Monday, 21 September 2020

முன்னேற்றத்தின் இலக்கணம்

 விண்ணகம் நோக்கி...


தன்னை நம்பி வந்தவர்களுக்குத் துரோகம் செய்துவிட்டு, தான் மட்டும் நன்றாக இருக்கவேண்டும் என்று யார் நினைக்கின்றார்களோ, அத்தகையவர்களை கடவுள் ஒருபோதும் சொர்க்கத்தில் அனுமதிப்பதில்லை

மேரி தெரேசா: வத்திக்கான்

ஒரு சமயம் ஒருவர் தனது வளர்ப்பு நாயோடு குதிரையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது இடி இடித்தது. மின்னல் மின்னியது. மின்னல் தாக்கியதில் அவர் இறந்துவிட்டார். பின்னர் அவர் குதிரையோடும், நாயோடும் சொர்க்கத்திற்குச் சென்றார். அங்கே வாசலில் சொர்க்கம் என்று எழுதப்பட்ட பலகை ஒன்றைப்  பார்த்தார். அங்கு வாயிலில் நீர் ஊற்று ஒன்று இருந்தது. அங்கு நின்றுகொண்டிருந்த வாயில்காவலரிடம், இந்த நீரை நான் குடிக்கலாமா என்று கேட்டார். அதற்கு வாயில்காப்போர், ஓ தாராளமாக என்றார். எனது குதிரைக்கும் தாகம்தான். அது குடிக்கலாமா என்று அவர் கேட்டபோது, இல்லை, இந்த தண்ணீர் மனிதருக்கு மட்டுமே என்று காவலர் சொன்னார். அப்படியானால் எனது நாய்.. இல்லை இல்லை, அது உள்ளேயே வரக்கூடாது என்று கண்டிப்பாகச் சொன்னார் காவலர். சரி, இந்த இடத்திற்குப் பெயர் என்ன என்று அவர் கேட்க, இது சொர்க்கம் என்று காவலர் கூறியதும், இப்படியொரு சொர்க்கமே எனக்குத் தேவையில்லை என்று சொல்லிவிட்டு அவர் மேலும் நடந்தார். சிறிது தூரம் சென்றபின்னர், அங்கேயும் சொர்க்கம் என்றே, பலகை ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. அந்த இடத்து வாசலிலும் தண்ணீர் இருந்தது. அங்கு நின்றுகொண்டிருந்த காவல்காரரிடம், இந்த தண்ணீரை நான் குடிக்கலாமா என்று அவர் கேட்டார். ஓ குடிக்கலாமே என்று காவலர் கூறினார். உடனே அவர், எனது குதிரையும் நாயும் குடிக்கலாமா என்று கேட்டார். ஓ குடிக்கலாமே என்று காவலர் சொன்னார். இந்த இடத்திற்குப் பெயர் என்ன என்று அவர் கேட்க, இது உண்மையான சொர்க்கம் என்றார் காவலர். அப்படியானால் அங்கே ஒரு சொர்க்கம் என்ற பலகை தொங்கியதே என்று, அவர் கேட்டார். அது கடவுளின் வேலை. நீங்கள், உங்களது குதிரையையும் நாயையும் விட்டுவிட்டு, நீங்கள் மட்டும் தண்ணீர் பருகியிருந்தால், அது உங்களது சுயநலத்தைத் தோலுரித்துக் காட்டியிருக்கும். உடனடியாக கடவுள் உங்களை உள்ளே தள்ளியிருப்பார். ஏனெனில் அந்த இடத்திற்குப் பெயர் நரகம், உங்களை சோதிக்கவே, கடவுள் இப்படியொரு பலகையை மாட்டியிருந்தார் என்று காவலர் கூறினார். இது ஒரு கற்பனைக் கதை என்றாலும், நல்லதொரு பாடத்தை நமக்குக் கற்றுத் தருகிறது. தன்னை நம்பி வந்தவர்களுக்குத் துரோகம் செய்துவிட்டு, தான் மட்டும் நன்றாக இருக்கவேண்டும் என்று யார் நினைக்கின்றார்களோ, அத்தகையவர்களை கடவுள் ஒருபோதும் சொர்க்கத்தில் அனுமதிப்பதில்லை. “நான் மட்டும் வாழ்வது வாழ்க்கையல்ல. என்னோடு இருநூறு பேர் சேர்ந்து வாழ்வதுதான் வாழ்க்கை. நான் மட்டும் முன்னேறினால் பெரிய விடயம் அல்ல, என்னைச் சுற்றி இருக்கின்ற எல்லாருமே முன்னேறவேண்டும்”. (இது திருவாளர் சுகி சிவம் அவர்கள் சொன்ன கதை)

No comments:

Post a Comment