Wednesday 11 February 2015

செய்திகள் - 09.02.15

செய்திகள் - 09.02.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : படைப்பைப் பாதுகாத்து, மேம்படுத்த அழைப்பு

2. திருத்தந்தை : போதித்தலும் குணப்படுத்தலும் கிறிஸ்தவப் பணி

3. திருத்தந்தை : மனிதர்கள் வியாபாரப் பொருளாக நடத்தப்படுவது வெட்கத்துக்குரிய காயம்

4. திருத்தந்தை : இயேசுவின் குணமளிக்கும் பணியில் திருஅவை தொடர்ந்து உதவி வருகிறது

5. சிறார் பாதுகாப்பில் ஆயர்கள் பொறுப்புணர்விற்கு முக்கியத்துவம்

6. கர்தினால் தாக்லே : பிறரன்பு நடவடிக்கைகளுக்கு அழைப்புவிடுக்கிறது தவக்காலம்

7. அமைதியைக் கொணர இஸ்லாம் தீவிரவாதிகளுடன் பேச செஞ்சிலுவைச் சங்கம் தயார்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : படைப்பை முன்னோக்கிக் கொண்டுச் செல்லவேண்டியவர்கள் நாம்

பிப்.09,2015. இறைவன் இவ்வுலகைப் படைத்தார், அதேவேளை, நம் பாவத்தால் அழிவுக்குள்ளானவற்றை இயேசு மீண்டும் படைத்தார் என இத்திங்களன்று காலை சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
துவக்க நூலில் இறைவன் இவ்வுலகைப் படைத்தது குறித்த பகுதியையொட்டி தன் மறையுரையை வழங்கிய திருத்தந்தை, இறைவன் உலகைப் படைத்தார், நம் பாவத்தால் அழிவுக்குள்ளானவற்றை இயேசு மீண்டும் படைத்தார், அதேவேளை, அவ்வாறு படைக்கப்பட்டவைகளையும், விசுவாசத்தையும் தூய ஆவியார் பாதுகாக்கிறார் என கூறினார்.
இவ்வுலகைப் படைத்து இறைவன் நம்மிடமே ஒப்படைத்துள்ளார், அவ்வுலகை வளப்படுத்தவும், பாதுகாக்கவும் நமக்குக் கடமை உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதை அழிப்பதற்கல்ல, மாறாக படைப்பை முன்னோக்கிக் கொண்டுச் செல்வதற்கே நமக்கு அதிகாரம் உள்ளது, ஏனெனில் நம்மீது கொண்ட அன்பாலேயே அனைத்தையும் இறைவன் படைத்தார் என்றார்.
இயேசுவால் மீண்டும் படைக்கப்பட்டவைகளைப் பாதுகாக்கும் நோக்கில், அவரோடும் அவர் வழியாக இறைவனோடும் நாம் ஒப்புரவு கொள்ளவேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை : போதித்தலும் குணப்படுத்தலும் கிறிஸ்தவப் பணி

பிப்.09,2015. காயமுற்றிருக்கும் நம் அனைவரையும் குணப்படுத்தவும், நமக்கு போதிக்கவும் இயேசுவை அனுமதிப்போம் என இஞ்ஞாயிறன்று திருப்பலியின்போது அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏழைகள் மீது சிறப்புக் கவனம் செலுத்தி பணியாற்றிவரும் உரோம் நகரின் Pietralataவின் புனித மிக்கேல் தலைமைத்தூதர் பங்குதளத்திற்கு இஞ்ஞாயிறன்று சென்று திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போதித்தல் மற்றும் குணப்படுத்தல் என்ற தலைப்பில் மறையுரை வழங்கினார்.
நம்ம்மைக் குணப்படுத்தவும் நமக்கு போதிக்கவும் இயேசுவை நாம் அனுமதிப்பதன் வழியே, நாம் பிறர் காயங்களைக் குணப்படுத்தவும், பிறருக்குப் போதிக்கவும் உதவியைப் பெறுகின்றோம் என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தினமும் நற்செய்தியை வாசிக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
பெனித்தோ முசோலினியின் ஆட்சிக்காலத்தில் உரோம் நகர் சீரமைக்கப்பட்டபோது, அங்கிருந்து விரட்டப்பட்ட ஏழை மக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட Pietralata பகுதி, தற்போது ஏழைகளின் புகலிடமாக உரோம் நகர் எல்லைக்குள்ளேயே இருந்து வருகிறது. இப்பகுதிக்கு ஞாயிறன்று மாலை பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு திருப்பலிக்கு முன்  ஒப்புரவு அருள் அடையாளத்தை நிறைவேற்றியதோடு, இளையோரோடு கலந்துரையாடலையும் மேற்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை : மனிதர்கள் வியாபாரப் பொருளாக நடத்தப்படுவது வெட்கத்துக்குரிய காயம்

பிப்.09,2015. மனிதர்கள் வியாபாரப்பொருட்களாக கடத்தப்படுவதும், சுரண்டப்படுவதும் வெட்கத்துக்குரிய கொடுஞ்செயல், அது நாகரீக சமூகத்திற்கு இயைந்ததல்ல என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒரு வியாபாரப் பொருள்போல் கடத்தப்பட்டு, பல்வேறு துன்பங்களை அனுபவித்த ஆப்ரிக்க அருள்சகோதரி புனித ஜோசஃபின் பகித்தா அவர்களின் திருவிழாவான இஞ்ஞாயிறன்று, மூவேளை செபஉரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதே நாள், மனிதர்கள் வியாபாரப் பொருள்களாக நடத்தப்படுவதற்கு எதிரான நாளாக துறவுசபைகளால் சிறப்பிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.
அடிமைகளாக நடத்தப்பட்டும், சுரண்டப்பட்டும் வரும் பெண்கள், குழந்தைகள், பெரியோர் ஆகியோரின் விடுதலைக்காக உழைக்கும் அனைவருக்கும் தன் ஊக்கத்தை வழங்குவதாக உரைத்த திருத்தந்தை, இந்த வெட்கத்துக்குரிய காயத்தை அகற்ற அரசு பொறுப்பிலுள்ளோர் அனைவரும் முன்வரவேண்டும் எனவும் விண்ணப்பித்தார்.
தங்கள் மாண்பை இழந்து துன்பங்களை அனுபவிக்கும் நம் சகோதர சகோதரிகளின் குரலுக்கு செவிமடுக்க நாம் ஒவ்வொருவரும் முன்வரவேண்டும் எனவும் மக்களை நோக்கி அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை : இயேசுவின் குணமளிக்கும் பணியில் திருஅவை தொடர்ந்து உதவி வருகிறது

பிப்.09,2015. வரும் புதனன்று சிறப்பிக்கப்படவிருக்கும் உலக நோயாளர் தினம் குறித்த தன் கருத்துக்களை, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறு திருப்பலி வாசகமான, இயேசு எண்ணற்ற மக்களை குணப்படுத்திய பகுதி குறித்த தன் கருத்துக்களை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்ட மக்களையும், ஏழைகள், பாவிகள், பேய்பிடித்தோர் என அனைவரையும் இயேசு அன்புகூர்ந்து குணப்படுத்தியது, நோயின் அர்த்தம் மற்றும் மதிப்பு குறித்து நமக்குக் கற்பிக்கின்றது என்றார்.
புதனன்று சிறப்பிக்கப்படும் உலக நோயாளர் தினத்திற்கு முந்தைய நாள் மாலை உரோம் நகரில் திருவிழிப்புக் கொண்டாட்டங்கள் இடம்பெற உள்ளதையும் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட திருப்பீட நலப்பணி அவையின் தலைவர் பேராயர் Zygmunt Zimowski அவர்கள், தற்போது போலந்தில் உடல் நலம் குறைந்திருப்பதை அறிவித்து, அவருக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இயேசு தன் சீடர்களை நற்செய்தி அறிவிப்புப் பணிக்கென அனுப்பியபோது, 'நோயாளிகளுக்குக் குணமளியுங்கள்' எனக் கூறியதையும் எடுத்தியம்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் இவ்விண்ணப்பத்தை திருஅவை எப்போதும் தொடர்ந்து ஆற்றிவருகிறது எனவும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. சிறார் பாதுகாப்பில் ஆயர்கள் பொறுப்புணர்விற்கு முக்கியத்துவம்

பிப்.09,2015. சிறார்களை பாதுகாப்பதற்கென ஆயர் பேரவைகளால் உருவாக்கப்பட்டு திருப்பீடத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கடைபிடிக்கத் தவறும் ஆயர்கள், கடுமையான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என அறிவித்துள்ளார் Boston கர்தினால் Sean  O’Malley.
சிறார் பாதுகாப்பிற்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் O’Malley, புதிய விதிகளை பரிந்துரைத்து உரோம் நகரில் நிருபர்கள் கூட்டத்தில் பேசியபோது, சிறார்கள் பாதுகாப்பு விடயத்தில் ஒவ்வொரு மறைமாவட்ட ஆயர்களின் பொறுப்புணர்வு குறித்து மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்படுவதாகக் கூறினார்.
விசுவாசக்கோட்பாட்டு திருப்பேராயம் 2011ம் ஆண்டு கேட்டுக்கொண்டபடி, இதுவரை உலகின் 96 விழுக்காட்டு ஆயர்பேரவைகள், தங்கள், சிறார் பாதுகாப்பு விதிமுறைகளை வத்திக்கானுக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறினார் கர்தினால் O’Malley.
உலகின் 112 ஆயர் பேரவைகளுள் 5 மட்டுமே இத்தகைய விதிமுறைகளை இன்னும் அனுப்பிவைக்கவில்லை என உரைத்த கர்தினால் O’Malley அவர்கள், உள்நாட்டுப்போர், எபோலா நோய், ஏழ்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் மேற்கு ஆப்ரிக்க நாடுகளே அவை என்பதையும் குறிப்பிட்டார்.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி

6. கர்தினால் தாக்லே : பிறரன்பு நடவடிக்கைகளுக்கு அழைப்புவிடுக்கிறது தவக்காலம்

பிப்.09,2015. ஏழைகள் மற்றும் சத்துணவின்றி வாடும் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் நோக்குடன் ஒவ்வொருவரும் உண்ணா நோன்பை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார் பிலிப்பீன்ஸ் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே.
'நான் பசியாயிருந்தேன், நீங்கள் எனக்கு உணவளித்தீர்கள்' என இயேசு கூறிய வார்த்தைகளை உண்மையாக்க வேண்டுமெனில், நாம் நோன்பிருந்து ஏழைகளுக்கு உணவு வழங்கவேண்டும் என, பிப்ரவரி 18ம் தேதி சிறப்பிக்கப்படவிருக்கும் திருநீற்றுப் புதனுக்கென தயாரிக்கப்பட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார் கர்தினால் தாக்லே.
திருநீற்றுப் புதன் என்பது செபிப்பதற்கும், நோன்பிருப்பதற்கும், பிறரன்பு  நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இறைவன் நமக்கு விடுக்கும் அழைப்பை நினைவூட்டும் நாள் என தன் செய்தியில் கூறியுள்ள மனிலா கர்தினால் தாக்லே அவர்கள், ஏழைச்சிறார்களுக்கு உணவூட்டுதல் என்ற திட்டம், தவக்காலத்தோடு நின்றுபோகாமல்,  ஆண்டு முழுவதும் தொடரப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
2005ம் ஆண்டு மனிலா மறைமாவட்டத்தில் துவக்கப்பட்ட, 'ஏழைச்சிறார்களுக்கு உணவூட்டும் திட்டம்' மூலம் இதுவரை 14 இலட்சத்து 55 ஆயிரத்து 735 சிறார்கள் பயன்பெற்றுள்ளனர்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி

7. அமைதியைக் கொணர இஸ்லாம் தீவிரவாதிகளுடன் பேச செஞ்சிலுவைச் சங்கம் தயார்

பிப்.09,2015. சிரியா மற்றும் ஈராக் பகுதிகளில் உள்நாட்டுப் போர்களுக்குக் காரணமாக இருக்கும் ஐ.எஸ். இஸ்லாம் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தத் தயாராக இருப்பதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.
ஐ.எஸ் தீவிரவாதிகள் அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு முன்வந்து, வன்முறைகளை தவிர்க்கும் நோக்கில் அமைதி உடன்பாடுகளை கைக்கொள்ளவேண்டும் என கூறினார் செஞ்சிலுவைச் சங்க இயக்குனர் Yves Daccord
போரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்கும் நோக்கில் ஐ.எஸ். அமைப்பின் உயர்மட்ட அதிகாரிகளுடனும், கீழ்மட்ட உறுப்பினர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த செஞ்சிலுவைச் சங்கம் எப்போதும் தயாராக இருப்பதாக அறிவித்தார் Daccord.
ஐ.எஸ். இஸ்லாம் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவின் அலெப்போ மற்றும் ஹோம்ஸ் நகரங்களில்கூட செஞ்சிலுவைப் பணியாளர்கள் நலத்திட்டப் பணிகளை மேற்கொண்டுவருவதாக அவர் மேலும் கூறினார்.

ஆதாரம் : BBC / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment