கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவரும் பிரேசில் நாட்டின் பல மருத்துவமனைகளுக்கு திருத்தந்தையால் வழங்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவக் கருவிகள், தற்போது, அம்மருத்துவமனைகளை அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க உதவும்வகையில் செயற்கை சுவாசக்கருவிகளையும், ‘அல்ட்ராசவுண்ட் ஸ்கானர்’ எனப்படும், செவியுணரா ஒலி வழி நுட்பமாக ஆராய உதவும் கருவிகளையும் பிரேசில் நாட்டின் எட்டு மருத்துவமனைகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
பிரேசில் நாட்டின் வடபகுதியில் உள்ள Araguanína நகர் தோன் ஒரியோனே (Don Orione) மருத்துமனைக்கு வழங்கப்பட்டுள்ள மருத்துவக் கருவிகளைப் பெற்றுக்கொண்ட மருத்துவமனை இயக்குனர் அருள்பணி Jarbas Assunção Serpa அவர்கள், திருத்தந்தையின் இந்த உதவிகளை, நோயாளிகள் சார்பில் பெறுவதை ஒரு பெரிய கௌரவமாக உணர்வதாகத் தெரிவித்தார்.
பிரேசிலின் வடபகுதியில், கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சிறப்புச் சிகிச்சைகள் வழங்குவதில், முக்கியப் பங்காற்றிவரும், தோன் ஓரியோனே மருத்துவமனைக்கு, திருத்தந்தையின் உதவித் திட்டத்தின்கீழ், தற்போது மருத்துவ கருவிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது, கொரோனா நோயாளிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என மேலும் கூறினார், அம்மருத்துவமனை இயக்குனர்.
ஏற்கனவே, பிரேசிலின் அமேசான் பருவமழைக்காடுகள் பகுதியில் ஆற்றோரமாக வாழும் ஏறத்தாழ 7 இலட்சம் மக்களுக்கு உதவும் நோக்கத்தில், திருத்தந்தையின் பெயரில் மருத்துவக் கப்பல் ஒன்று, மருத்துவ, மற்றும், உணவு உதவிகளுடன் சேவையாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment