Tuesday, 6 October 2020

உலகில் சிறார் பாதுகாப்பிற்கு துறவிகள்

 

ஆப்ரிக்காவின் கானா நாட்டில் அனாதைக் குழந்தைகளைப் பராமரிக்கும் அருள் சகோதரிகள்

அண்மை புள்ளிவிவரங்களின்படி, உலகெங்கும் இயங்கிவரும், ஏறத்தாழ, ஒன்பதாயிரம் கத்தோலிக்க பராமரிப்பு இல்லங்கள் மற்றும், கருணை இல்லங்கள், 55 இலட்சத்திற்கு அதிகமான சிறாருக்கு பணியாற்றி வருகின்றன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நலிவுற்ற சிறாரைப் பாதுகாப்பதில், முன்னின்று பணியாற்றும், உலகளாவிய பெண் துறவு சபைகளின் தலைவர்கள் கூட்டமைப்பு (UISG), “சிறார்நல கத்தோலிக்க உலகளாவிய பராமரிப்பு (CCCI)” என்ற பெயரில், புதிய அமைப்பு ஒன்றை, அக்டோபர் 02, இவ்வெள்ளி மாலையில் இடம்பெறும் மெய்நிகர் கூட்டத்தில் துவக்கி வைத்துள்ளது.

ஆண் மற்றும், பெண் துறவு சபைகளின் பிரதிநிதிகள் பங்குபெற்ற இந்த அறிமுகக் கூட்டத்தில், வருங்காலத்தில், உலக அளவில் ஒவ்வொரு சிறாரும், அன்புநிறைந்த பாதுகாப்பான குடும்பத்தில், அல்லது, குடும்பம் போன்ற சூழலில் வளர்வதை உறுதிசெய்வதற்காக, இந்த புதிய அமைப்பு செயல்படும் என்று கூறப்பட்டது.

இந்த புதிய அமைப்பு பற்றி, வத்திக்கான் செய்தித்துறைக்குப் பேட்டியளித்த, அதன் முதல் ஒருங்கிணைப்பாளரான, அருள்சகோதரி நிலுகா பெரேரா (Niluka Perera) அவர்கள், இவ்வாறு, பல அருள்சகோதரிகள், பல்வேறு நாடுகளில், குறிப்பாக ஆப்ரிக்காவில், ஏற்கனவே பணியாற்றி வருகின்றனர் என்றும், இப்பணியில் புதிய முறைகளைக் கையாண்டு வருகின்றனர் என்றும் அறிவித்தார்.

CCCI எனப்படும் இந்த புதிய அமைப்பு, பல்வேறு நாடுகளில், குறிப்பாக, உகாண்டா, கென்யா, சாம்பியா ஆகிய நாடுகளில் பணியாற்றும் அருள்சகோதரிகளுக்கு உற்ற துணையாக இருந்து, ஊக்கப்படுத்தி வருகின்றது என்றுரைத்த, சமுதாயநலப் பணியாளரான, அருள்சகோதரி நிலுகா அவர்கள், உலக அளவில் சிறார் பராமரிப்பு குறித்த நடவடிக்கைகளில் சீர்திருத்தத்தின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்.

அண்மை புள்ளிவிவரங்களின்படி, உலகெங்கும் இயங்கிவரும், ஏறத்தாழ, ஒன்பதாயிரம் கத்தோலிக்க பராமரிப்பு இல்லங்கள் மற்றும், கருணை இல்லங்கள், 55 இலட்சத்திற்கு அதிகமான சிறாருக்கு பணியாற்றி வருகின்றன என்று கூறிய அருள்சகோதரி நிலுகா அவர்கள், துறவியர், காலத்தின் அடையாளங்களை அறிந்துகொண்டு, அதற்கேற்ப புதிய முறைகளில் தங்கள் பணிகளை ஆற்றிவருகின்றனர் என்று கூறினார்.

No comments:

Post a Comment