Tuesday, 6 October 2020

திருத்தந்தையின் “அனைவரும் உடன்பிறந்தோர்” - புதிய திருமடல்

 திருத்தந்தை பிரான்சிஸ் அசிசியில் புதிய திருமடலில் கையெழுத்திடுகிறார்


நீதி நிறைந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு, மனித உடன்பிறந்தநிலை, மனித ஒன்றிப்பு உணர்வு ஆகியவை அவசியம்” – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 03, இச்சனிக்கிழமை மாலையில், இத்தாலியின் அசிசி நகர் புனித பிரான்சிஸ் துறவியர் இல்லத்தில் திருப்பலி நிறைவேற்றி, புனித பிரான்சிஸ் கல்லறையில், “Fratelli tutti” அதாவது “அனைவரும் உடன்பிறந்தோர்” எனப்படும் புதிய திருமடல் ஒன்றில் கையெழுத்திட்டார்.

இச்சனிக்கிழமை காலை 9  மணியளவில், வத்திக்கானிலிருந்து அசிசி நகருக்கு காரில் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாலை 3 மணியளவில் திருப்பலி நிறைவேற்றினார். அதன்பின்னர், இந்த திருமடலில் கையெழுத்திட்டார். கோவிட்-19 விதிமுறைகளின் காரணமாக, திருத்தந்தை இத்திருப்பலியை விசுவாசிகளின் பங்கேற்பின்றி நிறைவேற்றினார்.

மனித உடன்பிறந்தநிலை, மற்றும், சமுதாய நட்புறவு ஆகியவற்றை மையப்படுத்தியுள்ள இத்திருமடல், அசிசி நகர் புனித பிரான்சிசின் திருநாளாகிய அக்டோபர் 04, இஞ்ஞாயிறன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அக்டோபர் 03, இச்சனிக்கிழமை மாலையில் திருத்தந்தை கையெழுத்திட்ட,  “அனைவரும் உடன்பிறந்தோர்” என்ற திருமடலையும், அக்டோபர் 4, இஞ்ஞாயிறன்று  நிறைவடையும் படைப்பின் காலத்தையும் மையப்படுத்தி, இரு ஹாஷ்டாக்குகளுடன் #SeasonOfCreation #FratelliTutti இச்சனிக்கிழமையன்று, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“இன்னும் மேலான நீதி நிறைந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு, மனித உடன்பிறந்தநிலை, மனித ஒன்றிப்பு உணர்வு ஆகியவை அவசியம்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

No comments:

Post a Comment