மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
செப்டம்பர் முதல் தேதியிலிருந்து, இம்மாதம் 4ம் தேதி வரை சிறப்பிக்கப்பட்டுவரும் படைப்பின் காலத்தை முன்னிட்டு, நம் பொதுவான இல்லத்தைப் பாதுகாக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி, #SeasonOfCreation படைப்பின் காலம் என்ற ‘ஹாஷ்டாக்’குடன் இரு டுவிட்டர் செய்திகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 02, இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ளார்.
“ஒரே குடும்பத்தின் உறுப்பினர்களாக, நாம் எல்லாரும் பொதுவான ஓர் இல்லத்தில் வாழ்கிறோம் என்ற விழிப்புணர்வில் தொடர்ந்து வளர்வோம்” என்ற சொற்கள், திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.
“நம் பொதுவான இல்லமாகிய இந்தப் பூமியைப் பாதுகாப்பதற்கு முன்வைக்கப்படும் உடனடி சவால், பொருள்கள் மாறும் என்பதை அறிந்தவர்களாய், நீடித்த, நிலையான மற்றும், ஒருங்கிணைந்த முன்னேற்றத்தைத் தேடுவதில், மனிதக் குடும்பம் முழுவதும் ஒன்றுசேரவேண்டும் என்ற கடமையையும் உள்ளடக்கியுள்ளது” என்ற வார்த்தைகள், திருத்தந்தையின் இரண்டாவது டுவிட்டர் செய்தியில், இடம்பெற்றிருந்தன.
மேலும், ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் 2ம் தேதி, புனித காவல் தூதர்களின் திருநாள் சிறப்பிக்கப்படும் வேளையில், இத்தாலி நாட்டில், இந்நாள், தாத்தா பாட்டி நாளாகவும் சிறப்பிக்கப்படுகிறது.
முதியோரை நினைவுகூரும் நாள்
ஏனைய ஆண்டுகளைக்காட்டிலும், இவ்வாண்டு, கோவிட் 19 கொள்ளைநோய் காரணமாக தனித்துவிடப்பட்டுள்ள முதியோரை நினைவுகூரும் நாளாக இந்நாள் சிறப்பிக்கப்பட்டது.
இளையோர், சமுதாய தொடர்புத்தளங்கள் வழியே, தாத்தா பாட்டிகளுடன், தொடர்பு கொண்டு, அவர்களை மகிழ்விக்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தக் கொள்ளைநோய் காலத்தில், பல்வேறு தருணங்களில் அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment