Wednesday, 11 February 2015

செய்திகள் - 10.02.15

செய்திகள் - 10.02.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை - ஓய்வின்றித் தேடும் இதயங்கள் கடவுளைக் கண்டுகொள்ளும்

2. கர்தினால் Becker மறைவுக்கு திருத்தந்தை இரங்கல்

3. உக்ரேய்னில் போரைத் தவிர்ப்பதற்கு ஒரே வழி உரையாடல், திருப்பீடம்  

4. இந்தியாவில் சட்டம், சமய சுதந்திரம், அமைதி காக்கப்படுமாறு ஆயர்கள் வலியுறுத்தல்

5. மதம் அரசியலுக்குப் பயன்படுத்தப்படுவதற்கெதிராக டெல்லி தேர்தலில் மக்கள் தீர்ப்பு

6. இந்தியாவில் 2014ல் 7,000 கிறிஸ்தவர்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டனர்

7. தேசிய, பன்னாட்டு அதிகாரிகள் ஜிகாதிகளிடமிருந்து நிலங்களை மீட்டுத்தர வேண்டும்

8. 23வது உலக கத்தோலிக்க நோயாளர் தினம்

9. கல்வி கற்க முயற்சிக்கும் சிறுமிகள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு, ஐ.நா.

10. தினசரி உணவில் கறிவேப்பிலையைத் தவிர்க்கக் கூடாது

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை - ஓய்வின்றித் தேடும் இதயங்கள் கடவுளைக் கண்டுகொள்ளும்

பிப்.10,2015. பளபளக்கும் வசதியான படுக்கைகளில் அமர்ந்து கொண்டு பத்திரிகைகள் வழியாகவும், கணனிகளில் வேலை செய்துகொண்டும் கடவுளைத் தேடினால் அவரைக் காண முடியாது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடவுளைத் தேடுதல் என்பது, ஆபத்தான பாதையில் அடியெடுத்து வைப்பதற்குத் துணிவைக் கொண்டிருப்பதாகும், அதாவது, ஓய்வின்றித் தேடும் துணிச்சலான இதயங்களைக் கொண்டிருப்பதாகும் என்றும் கூறினார் திருத்தந்தை.
தொடக்க நூலில் கடவுளின் உருவில் மனிதர் படைக்கப்பட்டது (தொ.நூ.1:20-2:4a) குறித்துப் பேசும் இந்நாளின் முதல் வாசகத்தின் அடிப்படையில், வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலை நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தனது மூலத்தையும், தனித்துவத்தையும் தேடும் கிறிஸ்தவர் தேர்ந்தெடுக்கும் சரியான மற்றும் தவறான பாதைகள் பற்றிப் பேசிய திருத்தந்தை, கணனியிலும், கலைக்களஞ்சியங்களிலும் கடவுளின் உருவை நிச்சயமாகக் காண முடியாது என்றும் கூறினார்.
கடவுளின் உருவைக் கண்டுகொள்ளவும், நமது சொந்த தனித்துவத்தைப் புரிந்துகொள்ளவும் ஆபத்தான பாதையில் துணிச்சலுடன் தொடர வேண்டும், இல்லாவிடில், நாம் ஒருபோதும் கடவுளின் முகத்தையும், அவரின் உருவத்தையும்  காண முடியாது என்றும் எச்சரித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இதற்காக நாம் மேற்கொள்ளும் பயணத்தில் கடவுளை அனுமதிப்பது சோதனை நிறைந்தது என்றும், இறைவாக்கினர்கள் எலிசா, எரேமியா, யோபு போன்றவர்கள் ஆபத்துக்களைத் துணிச்சலுடன் சந்தித்தனர் என்றும் கூறிய திருத்தந்தை, தங்களின் தனித்துவத்தைத் தேடும் பாதையில் அடியெடுத்து வைப்பதற்குப் பயந்த மக்களை இயேசு சந்தித்தது பற்றி இன்றைய நற்செய்தி (மாற்.7:1-13)கூறுகிறது என்றார்.
இரு அடையாள அட்டைகளாகவுள்ள இவ்விரு பகுதிகள் பற்றி தியானிக்க நாம் அழைக்கப்படுகிறோம், சரியான பாதையில் நாம் எப்பொழுதும் இருப்பதற்கு கடவுளிடம் வரம் கேட்போம் என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. கர்தினால் Becker மறைவுக்கு திருத்தந்தை இரங்கல்

பிப்.10,2015. ஜெர்மன் நாட்டு இயேசு சபை கர்தினால் Karl Josef Becker அவர்கள் இறந்ததை முன்னிட்டு தனது இரங்கல் தந்திச் செய்தியை, உலக இயேசு சபை அதிபர் அருள்பணியாளர் Adolfo Nicolas Pachon அவர்களுக்கு அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கர்தினால் Becker அவர்கள், திருப்பீடத்துக்கும், இறையியல் ஆய்வுக்கும் பல ஆண்டுகள் ஆற்றிய நற்பணியைப் பாராட்டியுள்ள திருத்தந்தை, இயேசு சபையினர் அனைவருக்கும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களும் அருள்பணி Adolfo Nicolas அவர்களுக்கு இரங்கல் தந்திச் செய்தியை அனுப்பியுள்ளார்.
இச்செவ்வாயன்று உரோம் நகரில் இறந்த 86 வயது கர்தினால் Karl Josef Becker அவர்கள், விசுவாசக்கோட்பாட்டுத் திருப்பேராயத்தில் பல ஆண்டுகள் ஆலோசகராகப் பணியாற்றியவர்.
ஏற்புடமை பற்றி கத்தோலிக்கத் திருஅவைக்கும், லூத்தரன் கூட்டமைப்புக்கும் இடையே இடம்பெற்ற உரையாடலிலும் (1997-1999), புனித பத்தாம் பத்திநாதர் அமைப்போடு திருப்பீட அவை நடத்திய எட்டு உரையாடல் அமர்வுகளிலும் (2009-2011) ஈடுபட்டிருந்த இவர், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் 2012ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.
1928ம் ஆண்டில் ஜெர்மனியில் பிறந்த கர்தினால் Becker அவர்கள், தனது இருபதாவது வயதில் இயேசு சபையில் சேர்ந்தார். 1958ம் ஆண்டில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர், இறையியலில் முனைவர் பட்டம் பெற்றவர். உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு (1969-2003) மேலாகவும், ஓய்வுபெற்ற பின்னரும் கோட்பாட்டு இறையியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. உக்ரேய்னில் போரைத் தவிர்ப்பதற்கு ஒரே வழி உரையாடல், திருப்பீடம்  

பிப்.10,2015. உக்ரேய்னில் போரைத் தவிர்ப்பதற்கும், பிரச்சனைகள் தீர்க்கப்படவும், உரையாடலே ஒரே வழி என்று திருத்தந்தையும் திருப்பீடமும் வலியுறுத்துவதாக திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் கூறினார்.
உக்ரேய்ன் நாட்டின் நெருக்கடி நிலை குறித்த திருப்பீடத்தின் நிலைப்பாடு குறித்து இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் விளக்கிய அருள்பணி லொம்பார்தி அவர்கள், சண்டைகள் இடம்பெறும் இடங்களில், பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதியைக் கொண்டுவருமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பல தருணங்களில் அழைப்பு விடுத்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
போர்களில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்காகச் செபிக்குமாறு திருத்தந்தை விண்ணப்பித்து வருவதையும் குறிப்பிட்ட அருள்பணி லொம்பார்தி அவர்கள், உக்ரேய்ன் நாட்டின் கிழக்குப் பகுதி உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் நெருக்கடி நிலைகளை திருப்பீடம் மிகவும் அக்கறையுடன் கவனித்து வருகிறது என்று கூறினார்.
இம்மாதம் 16ம் தேதி முதல் 21ம் தேதி வரை அத் லிமினா சந்திப்பை முன்னிட்டு உக்ரேய்ன் ஆயர்களைச் சந்திப்பதற்கு திருத்தந்தை ஆவலோடு காத்திருப்பதாகவும் கூறினார் அருள்பணி லொம்பார்தி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. இந்தியாவில் சட்டம், சமய சுதந்திரம், அமைதி காக்கப்படுமாறு ஆயர்கள் வலியுறுத்தல்

பிப்.10,2015. இந்தியாவில் அதிகரித்துவரும் அடிப்படைவாதமும், வகுப்புவாதமும் நாட்டின் சமூக வாழ்வையும், சமயச்சார்பற்ற தன்மையையும் அச்சுறுத்திவரும்வேளை, நாட்டில் சட்டமும், சமய சுதந்திரமும், அமைதியும் காக்கப்படுமாறு ஆயர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.
CCBI என்ற இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர்கள் பேரவையின் 140 ஆயர்கள் பெங்களூருவில் ஒரு வாரக் கூட்டத்தை இத்திங்களன்று நிறைவுசெய்து வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் ஆலயங்கள் எரிக்கப்பட்டது, அருள்பணியாளர்கள், பொதுநிலையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், கிறிஸ்தவத்திலிருந்து மக்களை இந்து மதத்துக்கு மொத்தமாக மாற்றியது போன்ற கவலைதரும் நிகழ்வுகளையும் ஆயர்கள் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்திய அரசியல் அமைப்பு எண் 25ல் உறுதி வழங்கப்பட்டுள்ள மனச்சான்றின் சுதந்திரத்துக்குச் சவால் விடுக்கும் விதத்தில் அரசுத் தலைவர்கள் வெளியிட்டுள்ள அதிர்ச்சிதரும் அறிக்கைகள் குறித்தும் கவலை தெரிவித்துள்ள ஆயர்கள், நாட்டின் கல்வி அமைப்புக்கு முன்வைக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளனர்.
பண்பாட்டுமயமாக்கலை நடைமுறைப்படுத்தும் வழிகளில், திருவழிபாட்டின் மரபுகளும், மாண்பும் காக்கப்படும்பொருட்டு திருவழிபாடு குறித்த விதிமுறைகளைப் பின்பற்றுவதில் கவனம் செலுத்துமாறும் ஆயர்களின் அறிக்கை வலியுறுத்துகிறது. 
திருவழிபாடும் வாழ்வும் என்ற தலைப்பில் இம்மாதம் 3ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெற்ற CCBI ஆயர்கள் பேரவையின் 27வது ஆண்டுக் கூட்டத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட இவ்வறிக்கையில், அப்பேரவையின் தலைவர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ், உதவித் தலைவர் கோவா பேராயர் பிலிப் நேரி ஃபெராரோ, பொதுச் செயலராக கோழிக்கோடு ஆயர் வர்க்கீஸ் சக்களக்கள் ஆகிய மூவரும் கையெழுத்திட்டுள்ளனர்.
இதில் இந்தியாவின் 131 இலத்தீன் மறைமாவட்டங்களின் 140 ஆயர்கள் கலந்து கொண்டனர்.

ஆதாரம் : Ind.Sec /வத்திக்கான் வானொலி

5. மதம் அரசியலுக்குப் பயன்படுத்தப்படுவதற்கெதிராக டெல்லி தேர்தலில் மக்கள் தீர்ப்பு

பிப்.10,2015. பிஜேபி கட்சிக்கும், மதத்தின் பெயரால் வாக்காளர்களைத் திசை திருப்புவதற்கு அக்கட்சி எடுத்த முயற்சிக்கும் எதிராக டெல்லி மக்கள் வாக்களித்திருப்பது, பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு ஒரு செய்தியைச் சொல்கின்றது என்று டெல்லி பேராயர் அனில் கூட்டோ அவர்கள் கருத்து தெரிவித்தார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரின் கட்சி, அமோக வெற்றி பெற்றுள்ளது குறித்து ஆசிய செய்தி நிறுவனத்துக்குத் கருத்தை தெரிவித்த டெல்லி பேராயர் அனில் கூட்டோ அவர்கள், பிரதமர் மோடி அவர்கள் தனது நடவடிக்கைகளை உண்மையாய்ச் சிந்திக்க வேண்டுமென்று கூறினார்.
இந்திய மக்களின் அதிருப்தியையும், ஆலயங்கள் தாக்கப்பட்டதன் எதிர்மறை விளைவையும் இத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன என்றும் கூறிய டெல்லி பேராயர், ஐந்து ஆலயங்கள் தாக்கப்பட்டபோது பிஜேபி அரசு மௌனம் காத்ததும் பற்றியும் சுட்டிக் காட்டினார்.
டெல்லி சட்டப் பேரவையின் 70 தொகுதிகளுக்கானத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
2014ம் ஆண்டுப் பொதுத் தேர்தல்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிஜேபி முதல்முறையாக படுதோல்வியைத் தழுவியுள்ளது.
பிரதமர் மோடி அவர்கள், அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை, தொலைபேசியில் அழைத்து முதல் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

ஆதாரம் :Asianews/வத்திக்கான் வானொலி

6. இந்தியாவில் 2014ல் 7,000 கிறிஸ்தவர்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டனர்

பிப்.10,2015. இந்தியாவில் 2014ம் ஆண்டில் கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவ நிறுவனங்கள் மீது 120 தாக்குதல்கள் நடத்தப்பட்டன மற்றும் ஏழாயிரத்துக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டனர் என்று ஒரு கத்தோலிக்க அமைப்பு கூறியது.
மும்பை நகரை மையமாகக் கொண்டு இயங்கும் CSF என்ற கத்தோலிக்க பொதுநிலையினர் அமைப்பு 2013ம் ஆண்டு டிசம்பருக்கும், 2014ம் ஆண்டு டிசம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் கிறிஸ்தவர்கள் எதிர்கொண்ட அச்சுறுத்தல்கள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
இக்காலக் கட்டத்தில், பிஜேபி ஆளும் மத்திய பிரதேசத்தில் 23, சத்திஷ்காரில் 19, காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் 14 என நாடெங்கும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 120 தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்று இவ்வறிக்கை கூறுகிறது.
1,600 பெண்கள், 500 சிறார், 300 குருக்கள் மற்றும் பொதுநிலைத் தலைவர்கள் உட்பட ஏழாயிரத்துக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள் அச்சுறுத்தல், வன்முறை மற்றும், புலம்பெயர்வை எதிர்கொண்டனர் என்று அவ்வறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : Hindustan Times/வத்திக்கான் வானொலி

7. தேசிய, பன்னாட்டு அதிகாரிகள் ஜிகாதிகளிடமிருந்து நிலங்களை மீட்டுத்தர வேண்டும்

பிப்.10,2015. ஈராக்கில் ஐஎஸ் இஸ்லாமிய அரசால் தங்களின் வீடுகளையும் சொத்துக்களையும் இழந்துள்ள குடும்பங்களுக்கு ஆதரவு வழங்குவதற்குத் தேவையான நிதியை, ஈராக் மத்திய அரசும், குர்திஸ்தான் மாநில அரசும் ஒதுக்க வேண்டுமென கல்தேய வழிபாட்டுமுறை ஆயர்கள் கேட்டுள்ளனர்.
பாக்தாத் நகரில் கல்தேய வழிபாட்டுமுறை ஆயர்கள் நடத்திய ஆண்டுக் கூட்டத்தின் இறுதியில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு ஆயர்கள் அரசுகளை வலியுறுத்தியுள்ளனர்.
ஐஎஸ் இஸ்லாமிய அரசின் ஜிகாதிகளால் ஆக்ரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேறி துன்புறும் மக்களுக்கு அவசகரகால மனிதாபிமான உதவிகளை வழங்குமாறும், அப்பகுதிகளை மீட்டுத்தருமாறும் ஈராக்கின் தேசிய மற்றும் பன்னாட்டு அதிகாரிகளுக்கும் விண்ணப்பித்துள்ளனர் ஆயர்கள்.
அசீரிய மறைசாட்சிகளின் நூறாம் ஆண்டையும் நினைவுகூர்ந்த ஆயர்கள், ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்து உயிர்ப்பு ஞாயிறுக்கு அடுத்துவரும் வெள்ளிக்கிழமையன்று இம்மறைசாட்சிகள் தினம் கடைப்பிடிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
1915க்கும் 1916ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அசீரிய மற்றும் சிரிய வழிபாட்டுமுறை கிறிஸ்தவர்களுக்கு எதிராக, இளம் துருக்கியர் நடத்திய படுகொலைத் தாக்குதல்களில் 7,50,000 பேர் கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது.

ஆதாரம் :Fides/வத்திக்கான் வானொலி

8. 23வது உலக கத்தோலிக்க நோயாளர் தினம்

பிப்.10,2015. பார்வையற்றோர்க்குக் கண் ஆனேன், காலூனமுற்றோர்க்குக் கால் ஆனேன்(யோபு 29:15) என்ற தலைப்பில் 23வது உலக நோயாளர் தினம் இப்புதனன்று  கத்தோலிக்கத் திருஅவையில்  கடைப்பிடிக்கப்படுகிறது.
நோயாளிகள், சமூகநலப் பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் இத்துறையில் பணிபுரிவோர் அனைவரும் இதயத்தின் ஞானம் பற்றிச் சிந்திக்குமாறு, இந்நாளுக்கான தனது செய்தியில் கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 
புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் 1992ம் ஆண்டில் இந்த உலக நோயாளர் தினத்தை உருவாக்கினார். லூர்து அன்னை விழாவாகிய பிப்ரவரி 11ம் தேதி இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
5,167 மருத்துவமனைகள், 17,322 சிறிய மருத்துவமனைகள், 648 தொழுநோயாளர் மையங்கள், 15,699 முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி இல்லங்கள், 10,124 கருணை இல்லங்கள், 11,596 பால்வாடிகள், 14,744 திருமண ஆலோசனை மையங்கள், 3,663 சமூக மறுவாழ்வு மையங்கள், 36,389 மற்ற வகையான நிறுவனங்கள் என 1,15,352 நலவாழ்வு மையங்கள் கத்தோலிக்கத் திருஅவையில் உள்ளன.

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி

9. கல்வி கற்க முயற்சிக்கும் சிறுமிகள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு, ஐ.நா.

பிப்.10,2015. கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது எழுபது நாடுகளில், பள்ளிகள், குறிப்பாக, கல்வியில் பாலினச் சமத்துவத்துக்காக உழைக்கும் சிறுமிகள், பெற்றோர் மற்றும் ஆர்வலர்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் வெளியிட்டுள்ள ஒரு புதிய அறிக்கை கூறுகிறது.
கல்வி கற்க முயற்சிக்கும் சிறுமிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், 2009க்கும் 2014ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், குறைந்தது எழுபது நாடுகளில், சிறுமிகள் பயிலும் பள்ளிகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
சிறுமிகள் மற்றும் பெண்கள் கல்வி பெறுவதற்குக் கொண்டிருக்கும் உரிமை, அந்தந்த சமுதாயத்தில் நிலவும் பாலின வேறுபாட்டுக்கும், பாலின அடிப்படையில் நிலவும் அடக்குமுறைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்ற எண்ணத்தில் இத்தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அவ்வறிக்கை கூறுகிறது.
பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளைக் களையும் ஐ.நா. குழுவுக்குச்(CEDAW) சமர்ப்பிப்பதற்கென எடுக்கப்பட்ட இந்த ஆய்வு, பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுவதால் சமூகத்தில் கடுமையான விளைவுகள் ஏற்படுவதாக எச்சரிக்கிறது.
பாகிஸ்தானின் பேஷ்வார் இராணுவப் பள்ளியில் கடந்த ஆண்டு டிசம்பரில் தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறார் கொல்லப்பட்டது, கடந்த ஆண்டு ஏப்ரலில் நைஜீரியாவில் போக்கோ ஹாரம் அமைப்பு ஏறக்குறைய 300 சிறுமிகளைக் கடத்தியது போன்வற்றைக் குறிப்பிட்டுள்ளது இவ்வறிக்கை.

ஆதாரம் :UN/வத்திக்கான் வானொலி

10. தினசரி உணவில் கறிவேப்பிலையைத் தவிர்க்கக் கூடாது

பிப்.10,2015. கேரட்டைவிட, கறிவேப்பிலையில் நான்கு மடங்கு சத்துக்கள் அதிகம் உள்ளன என்பதால் தினசரி உணவில் கறிவேப்பிலையை தவிர்க்கக் கூடாது என கொடைக்கானல் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத் தலைவர் அறிவியலாளர் பேராசிரியர் ராஜாங்கம் கூறினார்.
அதிக கால்சியம் சத்து, வைட்டமின் '' சத்து நிறைந்த கறிவேப்பிலையை உண்ணாமல் ஒதுக்கினால் இச்சத்துக்கள் நமக்கு கிடைக்காமல் குறைந்து போகும் என்று கூறும் ராஜாங்கம், கேரட்டில் 1890 என்ற அளவில் விட்டமின் '' சத்துக்கள் உள்ளன. அதுவே கறிவேப்பிலையில் நான்கு மடங்கு அதிகமாக நிறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
உணவில் கறிவேப்பிலையை ஒதுக்காமல் உட்கொண்டால் எலும்புகளுக்கு கால்சிய சத்தும், விட்டமின் ஏ சத்துக்களும் கிடைத்து நலமாக வாழலாம், என்ற அவர், கறிவேப்பிலையில் சல்பர், பொட்டாஷியம் சத்துக்கள், விட்டமின் ''யை விட சற்று குறைவாக காணப்படுவதால் பெண்களுக்கு கூந்தல் கருமையாகவும் அடர்த்தியாகவும் வளரும் என்று கூறினார்.
மைசூரு 'புட் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்' அமைப்பின் ஆராய்ச்சியில் கறிவேப்பிலையில் சத்துக்கள் நிறைந்துள்ளன என, கண்டுபிடித்துள்ளனர். தேசிய தர நிர்ணய அளவீடான 'ஐ.யு' (இன்டர்நேஷனல் யூனிட்)குறியீட்டின் அளவு 0.6 மைக்ரோ கிராம்.

ஆதாரம் : தினமலர்/வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment