Wednesday, 13 March 2019

பூமியைப் பேணுதல்: திருத்தந்தையின் விண்ணப்பம்

பூமியைப் பேணுதல்: திருத்தந்தையின் விண்ணப்பம் இறைவா உமக்கே புகழ் - திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய திருமடல்

"இறைவா உமக்கே புகழ்" என்ற திருமடலின்அறிமுகப் பிரிவின் 4வது பகுதியாக, "என் வேண்டுகோள்" என்ற தலைப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பகிர்ந்துள்ள ஒரு சில எண்ணங்கள்...
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்
"இறைவா உமக்கே புகழ் - நம் பொதுவான இல்லமான பூமியைப் பேணுதல்" என்ற தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய திருமடலின் அறிமுகப் பிரிவில், நான்கு பகுதிகள் உள்ளன.
முதல் பகுதியில், தனக்குமுன் தலைமைப் பொறுப்பில் இருந்த புனிதத் திருத்தந்தையர் 23ம் ஜான், ஆறாம் பவுல், மற்றும், 2ம் ஜான்பால் ஆகியோரும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் இவ்வுலகத்தின் மீதும், சுற்றுச்சூழல் மீதும் அக்கறை கொண்டு வெளியிட்ட கூற்றுகளை, திருத்தந்தை, நினைவுகூர்ந்துள்ளார்.
2வது பகுதியில், இயற்கை மீது அக்கறை கொண்ட ஏனைய கிறிஸ்தவ சபைகள் மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பாராட்டியுள்ளார். குறிப்பாக, கிறிஸ்தவ ஒன்றிப்பு அவையின் முதுபெரும் தந்தை, பர்த்தலோமேயு அவர்கள், படைப்பின் மீது நம் கவனத்தைத் திருப்புவதற்கு, கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் முயற்சிகளைக் குறிப்பிட்டு, திருத்தந்தை தன் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது பகுதி, அசிசி நகர் புனித பிரான்சிஸ் இயற்கை மீது கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாட்டை எடுத்துரைக்கிறது. இந்த அறிமுகப் பிரிவின் இறுதியில், 4வது பகுதியாக, "என் வேண்டுகோள்" (My appeal) என்ற தலைப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பகிர்ந்துள்ள ஒரு சில எண்ணங்கள் இதோ:
நாம் பகிர்ந்து வாழும் இல்லத்தின் பாதுகாப்பை எண்ணற்ற வழிகளில் உறுதி செய்யும் அனைவருக்கும், குறிப்பாக, சுற்றுச்சூழல் சீரழிவால் பாதிக்கப்பட்டுள்ள வறியோருக்காக அயர்வின்றி உழைத்துவரும் பலருக்கும் நன்றி. இளையோர், மாற்றத்தை வலியுறுத்துகின்றனர். சுற்றுச்சூழல் நெருக்கடியையும், புறக்கணிக்கப்பட்டோர் துன்பத்தையும் குறித்து சிந்திக்காமல், சிறந்ததோர் எதிர்காலத்தை உருவாக்குவதாகக் கூறுவோரைக்கண்டு, இளையோர் வியப்படைகின்றனர்.
சுற்றுச்சூழல் ஆபத்திற்கு தீர்வுகள் காண்பதில் தடைகள் உருவாகக் காரணம், இதை எதிர்ப்பது மட்டுமல்ல, இதைக் குறித்து அக்கறையின்றி இருப்பதும் ஆகும். 'கடவுளின் படைப்பை மனிதர்கள் தவறாகப் பயன்படுத்தியதால் விளைந்த சீரழிவைத் தடுக்க ஒவ்வொருவரின் ஈடுபாடும் தேவை' என்று, தெற்கு ஆப்ரிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.
கத்தோலிக்கத் திருஅவையின் சமுதாயப் படிப்பினைகளில் ஒன்றாக வெளிவந்துள்ள இத்திருமடல், நம்மைச் சூழ்ந்துள்ள இந்த நெருக்கடியை எதிர்கொள்ள உதவும் என்பது என் நம்பிக்கை. (இறைவா உமக்கே புகழ்: எண் 13-15)
இந்த விண்ணப்பத்துடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மடலின் அறிமுகப் பிரிவை நிறைவுசெய்துள்ளார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...