கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்
"Fratelli tutti", அதாவது, "அனைவரும் உடன்பிறந்தோர்" எனப்படும் தன் புதிய திருமடல் குறித்து, ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு நண்பகல் மூவேளை செப உரையை வழங்கிய வேளையில் தன் புதிய திருமடல் குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை, அதனை அங்கு குழுமியிருப்போருக்கு ஒரு கொடையாக வழங்குவதாக எடுத்துரைத்தார்.
உடன்பிறந்த நிலை, மற்றும், சமுதாய நட்பு நிலை குறித்து பேசும், "அனைவரும் உடன்பிறந்தோர்" என்ற இந்த புதிய திருமடலை, சனிக்கிழமையன்று அசிசி நகர் புனித பிரான்சிசின் கல்லறையின் முன் இறைவனுக்கு கையளித்ததாக குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முந்தைய புனித திருத்தந்தையர்கள் 23ம் ஜான், 6ம் பவுல், இரண்டாம் ஜான் பால் ஆகியோர் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதுபோல், உடன் பிறந்த நிலை, மற்றும், படைப்பின் மீது அக்கறையே, ஒன்றிணைந்த வளர்ச்சியையும் அமைதியையும் நோக்கிய பாதையில் ஒரே வழி என்பதை சுட்டிக்காட்டினார்.
திருப்பீடத்தின் L'Osservatore Romano நாளிதழில், இந்த "Fratelli tutti", அதாவது, "அனைவரும் உடன்பிறந்தோர்" என்ற புதிய திருமடல் அச்சிடப்பட்டிருப்பதைப் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்தப் பிரதியை, புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த ஒவ்வொருவருக்கும் கொடையாக வழங்குவதில் தான் மகிழ்வதாகவும் தெரிவித்தார்.
திருஅவையில் அனைத்து மதநம்பிக்கையாளரிடையேயும், அனைத்து மக்களிடையேயும், உடன்பிறந்த உணர்வின் நிலையில் மேற்கொள்ளும் பயணத்தில், புனித பிரான்சிஸ் உடன் வருவாராக என வேண்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் மாதம் முதல் தேதி துவங்கி இஞ்ஞாயிறன்று நிறைவுற்ற, 'படைப்பின் காலம்' குறித்தும் நினைவூட்டினார்.
ஸ்காட்லாந்தில் நூறாண்டுகளுக்கு முன் துவங்கி, சிறந்த முறையில் துறைமுகங்களில் மறைப்பணியாற்றிவரும் Stella Maris என்ற அமைப்பு குறித்தும், புதிதாக வத்திக்கானில் பணியில் சேர்ந்துள்ள சுவிஸ் படைவீரர்கள் குறித்தும் எடுத்துரைத்து, அவர்களுக்கு தன் பாராட்டுக்களையும் வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
No comments:
Post a Comment