Monday, 21 September 2020

நேர்மறைச் சிந்தனைகளை விதைப்போம்

 பள்ளிக்குச் செல்லும் சிறுவன்


“பொறுமையாக இருங்கள், வாழ்க்கையின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள், நான் உங்களை அன்புகூர்கிறேன்”

மேரி தெரேசா: வத்திக்கான்

அன்று சனிக்கிழமை. பள்ளியிலிருந்து வீடு திரும்பிய சிறுவன், தன் தந்தையிடம், அப்பா, இன்று எங்கள் வகுப்பு ஆசிரியர் வீட்டுப் பாடம் ஒன்று கொடுத்தார். திங்கள்கிழமை பள்ளிக்குச் செல்கையில், நாங்கள் ஒவ்வொருவரும், பத்துப் பேரை, அன்போடு அரவணைத்து, “பொறுமையாக இருங்கள், வாழ்க்கையின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள், நான் உங்களை அன்புகூர்கிறேன்” என்று சொல்லச் சொன்னார் என்றான் சிறுவன். அப்படியா மகனே, நாளைக்கு நாம் பல்பொருள் அங்காடிக்குச் செல்வோம் என்றார் தந்தை. சிறுவனும், மறுநாள் அதிகாலையிலே ஆர்வத்துடன் எழுந்து, அப்பாவுடன் வெளியே செல்லத் தயாரானான். வெளியே கனமழை பெய்துகொண்டிருந்தது. அதனால் தந்தை மகனிடம், இன்று கடைக்கு யாரும் வரமாட்டார்கள் என்று நினைக்கிறேன் என்று சொல்ல, இல்லை அப்பா, கட்டாயம் நாம் செல்லவேண்டும் என்று சிறுவன் வற்புறுத்தினான். இருவரும் பல்பொருள் அங்காடிக்குச் சென்றனர். அங்கு சிறுவன், ஏறத்தாழ ஒரு மணி நேரமாக, ஒன்பது பேரிடம், தனது வீட்டுப்பாடத்தை நிறைவேற்றினான். அப்போது தந்தை, மகனே, காலநிலை சரியில்லை, அதனால் வீட்டுக்குத் திரும்புவோம் என்று வற்புறுத்தவே, சிறுவனும் கவலையோடு காரில் ஏறினான். கனமழையில் கார் வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. அப்போது சிறுவன், அப்பா, எனது வீட்டுப் பாடத்தை இன்னும் ஒரே ஒருவரிடம்தான் முடிக்கவேண்டும், எனவே காரை அந்த வீட்டிற்குமுன் நிறுத்துங்கள் என்று, ஒரு வீட்டைச் சுட்டிக் காண்பித்தான். தந்தையும் புன்முறுவலோடு மகனின் விருப்பத்தை நிறைவேற்றினார். சிறுவன் காரிலிருந்து இறங்கி, ஓடிச்சென்று, அந்த வீட்டின் அழைப்பு மணியை அடித்தான். கதவு திறக்கப்படவில்லை. சிறிதுநேரம் சென்று, கதவை ஓங்கித் தட்டினான். ஒரு பெண்மணி கதவை மெதுவாகத் திறந்து வெளியே வந்தார். உடனடியாக, சிறுவன் அவரை அன்போடு முத்தமிட்டு, தனது ஆசிரியர் கூறியபடி சொன்னான். அந்தப் பெண்மணியின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோடியது. காரில் இருந்தபடியே அந்த பெண்மணியை கவனித்த அந்த சிறுவனின் தந்தை, காரிலிருந்து இறங்கிவந்து, அம்மா, ஏதும் பிரச்சனையா? என்று கேட்டார். அப்போது அந்த பெண்மணி, எனது கணவர் சில மாதங்களுக்குமுன் இயற்கை எய்தினார். தனிமையில் வாடிய நான், சற்றுநேரத்திற்குமுன் எனது படுக்கை அறையில் உயிரை மாய்த்துக்கொள்ள தயார் செய்துகொண்டிருந்தேன். கடைசியாக ஒருமுறை உலகைப் பார்த்த நான், கடவுளிடம் மன்னிப்புக்காக இறைஞ்சினேன். அப்போதுதான் வீட்டுக் கதவை தட்டும் சப்தம் கேட்டது. கதவைத் திறந்தபோது எனது கண்களை என்னால் நம்பவே முடியவில்லை. “பொறுமையாக இருங்கள், வாழ்க்கையின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள், நான் உங்களை அன்புகூர்கிறேன்” என்று, உங்களது மகன் கூறியபோது, அது கடவுளிடமிருந்தே வந்த செய்தியாக உணர்ந்தேன். இனிமேல் நான் சாகப்போவதில்லை, வாழ்வில் பயனுள்ள செயல்களில் ஈடுபடப் போகிறேன் என்று திண்ணமாய்ச் சொன்னார். எனவே நாமும், நாம் சந்திப்பவர்களிடம் நேர்மறைச் சிந்தனைகளை விதைப்போம். நம்மால் ஒன்றுமே இயலாதபோது, அவர்கள் கூறுவதற்காவது காதுகொடுப்போம்.

No comments:

Post a Comment