Monday, 18 January 2021

கொரோனா தடுப்பூசிகள் அனைவருக்கும் விரைவாக கிடைக்க…

 


கோவிட்-19 பெருந்தொற்றால், உலக அளவில் 2,000,000த்திற்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர். அனைத்து நாடுகளும் ஒன்றுக்கொன்று உதவி, மக்களின் வாழ்வைக் காப்பாற்றவேண்டும் - ஐ.நா. தலைமைப் பொதுச்செயலர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக வழங்கப்படும் தடுப்பூசிகள், அனைத்து மக்களுக்கும், நியாயமாகவும், விரைவாகவும் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படவேண்டும் என்று, கத்தோலிக்க பிறரன்பு நிறுவனம் ஒன்று, ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்தியுள்ளது.

உலக மக்கள் தொகையில் 13 விழுக்காட்டினருக்கு மட்டுமே, கோவிட்-19 தடுப்பூசிகள் கிடைப்பதற்கு ஏற்கனவே உறுதி வழங்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்து, வத்திக்கான் செய்தித் துறைக்குப் பேட்டியளித்துள்ள, Misereor எனப்படும் கத்தோலிக்க பிறரன்பு நிறுவனத்தின் இயக்குனர் Pirmin Spiegel அவர்கள், இவ்வாறு கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், “அனைவரும் உடன்பிறந்தோர்” (Fratelli tutti) என்ற அண்மைத் திருமடலின் உணர்வில், உலகில், எப்போதும் இருந்ததைவிட இப்போது, அதிக அளவில் ஒருமைப்பாட்டுணர்வு காட்டப்படவேண்டும் என்று, Spiegel அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசிகள் மேலும் அதிகமாக விநியோகிக்கப்படுவதற்கு, செல்வந்த நாடுகள், அவற்றில் முதலீடுகள் செய்வதற்கு விருப்பம் தெரிவிக்கும்வரை, உலக அளவில் அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட, ஆண்டுகள் எடுக்கும் என்றும், Spiegel அவர்கள் கூறினார்.  

கோவிட்-19 நெருக்கடியை ஒழிப்பதற்கு, எனது நாட்டில், எனது வீட்டில் மட்டுமல்ல, உலகெங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே, இந்த பெருந்தொற்று, உலக அளவில் ஒழியும் என்றும், அனைத்து நாடுகளிலும் இந்த தொற்றுக்கிருமி பரவாமல் தடுப்பதற்கு, மிக விரைவில் நடவடிக்கைகள் அவசியம் என்றும், Spiegel அவர்கள் கூறினார்.

Misereor என்பது, உலகின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கும், ஜெர்மன் நாட்டு கத்தோலிக்க ஆயர்களின் அமைப்பாகும்.

இதற்கிடையே, கோவிட்-19 பெருந்தொற்றால், இதுவரை உலக அளவில் இருபது இலட்சத்திற்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர் என்றும், இந்த பெருந்தொற்றை ஒழிப்பதற்கு, அனைத்து நாடுகளும் ஒன்றுக்கொன்று உதவி, மக்களின் வாழ்வைக் காப்பாற்றவேண்டும் என்றும், ஐ.நா. நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார். (UN)


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...