அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், 1970களிலிருந்து பழங்குடி இன மற்றும், தலித் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உழைத்துவந்தவர் – ஐ.நா. பிரதிநிதி
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில், பழங்குடி இன மக்களுக்காக, ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக உழைத்துவந்த, இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், சிறையில் அடைக்கப்பட்ட நூறாவது நாளன்று, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மனித உரிமைகள் அமைப்பின் பிரதிநிதி ஒருவர், இந்தியாவில், மனித உரிமை ஆர்வலர்கள் முறைப்படி பாதுகாக்கப்படுவதில்லை என்று குறை கூறினார்.
மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவது குறித்து, ஐ.நா.வில் சிறப்பு அறிக்கையைச் சமர்ப்பிக்கும் Mary Lawlor அவர்கள், சனவரி 15, இவ்வெள்ளியன்று நடைபெற்ற நிகழ்வில் பேசியபோது, இந்தியாவில் மனித உரிமை ஆர்வலர்கள் கையாளப்படும் முறை குறித்து குறை கூறினார்.
அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் போன்ற மனித உரிமை ஆர்வலர்கள் நடத்தப்படும் முறை தனக்கு அதிர்ச்சியளிக்கின்றது என்றும், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் குறித்து, இந்திய அரசுக்கு தான் அனுப்பிய மடலுக்கு, இதுவரை இந்திய அதிகாரிகளிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்றும், பதில் அனுப்ப, பொதுவாக அரசுகளுக்கு அறுபது நாள்கள் அவகாசம் கொடுக்கப்படுகின்றது என்றும், Lawlor அவர்கள் கூறியுள்ளார்.
இந்தியாவில், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், அவற்றைப் பேணி வளர்க்கவும் பல்வேறு சவால்கள் உள்ளன என்றும், மனித உரிமை ஆர்வலர்களைப் பாதுகாக்கவேண்டியது அரசின் கடமை என்றும், இவ்வெள்ளியன்று நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய Lawlor அவர்கள், சட்டத்திற்குப் புறம்பே இடம்பெறும் நடவடிக்கைகள் குறித்த இந்திய அரசின் UAPA சட்டத்தையும் குறை கூறினார்.
அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், 1970களிலிருந்து பழங்குடி இன மற்றும், தலித் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உழைத்துவந்தவர் என்பதையும், அவர் திட்டமிட்டு கைதுசெய்யப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டு, Lawlor அவர்கள் அரசுக்கு அனுப்பிய மடலின் நகலை, இம்மாதத் துவக்கத்தில், தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (scroll.in)
No comments:
Post a Comment