Tuesday, 13 October 2020

மகாகவி தாந்தே, விண்ணக வாழ்வு பற்றி சிந்திக்க அழைக்கிறார்

 தாந்தே ஆண்டை முன்னிட்டுRavenna-Cervia உயர்மறைமாவட்ட பிரதிநிதிகள்


தாந்தே அவர்கள் பிறந்ததன் ஏழாம் நூற்றாண்டை முன்னிட்டு, அவரது கல்லறையில் வைக்குமாறு, 1965ம் ஆண்டில், திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்கள் அளித்த தங்கச் சிலுவை ஒன்று, இன்றும் அங்கு சுடர்விட்டுக்கொண்டிருக்கிறது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இத்தாலி நாட்டின் மாபெரும் கவிஞர்களில் ஒருவராகப் போற்றப்படும் தாந்தே அலிகியேரி (Dante Alighieri) அவர்கள், இறைபதம் சேர்ந்ததன் ஏழாம் நூற்றாண்டு நிகழ்வு, நம் இவ்வுலக வாழ்வுப் பயணத்தை மீண்டும் கண்டுணர்ந்து வாழ்வதற்கு அழைப்பு விடுக்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Ravenna-Cervia உயர்மறைமாவட்ட பிரதிநிதிகளிடம் கூறினார்.

இத்தாலிய மொழியின் தந்தை என அழைக்கப்படும் கவிஞர் தாந்தே அவர்கள், இறைபதம் சேர்ந்ததன் ஏழாம் நூற்றாண்டை முன்னிட்டு, அக்டோபர் 10, இச்சனிக்கிழமையன்று, வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் தன்னைச் சந்தித்த, ஏறத்தாழ ஐம்பது பிரதிநிதிகளுக்கு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்தக் கவிஞரின் இறுதிக்கட்ட வாழ்வு பற்றி எடுத்துரைத்தார்.

இத்தாலி நாட்டின் வெரோனா நகரில் முதலில் வாழ்ந்து, பின்னர் ரவேன்னா நகரை தனது இறுதிப் புகலிடமாகக் கொண்டிருந்த தாந்தே அவர்கள், அந்நகரிலே, Divine Comedy என்ற மாபெரும் காப்பியத்தின் இறுதிப் பகுதியாகிய, விண்ணகம் பற்றி எழுதினார் என்று பாரம்பரியமாகச் சொல்லப்படுகிறது என்றும், இந்த கவிஞரின் மரணம், திருச்சிலுவை உயர்த்தப்பட்ட திருநாளன்று இடம்பெற்றது என்றும், திருத்தந்தை கூறினார்.

1965ம் ஆண்டில்,  திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், தாந்தே அவர்கள் பிறந்ததன் ஏழாம் நூற்றாண்டை முன்னிட்டு, ஒரு தங்கச் சிலுவையை அந்த கவிஞரின் கல்லறையில் வைக்குமாறு அளித்தார், அந்த சிலுவை இன்றும் அங்கு சுடர்விட்டுக்கொண்டிருக்கிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இச்சிலுவை, தாந்தே ஓர் இறைவாக்கினர் என்ற நம்பிக்கையை அளிக்கின்றது எனவும்,   இந்த நம்பிக்கை, நாம் அனைவரும் இவ்வுலகில் பயணம் செய்பவர்கள் என்ற உணர்வையும், பாவத்திலிருந்து தூய வாழ்விற்கு மனமாற்றம் அடையவேண்டும் என்ற விழிப்புணர்வையும் தருகின்றது எனவும், திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள் கூறியதை, இந்த சந்திப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டார்.

உலகமயமாக்கப்பட்ட நவீன உலகில் வாழும் நமக்கும், தாந்தே அவர்களுக்கும் இடையே, கடந்த ஏழு நூற்றாண்டுகள், ஓர் உடைபடாத பாலத்தை அமைத்துள்ளன, குறிப்பாக இளைஞர்களுக்கு தாந்தே அவர்களின் கவிதைகள் கிடைக்கையில், அந்த கவிஞருக்கும், உலகிற்கும் இடையே தவிர்க்கஇயலாத தொடர்பு ஒன்று இருப்பதை அறிந்துகொள்வார்கள் என்று திருத்தந்தை கூறினார். 

Ravenna-Cervia உயர்மறைமாவட்டம், தாந்தே (1265–1321) ஆண்டை சிறப்பிப்பதை முன்னிட்டு, அந்த உயர்மறைமாவட்ட பேராயர் தலைமையில், ஐம்பது பிரதிநிதிகள், இச்சனிக்கிழமையன்று திருத்தந்தையைச் சந்தித்தனர்.

மேலும், மெக்சிகோ நாட்டு அரசுத்தலைவரின் துணைவியார் Beatriz Gutierrez Willer அவர்கள், இச்சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

No comments:

Post a Comment