கிறிஸ்டாபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
ஓர் ஊரில் ஏழை ஒருவர் வாழ்ந்துவந்தார். அவருடைய அம்மாவிற்குக் கண்பார்வை இல்லை. அவருக்கு வெகு நாட்களாகக் குழந்தையும் இல்லை. அவர் தந்தையோ, தான் இறப்பதற்குமுன் சொந்தமாக வீடு கட்டிவிடவேண்டும் என துடித்துக்கொண்டிருந்தார். ஒரு நாள், வழியில் ஒரு துறவியை சந்தித்து, தன் கவலைகளை எடுத்துரைத்தார் அந்த ஏழை. அத்துறவியோ, தன் தவ வலிமையால், அவருக்கு ஒரே ஒரு வரத்தை மட்டுமே தரமுடியும் என்று கூறினார். எதைக் கேட்பது என்று குழம்பினார் ஏழை. தாய்க்கு கண்பார்வையா, தந்தைக்கு வீடா, தனக்கு குழந்தைவரமா என குழம்பிப்போனார்.
சிறிது நேரம் மௌனமாக செபித்துவிட்டு, ஒரே ஒரு வரத்தை மட்டும் கேட்டு, தனக்கு வேண்டிய அனைத்தையும் பெற்றார் அந்த ஏழை. “என் மகன் கீழே விளையாடிக் கொண்டிருப்பதை, எங்கள் வீட்டு மாடியிலிருந்து என் பெற்றோர் பார்த்து மகிழ வேண்டும்'' என்பதுதான் அவர் கேட்ட வரம்.
ஆழமான அன்பும், அக்கறையும், பாசமும் இருப்பின், உங்களை அறியாமலேயே, உங்கள் புத்திகூர்மையும், முடிவெடுக்கும் திறமையும் இயல்பாகவே வெளிப்படும்!
No comments:
Post a Comment