ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்
பெருநகர் ஒன்றில், வறியோருக்கென அரசால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில், ஏழை மாணவர் ஒருவர் தனியே வாழ்ந்துவந்தார். பகுதிநேர வேலை செய்துகொண்டே, தன் கல்வியைத் தொடர்ந்த அவர், ஒவ்வொருநாளும், இரண்டுவேளை மட்டும், வெறும் சோறு பொங்கி சாப்பிட்டுவந்தார். மீதிப்பணத்தையெல்லாம், தன் மேற்படிப்பிற்காகச் சேர்த்துவந்தார்.
ஒருநாள் இரவு, அவர் சோறு உண்பதற்குமுன், வீட்டின் சன்னலைத் திறந்தார். அவர் வாழ்ந்த அறைக்குக் கீழ் புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருந்த உணவகத்திலிருந்து அறுசுவை உணவின் நறுமணம் அந்த சன்னல் வழியே நுழைந்து, அவரது மூக்கைத் துளைத்தது. அவர் உடனே, தான் தயார் செய்திருந்த சோற்றை ஒரு தட்டில் பரிமாறி, அந்தச் சன்னலுக்கருகே அமர்ந்தபடி, உணவகத்திலிருந்து வந்த நறுமணத்தை முகர்ந்தவாறு, உணவை முடித்தார். அடுத்து வந்த நாள்களில், இந்தப் பழக்கம் தொடர்ந்தது.
ஒருநாள், அவரைக் காணவந்த நண்பர் ஒருவர், அவரை அழைத்துக்கொண்டு, அந்த உணவகத்திற்குச் சென்றார். உணவகத்தில் அமர்ந்து இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, ஏழை மாணவர், அந்த உணவகத்திலிருந்து மேலே வரும் நறுமணத்தின் உதவியோடு தான் உணவு உண்பதைப்பற்றிக் கூறினார். அவர்களது உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த உணவகத்தின் உரிமையாளர், தன் உணவகத்தின் நறுமணத்தைப் பயன்படுத்திய மாணவர், தனக்கு பணம் செலுத்தவேண்டுமெனக் கூறினார். மாணவர் மறுத்தார்.
இருவரும், அவ்வூரில் இருந்த நீதிபதியிடம் சென்றனர். வழக்கைச் செவிமடுத்த நீதிபதி, மாணவரிடம், "உணவகத்தின் நறுமணத்தை நீ முகர்ந்தது உண்மையா?" என்று கேட்டார். மாணவர் 'ஆம்' என்று சொன்னதும், "சரி, உன்னிடம் எவ்வளவு பணம் உள்ளதோ, அதையெல்லாம் என்னிடம் கொண்டு வா" என்று கூறி, மாணவரை அனுப்பினார். மாணவர் தன் அறைக்குச் சென்று, தன் மேற்படிப்புக்காக சேர்த்துவைத்திருந்த பணத்தையெல்லாம் கொண்டுவந்தார். அவை அனைத்தும் நாணயங்களாக இருந்தன.
நாணயங்கள் இருந்த பையைக் கண்டதும், உணவக உரிமையாளர் பெரும் மகிழ்ச்சியடைந்தார். நீதிபதி, தன் பணியாளரிடம், ஒரு வெண்கலக் கிண்ணத்தைக் கொண்டுவரச் சொன்னார். பின்னர், அந்தப் பையில் இருந்த நாணயங்களை எடுத்து, ஒவ்வொன்றாக அந்தக் கிண்ணத்தில் போட்டார். ஒவ்வொரு நாணயமும், ஒலியெழுப்பிய வண்ணம் கிண்ணத்தில் விழுந்தன.
பையில் இருந்த நாணயங்கள் அனைத்தையும் கிண்ணத்தில் போட்ட நீதிபதி, மீண்டும் அவற்றை பையில் போட்டு, அந்த மாணவரிடம் கொடுத்தார். இதைக்கண்டு அதிர்ச்சியுற்ற உரிமையாளர், "எனக்குச் சேரவேண்டிய பணம் எங்கே?" என்று கேட்டார். அதற்கு நீதிபதி, "அவர் முகர்ந்த நறுமணத்திற்கு ஈடாக, நீங்கள் நாணயங்களின் ஒலியைக் கேட்டுவிட்டீர்கள். அதுதான் உங்களுக்குச் சேரவேண்டியது" என்று தீர்ப்பளித்தார்.
No comments:
Post a Comment