கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
புகலிடம் தேடுவோர், மற்றும், புலம்பெயர்ந்தோரை மையப்படுத்தி, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகள், இவ்வாரத்தில் நிறைவேற்றியுள்ள ஒப்பந்தம் குறித்து தன் ஏமாற்றத்தையும், ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டுள்ளது, ஐரோப்பிய காரித்தாஸ் அமைப்பு.
Brussels நகரில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த புதிய ஒப்பந்தம் குறித்து கவலையை வெளியிட்ட கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு, புலம்பெயர்ந்தோர் குறித்த புதிய கொள்கைகள், மனிதாபிமானத்தையும், நீதியான தீர்வுகளையும் விட்டு விலகிச் செல்வதுபோல் இருக்கின்றன என கூறியுள்ளது.
இம்மாதம் 9ம் தேதி, கிரேக்க நாட்டின் லெஸ்போஸ் தீவிலுள்ள Moria புலம்பெயர்ந்தோர் முகாம் தீக்கிரையாகி, 12,000க்கும் மேற்பட்டோர் அவதியுறும் நிலையில், தற்போது எடுக்கப்பட்டுள்ள, புலம்பெயர்ந்தோர் குறித்த தீர்மானங்கள், நம்பிக்கையைத் தருபவைகளாக இல்லை என்கிறது, காரித்தாஸ் அமைப்பின் அறிக்கை.
புதிய ஒப்பந்தத்தில் காணப்பட்டுள்ள தீர்மானங்கள், புலம்பெயர்ந்தோர், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் குடிபுகுவதை தடுப்பதையும், அவர்களின் சொந்த நாடுகளின் ஒத்துழைப்போடு அவர்களை திருப்பி அனுப்புவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன எனவும் குற்றம் சாட்டுகிறது, ஐரோப்பிய காரித்தாஸ் அமைப்பு.
இதற்கிடையே, ஐரோப்பாவில் புலம்பெயர்ந்தோரின் இன்றைய நிலைகள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ள, ஐரோப்பிய கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு, அனைத்து மனித குலமும் ஒரே குடும்பமாக வாழ்வதற்குரிய சூழலை உருவாக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்துள்ளது.
புலம்பெயர்ந்தோரை நிர்வகிப்பதிலும், அகதிகளை வரவேற்பதிலும், ஒருமைப்பாடு என்பதே வழிகாட்டும் நியதியாக இருக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளன, ஐரோப்பிய கிறிஸ்தவ சபைகள்.
No comments:
Post a Comment