மேரி தெரேசா: வத்திக்கான்
ஒவ்வொரு நாளும் ஊடகங்களில் மனதிற்கு ஆறுதல் தருகின்ற, மகிழ்வை அளிக்கின்ற செய்திகளைவிட, மனதை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செய்திகளையே தடித்த எழுத்துக்களில் காண முடிகின்றது. நவம்பர் 28, இச்சனிக்கிழமையன்று, மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் வடகிழக்கிலுள்ள கிராமம் ஒன்றில், 110க்கும் மேற்பட்ட அப்பாவி விவசாயிகள், பயங்கரவாதிகளால் இரக்கமற்று கொல்லப்பட்டுள்ளனர் என்று, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மனிதாபிமான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் Edward Kallon அவர்கள், நவம்பர் 29, இஞ்ஞாயிறன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளார். முதலில் 43 பேர் கொல்லப்பட்டனர் என்று சொல்லப்பட்டவேளை, பின்னர் மேலும் குறைந்தது எழுபது விவசாயிகள் கொல்லப்பட்டனர் என்றும், Boko Haram எனப்படும் இஸ்லாம் தீவிரவாத அமைப்பைச் சார்ந்தவர்களே, இந்தப் படுகொலைகளை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது என்றும், Kallon அவர்களின் அறிக்கை கூறுகின்றது. நைஜீரியாவின் Borno மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், அம்மாநிலத்தின் தலைநகரான Maiduguriக்கு அருகில், Koshobe என்ற கிராமத்தில், பயங்கரவாதிகள், நெல் வயல்களில் வேலைசெய்துகொண்டிருந்த விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டும், கயிறுகளால் கட்டி, அவர்களின் கழுத்தை அறுத்தும் கொடூரமாக கொலைசெய்துள்ளனர். மேலும், சில விவசாயிகள் காணாமல்போயுள்ளனர், மற்றும், பெண்கள் சிலர் கடத்தப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் கூறுகின்றன. இந்த ஏழை விவசாயிகள், பிழைப்புக்காக, தங்கள் சொந்த இடங்களைவிட்டு ஏறத்தாழ ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு, வயல்களில் வேலை செய்தவர்கள் என்று கூறப்படுகிறது. கடந்த 2009ம் ஆண்டில் இருந்து அந்நாட்டில் போகோ ஹரம் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நீடித்து வருகிறது. மேலும், இந்திய நடுவண் அரசு கொண்டுவந்துள்ள விவசாயச் சட்டங்களை எதிர்த்து, டெல்லி எல்லைகளில், ஒரு கோடியே 20 இலட்சம் விவசாயிகள்,96 ஆயிரம் விவசாய வாகனங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உலகில் வன்முறை, பயங்கரவாதம், இலஞ்சம், ஊழல், பாலியல் வன்கொடுமை உட்பட, எத்தனையோ தீமைகள் அதிகரித்துள்ள அதே காலகட்டத்தில், பல நல்ல செயல்களும் நடைபெறத்தான் செய்கின்றன. ஆனால் அவை, அதிகம் முன்னிலைப்படுத்தப்படுவதில்லை. அவற்றைப் பற்றிப் பலர் அறிவதும் இல்லை. அண்மையில், ராணி வார இதழில் வெளியான கட்டுரை ஒன்றில், பல நல்ல உள்ளங்கள் பற்றிய பதிவுகளை வாசிக்க நேர்ந்தது. அதில், ஒருவர், தன் நண்பர்களை வியப்படையச் செய்த அனுபவங்கள் சிலவற்றைப் பதிவுசெய்திருந்தார்.
ஆட்டோ ஓட்டுனரின் நற்பண்பு
எனது நண்பர் ஒருவர் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் அதிகாலை நான்கு மணிக்கு இரயிலில் வந்து இறங்கினார். அவர், வடபழனி தாண்டிப் போகவேண்டும். ஆட்டோ பிடித்தார். காலை நான்கரை மணிக்கெல்லாம் அவர் வீட்டு வாயிலுக்கு ஆட்டோ வந்துவிட்டது. ஆட்டோ கட்டணம் 230 ரூபாய். அவர் தனது பணப்பையை எடுத்துப் பார்த்தார். அதில் ஐந்நூறு ரூபாய் நோட்டுத்தான் இருந்தது. சில்லரை இல்லை. ஆட்டோ ஓட்டுநரிடம், ஐந்நூறு ரூபாயைக் கொடுத்து மீதியைக் கேட்டார். `ஐயா, நீங்கள்தான் முதல் சவாரி. என்னிடமும் சில்லரை இல்லையே?` என்றார் ஓட்டுநர். அதிகாலை நான்கரை மணிக்கு எந்தக் கடையும் திறந்திருக்காது. யாரிடம் போய்ச் சில்லரை வாங்குவது? என்று யோசித்த நண்பர், பெருமூச்சுடன், `சரி. மீதி உன்னிடமே இருக்கட்டும்` எனச் சொல்லிவிட்டார். ஆட்டோ ஓட்டுநர் அவரின் செல்பேசி எண்ணைக் கேட்டு வாங்கிக் கொண்டார். அன்று காலை பத்தரை மணி இருக்கும். நண்பரின் கைபேசியில் அந்த ஆட்டோ ஓட்டுநர் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார். சார், உங்களுக்கு நான் தரவேண்டிய மீதித்தொகை 270 ரூபாய்க்கு, உங்கள் கைபேசியில் ரீசார்ஜ் செய்துவிட்டேன்! நன்றி` என்று, அந்த குறுஞ்செய்தி இருந்தது. மிகுந்த வியப்படைந்த நண்பர் தன் கைபேசியையே தன் கண்ணில் ஒற்றிக்கொண்டார்.
விவசாயியின் பண்பு
எனது இன்னொரு நண்பர் குடும்பத்தோடு காரில் பெங்களூருவுக்குப் புறப்பட்டார். வழியில் சாப்பிடுவதற்கு உரிய உணவை டிபன் கேரியரில் எடுத்துக்கொண்டார். சாப்பாட்டு நேரம் வந்தபோது, அக்குடும்பத்தினர், காரை நிறுத்தி, எங்காவது அமர்ந்து சாப்பிட இடம் தேடினார்கள். ஒரு வயல்வெளியும், ஒரு கிணறும், அதன் அருகில் ஓர் ஆலமரமும் தென்பட்டன. அந்த ஆலமரத்தின் அடியில் அமர்ந்து சாப்பிட எண்ணிய குடும்பத்தினர் காரைச் சாலையோரமாக நிறுத்திவிட்டு, டிபன் கேரியரோடு மரத்தடிக்குச் சென்றார்கள். மரத்தடியில் ஏற்கெனவே அந்த வயலுக்குச் சொந்தக்காரரான ஒரு விவசாயி, தனது உணவைச் சாப்பிட தயார் செய்துகொண்டிருந்தார். கீழே ஒரு தட்டு. பக்கத்தில் ஒரு நெகிழி பாட்டிலில் தண்ணீர், மற்றும் உணவுப் பொட்டலம். வந்திருந்த குடும்பத்தினரை அன்போடு வரவேற்ற அந்த விவசாயி, இங்கேயே நீங்கள் சாப்பிடலாம் என்று கூறி, அருகேயிருந்த கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துக் கொடுத்து, அவர்களுக்கு உதவினார். நண்பர் குடும்பமும் சாப்பிட்டு முடித்தது. அந்த விவசாயியும் தன் உணவை உண்டு முடித்தார். அச்சமயத்தில், எனது நண்பர் ஒரு விடயத்தைக் கவனித்தார். அந்த விவசாயி தான் பருகுவதற்குத் தன் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த தண்ணீரைத்தான் பயன்படுத்தினாரே அன்றி, அந்தக் கிணற்று நீரைப் பயன்படுத்தவில்லை. நண்பருக்கு வியப்பு. அப்போது எனது நண்பர் விவசாயியிடம், கிணற்று நீர் உப்புக் கரிக்காமல் நன்றாகத்தானே இருக்கிறது? கிணறும் உங்களுடையது தானே? அப்படியிருக்க நீங்கள் ஏன் கிணற்று நீரைப் பயன்படுத்தாமல் உங்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்திருக்கும் தண்ணீரைப் பயன்படுத்துகிறீர்கள்?` என்று கேட்டார். அதற்கு அந்த விவசாயி, கள்ளங்கபடமில்லாமல் புன்னகைத்தவாறு இவ்வாறே சொன்னார். `ஐயா! இந்தக் கிணறு என்னுடையதுதான். இதை வெட்டுவதற்காக வங்கியில் கடன் வாங்கினேன். அந்தக் கடன் இன்னும் தீரவில்லை. அது தீரும்வரை வயலில் பாய்ச்சுவதற்கு மட்டுமே கிணற்று நீரைப் பயன்படுத்துவது என்றும், வயல் பயன்பாட்டுக்குத் தவிர சொந்தப் பயன்பாட்டுக்கு இந்த நீரை எடுப்பதில்லை என்றும் நானும் என் மனைவியும் சேர்ந்து முடிவு செய்திருக்கிறோம். இப்படி இருந்தால்தான் கடனைச் சீக்கிரம் அடைக்க வேண்டும் என்ற அறிவு வரும் என, எனக்கு அறிவுறுத்தியவர் என் மனைவிதான். இன்னும் மூன்று நான்கு மாதங்களில் வங்கிக் கடனை அடைத்துவிடுவேன். அதன்பிறகு உங்களைப் போல், நானும் ஆனந்தமாக இந்தக் கிணற்று நீரைப் பருகத் தொடங்குவேன். அப்போது வீட்டிலிருந்து தண்ணீர் கொண்டுவருவது இருக்காது!`
பூக்கடை பாட்டி
ராணி வார இதழில் தனது நண்பர்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ள அந்த மனிதர், மற்றுமொரு நண்பருக்கு கிடைத்த அனுபவத்தையும் இவ்வாறு பதிவுசெய்திருந்தார். ஒருநாள், இரு சக்கர வாகனத்தில் அலுவலகத்திலிருந்து வந்துகொண்டிருந்த எனது நண்பர், அந்த வாகனத்தை வழியில் நிறுத்தி, அங்கு பூ விற்றுக்கொண்டிருந்த ஒரு பாட்டியிடம் இரண்டு முழம் மல்லிகைப் பூ வாங்கினார். அந்தப் பாட்டிக்கு முப்பது ரூபாய் கொடுக்க வேண்டும். இவரிடம் சில்லரை இல்லை. நூறு ரூபாய் நோட்டை நீட்டினார். அந்தப் பாட்டியிடமும் எழுபது ரூபாய் திருப்பிக் கொடுப்பதற்குச் சில்லரை இல்லை. `நூறு ரூபாயை இன்றைக்கு வைத்துக்கொள்ளுங்கள் பாட்டி. நாளை இதே வழியில்தான் வருவேன். அப்போது உங்களிடம் மீதி எழுபது ரூபாயை வாங்கிக் கொள்கிறேன்!` என்றார் நண்பர். அப்போது அந்த பாட்டி, `தம்பி! நூறு ரூபாயை நீயே வைத்துக்கொள். நாளை இந்தப் பாதையில் வரும்போது முப்பது ரூபாயைத் தா. நீ என்னை நம்புவதுபோல் நானும் உன்னை நம்புகிறேன். நான் வயதானவள். திடீரென ஏதோ நேர்ந்து நான் காலமாகிவிட்டால், நேரே கடவுளிடம் போய்ச் சேர வேண்டும். உன் எழுபது ரூபாயைத் திரும்பத் தருவதற்காக நான் மறுபிறவி எடுக்கக் கூடாது!` என்று சொன்னார். இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற வியப்பு, இந்த அனுபவத்தை எதிர்கொண்டவர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் ஏற்படத்தான் செய்கின்றது. இளம்பெண்ணின் பண்பு
அன்று பேருந்து ஒன்றில், பயணித்துக்கொண்டிருந்த இளம் பெண் ஒருவர் அருகில், பருமனான பெண் ஒருவர், பல பைகளுடன் போய் அமர்ந்தார். அவரது பருத்த உடலும் பைகளும் அந்த இளம் பெண்ணை நெருக்கிக்கொண்டிருந்தன. அந்த இளம் பெண்ணிற்கு அடுத்த பக்கத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர், உனக்கு இது சங்கடமாக இல்லையா என்று கேட்டார். அதற்கு அந்த இளம்பெண், புன்னகைத்தவாறு இவ்வாறு கூறினார்.
"நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகக் குறுகிய நேரம்தான். எனவே, இத்தகைய விடயத்திற்காக மரியாதை குறைவாகப் பேசுவதோ, வாதிடுவதோ தேவையற்றது. நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கத்தானே போகிறேன்"
எய்டஸ் உலக நாள்
டிசம்பர் 1, இச்செவ்வாய், எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு உலக நாள். டிசம்பர் 2, புதன், அடிமைமுறை ஒழிப்பு உலக நாள். டிசம்பர் 3, வியாழன், மாற்றுத்திறனாளர் உலக நாள். தற்போது உலகம், கொரோனா தொற்றுக்கிருமி பாதிப்புகளைத் தடுப்பதில் மட்டும் ஒட்டுமொத்த கவனத்தைச் செலுத்தி வருவதால், இந்தியா போன்ற நாடுகளில் காசநோய், எய்ட்ஸ், மலேரியா தொடர்பான மரணங்கள் அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலக அளவில் இன்று முதல், 2022ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஏறத்தாழ மூன்று இலட்சம் பேர் HIV நோய்க் கிருமிகளால் புதிதாகப் பாதிக்கப்படுவர் என்றும், எய்ட்ஸ் நோய் தொடர்புடைய இறப்புகள், ஒரு இலட்சத்து 48 ஆயிரத்திற்கும் அதிகமாகும் என்றும், ஐ.நா.வின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆண்டில் ஒவ்வொரு நூறு வினாடிகளுக்கு, ஒரு குழந்தை அல்லது, இருபது வயதுக்குட்பட்ட ஒருவர் எய்ட்ஸ் நோயால் தாக்கப்பட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமுதாயங்களால் புறக்கணிக்கப்படும், விளிம்புநிலைக்குத் தள்ளப்படும்
எய்ட்ஸ் நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரை, நம் நல்ல பண்புகளால்,
பிறரன்புச் செயல்களால் அரவணைப்போம், ஆதரிப்போம். அவர்கள் மாண்புடன் வாழ
உதவுவோம். கடவுள் கொடுத்த வெறும் களிமண்தான் நம் வாழ்க்கை. அதை அழகான
சிலையாக மாற்றுவதும், தண்ணீரில் கரைத்து வீணாக்குவதும் அவரவர் கையில்தான்
உள்ளது. நமது இவ்வுலக வாழ்வு எப்போது, எங்கு, எவ்வாறு முடியும் என்பது,
கடவுளைத் தவிர, நம்மில் யாருக்குமே தெரியாது, அதனால் வாழ்கிற நாள்களை நல்ல
பண்புகளால் நிறைத்து நறுமணம் பரப்புவோம்.
No comments:
Post a Comment