ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
இத்தாலி நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவியாகவும், அந்நாட்டின் முதலீடுகளை தற்காலத் தேவைக்கு ஏற்ப மாற்றவும் உதவிவரும் முதலீடு மற்றும் கடன் நிதி நிறுவனம், தன் பணிகளை கடந்த 170 ஆண்டுகளாக திறம்படச் செய்துவருகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
Piemontese நிதி நிறுவனம் என்ற பெயரில் நிறுவப்பட்டு, தற்போது, முதலீடு மற்றும் கடன் நிதி நிறுவனம் என்ற பெயருடன் பணியாற்றிவரும் ஒரு நிறுவனத்தின் உறுப்பினர்களை, அக்டோபர் 5, இத்திங்களன்று வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை, இந்நிறுவனம், காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப, தன் பணிகளை மாற்றியமைத்து வருவதைக் குறித்து, தன் பாராட்டுக்களை வெளியிட்டார்.
இத்தாலி நாடு, பல்வேறு பிரிவுகளாக இருந்த வேளையில், Piemontese நிதி நிறுவனம் என்ற பெயரில் இயங்கிவந்த இந்நிறுவனம், இத்தாலி நாடு ஒருங்கிணைக்கப்பட்ட பின், அந்நாட்டின் தேவைகளுக்கு இணங்கி, தன் பணிகளை நவீனப்படுத்தி வருவதோடு, நிதி முதலீடு குறித்து மற்றவர்களுக்கு வழிகாட்டியும் வருகிறது என்று திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
நம்மைச் சூழ்ந்துள்ள கொள்ளைநோயின் தாக்கம், சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும் பல்வேறு சவால்களை முன்னிறுத்துகின்றது என்று கூறிய திருத்தந்தை, நமக்கு தற்போது அதிகம் தேவைப்படுவது, மிகவும் அடிப்படையான, புரட்சிகரமான மாற்றங்கள் என்பதையும் எடுத்துரைத்தார்.
சமுதாய சிந்தனைகளை கத்தோலிக்கத் திருஅவை எப்போதும் வழங்கி வந்துள்ளது என்பதை தன் உரையில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இலாபம் ஈட்டுவதை திருஅவை ஒருபோதும் எதிர்த்ததில்லை, மாறாக, மற்ற அனைத்து நன்னெறிகளையும் புறந்தள்ளி இலாபம் ஈட்டுவதை, திருஅவை எதிர்த்துள்ளது என்று குறிப்பிட்டார்.
நீங்கள் பணியாற்றும் நிதி நிறுவனம், வெறும் பொருளாதாரத்தை மட்டும் உயர்த்திப்பிடிக்கும் நிறுவனம் அல்ல, மாறாக, சமுதாய நீதி, உடன்பிறந்த நிலை, போன்ற பல்வேறு நன்னெறி விழுமியங்களை உயர்த்திப்பிடிக்கும் நிறுவனமாக விளங்கவேண்டும் என்று, திருத்தந்தை, தன் உரையின் இறுதியில் வேண்டுகோள் விடுத்தார்.
No comments:
Post a Comment