Monday, 17 December 2018

விண்மீன்களைவிட, 500 மடங்கு பிளாஸ்டிக் துகள்கள் கடலில்...

விண்மீன்களைவிட, 500 மடங்கு

 பிளாஸ்டிக் துகள்கள் கடலில்...
 இந்தோனேசியா நாட்டில் பிளாஸ்டிக் கழிவுகள்
ஒவ்வொரு நிமிடமும், ஒரு லாரி அளவு பிளாஸ்டிக் பொருள்கள் கடலில் கலக்கப்படுகின்றன - ஐ.நா.வின் சுற்றுச் சூழல் அறிக்கை
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
நாம் தற்போது பயன்படுத்திவரும் பிளாஸ்டிக் பொருள்களின் அளவைக் குறைக்கவில்லையெனில், 2050ம் ஆண்டில், நமது கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கையை விட பிளாஸ்டிக் கழிவுகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று ஐ.நா. அவையின் தலைவர், எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.நா. அவையின் 73வது அமர்வின் தலைவராகப் பணியாற்றி வரும் María Fernanda Espinosa Garcés அவர்கள், டிசம்பர் 4, இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசிய வேளையில், தான் தலைவராக இருக்கும் காலத்தில், பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு குறித்து, பயனாளர்களும், அரசுகளும் விழிப்புணர்வு கொள்வதை, தன் தலையாயப் பணியாகக் கருதுவதாகக் கூறினார்.
ஒவ்வொரு நிமிடமும், ஒரு லாரி அளவு பிளாஸ்டிக் பொருள்கள் கடலில் கலக்கப்படுகின்றன என்றும், ஒவ்வொர் ஆண்டும், 80 இலட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் சேர்கின்றன என்றும் ஐ.நா.வின் சுற்றுச் சூழல் அறிக்கை கூறுகிறது.
நாம் வான்வெளியில் காணக்கூடிய விண்மீன்களை  விட, 500 மடங்கு அதிகமான பிளாஸ்டிக் துகள்கள் நம் கடல்களில் கலந்துள்ளன என்பதையும், இவை, கடல் வாழ் உயிரினங்களை அழிக்கும் முதல் எதிரிகள் என்பதையும் உணர்ந்த ஐ.நா. அவை, கடந்த ஆண்டு, "கடல்களைத் தூய்மையாக்குவோம்" என்ற முயற்சியை மேற்கொண்டது.

No comments:

Post a Comment