ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
பாகிஸ்தான், இலாகூரில், தேவநிந்தனை குற்றத்தின் பேரில் மரணதண்டனை விதிக்கப்பட்ட சவான் மாசி என்பவரை, இலாகூர் உயர் நீதிமன்றம், அக்டோபர் 6, இச்செவ்வாயன்று, குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்துள்ளது.
இறைவாக்கினர் முகம்மது அவர்களை மதிப்புக் குறைவாகப் பேசினார் என்ற காரணத்தால், 2013ம் ஆண்டு, மாசி அவர்கள் கைது செய்யப்பட்டு, 2014ம் ஆண்டு, அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து, இலாகூரில் மாசி அவர்கள் வாழ்ந்துவந்த புனித யோசேப்பு குடியிருப்பில், வன்முறையாளர்கள் நுழைந்து, 170 கிறிஸ்தவ இல்லங்களுக்கு தீ வைத்ததையடுத்து, அக்குடியிருப்பின் மக்கள் பெரும் துன்பங்களுக்கு உள்ளாயினர்.
இந்த வன்முறையில் ஈடுபட்ட 106 இஸ்லாமியர் குற்றமற்றவர்கள் என்று 2017ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த 7 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாசி அவர்களின் வழக்கு, இலாகூர் உயர் நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்ட வேளையில், அவரது குற்றத்தை நிலைநாட்டும் தெளிவான சாட்சியங்கள் இல்லாத காரணத்தால், அவர், அக்டோபர் 6, இச்செவ்வாயன்று, குற்றமற்றவர் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதற்கு முன்னதாக, தேவநிந்தனை குற்றம் சுமத்தப்பட்ட ஆசியா பீபி என்ற பெண்ணின் வழக்கிலும், தகுந்த ஆதாரங்கள் இல்லை என்ற காரணத்தால், அவர், 2018ம் ஆண்டு விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. (UCAN)
No comments:
Post a Comment