருந்தவரிடம் அவர் முன்பு சொன்ன அதையே சொன்னார். அவர்
இவருக்கு உரிய மதிப்புக் கொடுத்து, இவர் கேட்ட ஒரே மாதிரியான பதினாறு
நான்கு சக்கர வாகனங்களை, நாற்பத்து ஏழாயிராம் டாலர் விலைக்குக் கொடுத்து,
நல்லமுறையில் இவரை வழியனுப்பி வைத்தார். இச்செய்தி அந்த மனிதர் முதலில்
சென்ற, நான்கு சக்கர வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனத்தின்
உரிமையாளருக்குத் தெரியவர, அவர் ‘வந்தவருடைய வெளித்தோற்றத்தைப்
பார்த்துவிட்டு இப்படியொரு நல்ல வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டோமே!’ என்று
மிகவும் வருந்தினார். உண்மையில், பதினாறு நான்கு சக்கர வண்டிகளை வாங்க
வந்திருந்த அந்த மனிதர், பெரியதொரு மீன்பிடிக் கப்பல் ஒன்று
வைத்திருந்தார். அதில் பதினாறு பேர் பணியாற்றி வந்தனர். அந்த ஆண்டு
அவருக்கு நல்ல வருமானம் கிடைத்ததால், அவர் தன்னிடத்தில் பணியாற்றி வந்த
அந்தப் பதினாறு பேருக்கும், ஆளுக்கொரு நான்கு சக்கர வாகனத்தைப் பரிசாக
அளிக்க முடிவுசெய்து, அவற்றை வாங்கச் சென்றிருந்தார். ஆம். வெளித்தோற்றம்
பலநேரங்களில் ஏமாற்றத்தையே அளிக்கின்றது. ஒரு மனிதர் பார்ப்பதற்கு
சாதாரணமாகத் தோன்றலாம், ஆனால் அவர் அழகான, அன்பு நிறைந்த உள்புறத்தை,
இதயத்தைக் கொண்டிருக்கலாம். எனவே, ஒரு மனிதரின் வெளித்தோற்றத்தை வைத்து
அவரைக் கணிப்பது ஒருபோதும் சரியல்ல.
No comments:
Post a Comment