மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவர் ரொட்ரிகோ துத்தர்த்தே அவர்கள், அந்நாட்டில் நிலக்கரி தொழிற்சாலைகளைத் தடைசெய்வதாகக் கொடுத்துள்ள வாக்குறுதியைச் செயல்படுத்துமாறு, அந்நாட்டு காரித்தாஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் மனிதாபிமான அமைப்பான காரித்தாசின் தலைவரான, Kidapawan ஆயர் Jose Collin Bagaforo அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் நிலக்கரி தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் திரும்பப்பெற்று, புதுப்பிக்கத்தக்க மின்சக்தி வளங்களை ஊக்குவிப்பதில், அரசு நேர்மையுடன் செயல்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசுத்தலைவர் துத்தர்த்தே அவர்கள், கடந்த ஜூலை மாதம் 27ம் தேதி நாட்டினருக்கு ஆற்றிய உரையில், நிலக்கரி போன்ற, மரணத்தை வருவிக்கும் எரிசக்திகளிலிருந்து பிலிப்பீன்ஸ் நாட்டை விடுவித்து, புதுப்பிக்கத்தக்க மின்சக்தியை உற்பத்திசெய்யும் பாதையில், அரசு நிறுவனங்கள் வேகமாகச் செயல்படும் என்று கூறியுள்ளார்.
அரசுத்தலைவரின் இந்த உரையைச் சுட்டிக்காட்டியுள்ள ஆயர் Bagaforo அவர்கள், தனிப்பட்ட நிலக்கரி நிறுவனங்களுக்கு அரசு அனுமதி வழங்கிவருகின்றது என்று, உலகளாவிய Greenpeace அமைப்பு கூறியிருப்பது உண்மையானால், கார்பன் வெளியேற்றத்தைத் தடுப்பதில் அரசு அக்கறை காட்டவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.
பிலிப்பீன்ஸ் நாடு, எரிபொருளுக்கு பெரிய அளவில் நிலக்கரியையே சார்ந்திருக்கின்றது, இது, பசுமைஇல்ல வாயுக்களை அதிகமாக வெளியேற்றுகின்றது என்றும், காரித்தாஸ் அமைப்பின் தலைவர் கூறியுள்ளார். (UCAN)
No comments:
Post a Comment