Wednesday, 30 September 2020

அமெரிக்க அதிபர் மரணதண்டனைகளை நிறுத்த அழைப்பு

 மரணதண்டனை நிறைவேற்றபப்டும் படுக்கை


இவ்வாரம் அமெரிக்க ஐக்கிய நாட்டில், நிறைவேற்றப்படும் இரு மரணதண்டனைகளுக்கு மத்தியில், கத்தோலிக்கரான Barr அவர்கள், 'Christifideles Laici' விருதைப் பெறுவதற்கு தீர்மானித்திருப்பது, கிறிஸ்தவ நம்பிக்கைக்கு முரணானது – கத்தோலிக்கத் தலைவர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டில் நிறைவேற்றப்படவிருக்கும் இரு மரணதண்டனைகளை இரத்து செய்யுமாறு, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள், அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்களையும், சட்டத்துறைத் தலைவர் William Barr அவர்களையும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் உள்நாட்டு கொள்கை பணிக்குழுவின் தலைவரான பேராயர் Paul Coakley அவர்களும், வாழ்வை ஆதரிக்கும் பணிக்குழுவின் தலைவரான பேராயர் Joseph Naumann அவர்களும் இணைந்து, செப்டம்பர் 22, இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர்.

விவிலியத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள முதல் கொலைக்குப்பின், இந்தக் கொலையைச் செய்த காயினின் உயிரைப் பறித்துவிடாமல், அவரது வாழ்வை, கடவுள் காப்பாற்றியது, மற்றவர்கள், காயினைக் கொலை செய்யக் கூடாது (தொ.நூல். 4:15). என்பதற்கு விடுத்த எச்சரிக்கையாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ள ஆயர்கள், வன்முறையைச் செய்தவர்களுக்கு, மறுவாழ்வு அளித்து, அவர்கள் தங்கள் வாழ்வைச் சீரமைக்க உதவவேண்டும் என்று கூறியுள்ளனர்.

கொலைக்குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டியது சட்டப்படி சரியானதே, ஆயினும், அவர்கள் திருந்தி வாழ்வதற்கு வழியமைப்பது, சமுதாயத்தைப் பாதுகாப்பதற்கு உதவும் என்றுரைத்துள்ள ஆயர்கள், மரணதண்டனைகள் முற்றிலும், ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது மற்றும் அவசியமற்றது என்று, இப்போதைய மற்றும், முன்னாள் திருத்தந்தையர் கூறியிருப்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.

200 கத்தோலிக்க தலைவர்கள் சட்டத்துறை தலைவருக்கு

இதற்கிடையே, அமெரிக்க ஐக்கிய நாட்டு சட்டத்துறைத் தலைவர் William Barr அவர்கள், அந்நாட்டில் மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அவருக்கு வழங்கப்படவிருக்கும், 'Christifideles Laici' என்ற விருதை, அவர் ஏற்கக்கூடாது என்று, அந்நாட்டின் 200க்கும் அதிகமான கத்தோலிக்க தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

செப்டம்பர் 22, இச்செவ்வாயன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டின் 200க்கும் அதிகமான அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், இறையியலாளர்கள், பொதுநிலையினர் ஆகியோர் கையெழுத்திட்டு, Barr அவர்களுக்கு எழுதியுள்ள திறந்த மடலில், செப்டம்பர் 23, இப்புதனன்று, அந்நாட்டில் நடைபெறவிருக்கும் 16வது தேசிய செப நிகழ்வில் வழங்கப்படவிருக்கும் 'Christifideles Laici' விருதை அவர் ஏற்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

அந்நாட்டில் இவ்வாரத்தில் இடம்பெறும் இரு மரணதண்டனைகளுக்கு மத்தியில், கத்தோலிக்கரான Barr அவர்கள், இந்த விருதைப் பெறுவதற்கு தீர்மானித்திருப்பது அதிர்ச்சியூட்டுகிறது, மற்றும், நம் நம்பிக்கைக்கு முரணானது என்று, அந்த மடலில் கூறப்பட்டுள்ளது. (CNA/ICN) 

No comments:

Post a Comment