ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
இந்தியாவில் பணியாற்றும் காரித்தாஸ் நிறுவனம், இவ்வாண்டில் மிகச்சிறந்த நலப்பணிகளை ஆற்றிய நிறுவனம் என்ற விருதை, இந்திய நடுவண் அரசிடமிருந்து, அக்டோபர் 2, காந்தி பிறந்த நாளன்று பெற்றுள்ளது.
இந்தியாவில் பெருமளவு பரவியுள்ள கோவிட்-19 கொள்ளைநோயின் தாக்கத்திலிருந்து மக்களைக் காப்பதற்கு இந்திய காரித்தாஸ் நிறுவனம் மிகச் சிறந்த பணியாற்றியுள்ளது என்று, இந்திய நடுவண் அரசின் நலத்துறை மற்றும் குடும்பநல அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அவர்கள் கூறியுள்ளார்.
அக்டோபர் 2ம் தேதி நடைபெற்ற மெய் நிகர் வடிவ இணையத்தள விழாவில், Healthgiri Awards 2020 என்ற பெயரில் வழங்கப்பட்ட இந்த விருதை, இந்திய காரித்தாஸ் நிறுவனத்தின் இயக்குனர், அருள்பணி பால் மூஞ்செலி அவர்கள் பெற்றுக்கொண்டார்.
கோவிட்-19 கொள்ளைநோய் உருவாக்கியுள்ள ஆபத்துக்களைப் புறந்தள்ளி, தங்கள் சொந்த நலன்களையும் மறந்து, காரித்தாஸ் நிறுவனத்தின் சார்பில் பணியாற்றிய நலப்பணியாளர்கள், மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் அனைவருக்கும் இந்த விருதை சமர்ப்பிப்பதாக அருள்பணி மூஞ்செலி அவர்கள் கூறினார்.
1962ம் ஆண்டு, அக்டோபர் 2ம் தேதி, காந்தி பிறந்த நாளன்று நிறுவப்பட்ட இந்திய காரித்தாஸ் நிறுவனம், அதே அக்டோபர் 2ம் தேதி இந்த விருதைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment