ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
கறுப்புப் பணம், வெள்ளையாக மாற்றப்படுவதையும், அடிப்படைவாத குழுக்களுக்கு நிதி உதவி செய்யப்படுவதையும் தடுப்பதற்கென ஐரோப்பாவில் உருவாக்கப்பட்டுள்ள Moneyval அமைப்பு ஆற்றிவரும் பணிகளை, தான் பாராட்டுவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
வத்திக்கானின் நிதி நடவடிக்கைகளைக் கண்காணிக்க செப்டம்பர் 30ம் தேதி முதல், அக்டோபர் 13ம் முடிய, வத்திக்கானில், கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ள Moneyval அமைப்பின் உறுப்பினர்களை, அக்டோபர் 8, இவ்வியாழனன்று வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை, திருப்பீடத்திற்கு அவ்வமைப்பினர் ஆற்றிவரும் உதவிகளுக்கு நன்றி கூறினார்.
திருஅவை, பணத்துடன் கொள்ளும் தொடர்பு
கத்தோலிக்கத் திருஅவை, பணத்துடன் கொள்ளும் தொடர்பை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பது தன் திண்ணமான கருத்து என்று தன் உரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எப்போது பணம், மனிதர்களைவிட உயர்வான இடம் பெறுகிறதோ, அப்போதெல்லாம் பிரச்சனைகள் எழுகின்றன என்று கூறினார்.
குறிப்பாக, மனித உயிர்களைப் பறிக்கும் அடிப்படைவாத குழுக்களுடன் பண பரிமாற்றம் செய்வோர், தங்கள் கரங்களை இரத்தத்தால் கறைபடுத்துகின்றனர் என்பதை, திருத்தந்தை, தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
இராணுவங்களுக்கு பதில், மக்களுக்காக பணம்
உலக அரசுகள் தங்கள் இராணுவங்களுக்கு பயன்படுத்தும் நிதியை, மக்களின் வறுமையைப் போக்க பயன்படுத்தவேண்டும் என்று, திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள் Populorum Progressio என்ற தன் திருமடலில் கூறியுள்ளதை, தன் உரையில் நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதையொத்த கருத்தை, தன் Fratelli Tutti திருமடலில் தானும் வலியுறுத்தியுள்ளதாகக் கூறினார்.
பொருளாதாரமும், நன்னெறியும் தொடர்பற்றவை என்று கூறும் இவ்வுலக எண்ணங்களுக்கு மாறாக, அவை இரண்டும் பெருமளவு பிணைக்கப்பட்டுள்ளன என்பதை, கத்தோலிக்கத் திருஅவையின் சமுதாயப் படிப்பினைகள் மீண்டும், மீண்டும் கூறிவந்துள்ளதை, திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
பொன் கன்றுக்குட்டியின் மறு உருவங்கள்
பொன்னால் செய்யப்பட்ட கன்றுக்குட்டியை, இஸ்ரயேல் மக்கள் வணங்கியதைப் போலவே (காண்க. வி.ப. 32:1-35), இன்றைய உலகம், பணத்தை பீடமேற்றி வழிபடுகிறது என்று கூறிய திருத்தந்தை, வர்த்தக சந்தையாக மாறியிருந்த எருசலேம் கோவிலை, இயேசு தூய்மைப்படுத்தியதையும், "நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது" (மத். 6:24) என்று கூறியதையும், தன் உரையில் எடுத்துரைத்தார்.
செல்வத்தைக் குறித்து விவிலியத்தில் கூறப்பட்டுள்ள எச்சரிக்கைகளை மனதில் கொண்டு, கத்தோலிக்கத் திருஅவையில், நிதி விடயங்களில் ஒளிவுமறைவற்ற வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தான் இவ்வாண்டு ஜூன் 1ம் தேதி வழங்கிய Motu Proprio அறிக்கையைக் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையின் இறுதியில் குறிப்பிட்டார்.
திருப்பீடத்தின் அனைத்து நிதி நடவடிக்கைகளிலும் அப்பழுக்கற்ற, ஒளிவுமறைவற்ற முறைகளை உறுதி செய்வதற்கு, Moneyval அமைப்பு செய்து வரும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு மீண்டும் ஒருமுறை நன்றிகூறி, அக்குழுவினருக்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்து, திருத்தந்தை தன் உரையை நிறைவு செய்தார்.
No comments:
Post a Comment