Wednesday, 30 September 2020

2 கோடி பெண் குழந்தைகள் பள்ளிப் படிப்பை நிறுத்தும் அபாயம்

 நொபெல் அமைதி விருது வென்றுள்ள மலாலா யூசுப்சாய்


மலாலா யூசுப்சாய் : 12 வயது வரை அனைவருக்கும் கல்வி வழங்கப்படவேண்டும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படவேண்டும் என வகுக்கப்பட்ட இலக்குகள், பேச்சளவிலேயே உள்ளன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கிருமி பாதிப்பு முழுமையாக மறைந்தாலும் உலகெங்கும் இரண்டு கோடி பெண் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லாத நிலையே இருக்கும் என கவலையை வெளியிட்டுள்ளார், நொபெல் அமைதி விருது வென்றுள்ள மலாலா யூசுப்சாய்.

ஐ.நா. பொதுஅவைக் கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்க உள்ளதையொட்டி இடம்பெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற்று உரையாற்றிய பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுப்சாய் அவர்கள், பெண் குழந்தைகள் கல்விக்காக, உலக நாடுகளால், பல்வேறு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளாகியும், பெண்கள் கல்விக்காக பெரிதாக எதையும் செய்யவில்லை என்றார்.

அமைதியை உருவாக்கவும், புலம்பெயர்ந்தோரைப் பாதுகாக்கவும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கிலும், ஓர் அடி கூட எடுத்து வைக்கவில்லை எனவும் குறைகூறினார் மலாலா.

12 வயது வரை அனைவருக்கும் கல்வி வழங்கப்படவேண்டும்,  சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படவேண்டும் என வகுக்கப்பட்ட இலக்குகள் பேச்சளவிலேயே உள்ளன என உரைத்த, நொபெல் அமைதி விருது பெற்ற மலாலா அவர்கள், பெண் கல்விக்காக செலவிட வேண்டியத் தொகை, மற்றும், இதுவரை செலவிட்டத் தொகை ஆகியவற்றிற்கு இடையே உள்ள இடைவெளி, பல ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது எனவும் தெரிவித்தார்.

கொரோனா தொற்று பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் வந்தாலும், உலகெங்கும் குறைந்தபட்சம் இரண்டு கோடி பெண் குழந்தைகள், மீண்டும் பள்ளிக்கு செல்ல மாட்டார்கள் என்ற அச்சம் இருக்கும் நிலையில், இதைத் தடுப்பதற்கு உலக நாட்டுத் தலைவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார் மலாலா. (Times of India) 

No comments:

Post a Comment