Tuesday, 13 May 2014

செய்திகள் - 12.05.14

 செய்திகள் - 12.05.14
-----------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் - கடவுள் புதிய வழிகளைத் திறக்கும்போது, அவ்வழிகளை மூடுவதற்கு நாம் யார்?

2. திருத்தந்தை பிரான்சிஸ் - மன்னிப்பு வழங்குவதில் அருள் பணியாளர்கள் என்றும் சலிப்படையக் கூடாது

3. திருத்தந்தை பிரான்சிஸ் - இறைமக்கள், தங்கள் அருள் பணியாளர்களையும், ஆயர்களையும் தேடிச்சென்று தொந்தரவு செய்யவேண்டும்

4. திருத்தந்தை பிரான்சிஸ் - பள்ளிகளுக்குச் செல்வதால் மூன்று மொழிகளை நாம் பயில முடியும்

5. பள்ளியின் கதவுகள் திறக்கும்போது, புதிய வாய்ப்புக்களும் நம்முன் திறக்கப்படுகின்றன - கர்தினால் Angelo Bagnasco

6. நைஜீரியாவில் கடத்தப்பட்டுள்ள பள்ளிச் சிறுமிகள் உடனடியாக விடுவிக்கப்பட திருத்தந்தை விண்ணப்பம்

7. முன்னேற்றங்கள் அனைத்தும் பொருளாதாரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருப்பது குறித்து திருஅவை கவலை

8. தாக்குதல்கள் குறித்த இஸ்ராயேல் அரசின் மௌனத்தால் எருசலேம் முதுபெரும் தந்தை கவலை

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் - கடவுள் புதிய வழிகளைத் திறக்கும்போது, அவ்வழிகளை மூடுவதற்கு நாம் யார்?

மே,12,2014. நாளை நாம் செவ்வாய் கோளுக்குச் செல்லும்போது, அங்குள்ள புதுமையான பிறவிகளில் ஒருவர், 'எனக்குத் திருமுழுக்கு வேண்டும்' என்று கேட்டால், நாம் என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திங்கள் காலை திருப்பலியில் எழுப்பினார்.
இத்திங்கள் காலை சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் ஆற்றியத் திருப்பலியில், திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து தரப்பட்டுள்ள வாசகத்தை மையப்படுத்தி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியாரின் செயல்பாடுகளுக்குத் தடைவிதிக்க நாம் யார் என்ற கேள்வியைத் தொடுத்தார்.
விருத்தசேதனம் செய்து கொண்டவர்களுக்கும், நற்செய்தியை ஏற்றுக்கொண்ட பிற இனத்தவருக்கும் இடையே உருவான இறுக்கமானச் சூழலைப் புனித பேதுரு சந்தித்ததைச் சுட்டிக்காட்டிப் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாகுபாடுகளை முன்னிறுத்துவது, திருஅவை வரலாற்றின் துவக்கத்திலிருந்தே காணப்படுகிறது என்றுரைத்தார்.
திருஅவையில் அனைவரையும் இணைக்க, கடவுள் புதிய வழிகளைத் திறக்கும்போது, நமது குறுகிய கண்ணோட்டத்தால், அவ்வழிகளை மூடும் முயற்சிகளில் ஈடுபடுவதற்கு நாம் யார் என்ற கேள்வியை, தன் மறையுரையில் முன்வைத்தார் திருத்தந்தை.
திருஅவையின் தலைமைப் பொறுப்பு தூய ஆவியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும், தூய ஆவியாரின் தூண்டுதலுக்குச் செவிமடுப்பதே திருஅவைப் பணியாளர்களின் கடமை என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில் வலியுறுத்தினார்.
மேலும், இத்திங்களன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள Twitter செய்தியில், "கிறிஸ்துவின் இரத்தத்தால் நாம் பாதுகக்கப்பட்டுள்ளோம். அவரது அன்பால் எப்போதும் நாம் புதுப்பிக்கப்படுவோமாக" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் - மன்னிப்பு வழங்குவதில் அருள் பணியாளர்கள் என்றும் சலிப்படையக் கூடாது

மே,12,2014. அருள் பணியாளர்களிடம் நான் சிறப்பாக வேண்டிக்கொள்வது இதுதான். கருணை காட்டுவதில் சலிப்படையாதீர்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு காலை திருப்பலியில் கூறினார்.
நல்லாயன் ஞாயிறன்று காலை, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் 13 தியாக்கோன்களை அருள் பணியாளர்களாக அருள் பொழிவு செய்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நல்லாயன் இயேசுவைப் போல, மன்னிப்பு வழங்குவதில் அருள் பணியாளர்கள் என்றும் சலிப்படையக் கூடாது என்று தன் மறையுரையில் கேட்டுக்கொண்டார்.
அருள் பணியாளர்களுக்குத் திருப்பொழிவு செய்யும் திருப்பலியின் ஒரு பகுதியாக, பாரம்பரியமாக வழங்கப்படும் மறையுரையை அடிப்படையாகக் கொண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பேசுகையில், இவ்வுலகில் அருள் பணியாளர்கள் ஆற்றவேண்டிய சிறப்பான பணிகளைக் குறித்து எடுத்துரைத்தார்.
உரோம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த 11 தியாக்கோன்களையும் பாகிஸ்தான், வியட்நாம் ஆகிய நாடுகளிலிருந்து வந்திருந்த இரு தியாக்கோன்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அருள் பணியாளர்களாக திருப்பொழிவு செய்தார்.
திருத்தந்தையின் சார்பில் உரோம் மறைமாவட்ட ஆயராகப் பணியாற்றும் கர்தினால் Agostino Vallini அவர்களும், ஏனைய ஆயர்கள், துறவறச் சபைகளின் தலைவர்கள் ஆகியோரும் திருத்தந்தையுடன் கூட்டுத் திருப்பலியாற்றினர்.
தான் அருள் பொழிவு செய்யவிருக்கும் தியாக்கோன்களை தனியேச் சந்திக்க, திருத்தந்தை விருப்பம் தெரிவித்ததால், ஏப்ரல் 25ம் தேதியன்று, தியாக்கோன்கள் அனைவரும் திருத்தந்தையை சாந்தா மார்த்தா இல்லத்தில் சந்தித்தனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை பிரான்சிஸ் - இறைமக்கள், தங்கள் அருள் பணியாளர்களையும், ஆயர்களையும் தேடிச்சென்று தொந்தரவு செய்யவேண்டும்

மே,12,2014. அருள் பணியாளர்களும், ஆயர்களும் மக்களாகிய உங்களுக்கு, அருள், படிப்பினைகள், வழி நடத்துதல் ஆகிய பாலைப் புகட்ட வேண்டுமென்று அவர்களைத் தொந்தரவு செய்யுங்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
நல்லாயன் ஞாயிறன்று மதியம், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக் கணக்கான விசுவாசிகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் இவ்வாறு கூறினார்.
அருள் பணியாளர்கள், ஆயர்கள் ஆகியோரின் இல்லக் கதவுகளையும், உள்ளக் கதவுகளையும் நீங்கள் தொடர்ந்து தட்டுவதால், அவர்கள் இயேசுவைப் போல நல்ல மேய்ப்பர்களாக வாழும் வாய்ப்பை நீங்கள் உருவாக்குகிறீர்கள் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
பசித்திருக்கும் கன்று, பசுவின் மடியில் முட்டி, பாலைப் பருகும் உருவகத்தை, செசாரியுஸ் (St Caesarius) என்ற துவக்கக் காலப் புனிதர் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டிப் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைமக்களும், தங்கள் அருள் பணியாளர்களையும், ஆயர்களையும் தேடிச்சென்று தொந்தரவு செய்யவேண்டும் என்று கூறினார்.
அல்லேலூயா வாழ்த்தொலி உரையின் இறுதியில், புது நன்மை, உறுதிப் பூசுதல் ஆகிய திருவருள் அடையாளங்களுக்குத் தங்களையேத் தயாரித்துவரும் குழந்தைகளுக்கு சிறப்பான வாழ்த்துக்களைக் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று 'அன்னை தினம்' கொண்டாடப்படுவதால், அனைத்து அன்னையருக்கும் தன் தனிப்பட்ட வாழ்த்துக்களையும், ஆசீரையும் வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை பிரான்சிஸ் - பள்ளிகளுக்குச் செல்வதால் மூன்று மொழிகளை நாம் பயில முடியும்

மே,12,2014. பள்ளிகளில் பிரச்சனைகள் இருந்தாலும், பள்ளி வாழ்வைக் கொண்டாட நீங்களும் நானும் இங்கு கூடியிருக்கிறோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பள்ளி மாணவ, மாணவியரிடம் கூறினார்.
மே 10, கடந்த சனிக்கிழமை மாலை, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்திலும் சுற்றியிருந்த பகுதிகளிலும் இலட்சக் கணக்கில் கூடி வந்திருந்த மாணவ, மாணவியரையும் அவர்களது ஆசிரியர்கள், பயிற்றுவிக்காப் பணியாளர்கள், பள்ளிப் பொறுப்பாளர்கள், பெற்றோர் அனைவரையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.
காலை பத்து மணியிலிருந்து வளாகத்தைச் சுற்றியிருத்த அனைத்துப் பகுதிகளிலும் நிறைந்து நின்ற அனைவரையும், மாலை 4 மணியளவில், திறந்ததொரு 'ஜீப்'பில் வந்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சந்தித்தார்.
கல்வியின் மீது மாணவர்கள் ஆர்வம் கொள்ளும் வகையிலும், கல்வியில் உள்ள பிரச்சனைகளைத் தெளிவுபடுத்தும் வகையிலும், "La Chiesa per la scuola", அதாவது, 'பள்ளிக்காகத் திருஅவை' என்ற மையக்கருத்துடன், இத்தாலிய ஆயர் பேரவையும், இத்தாலிய கல்வித் துறையும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
பள்ளிகளுக்குச் செல்வதால், அறிவு மட்டுமல்ல, இதயமும் விரிவடைகிறது என்பதாலும், உண்மை, அழகு, நன்மை என்ற உயர்ந்த வாழ்வியல் தத்துவங்களை, பள்ளிகளில் கற்றுக் கொள்ளலாம் என்பதாலும், பள்ளிகளை, தான் அதிகம் விரும்புவதாகத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாணவச் சமுதாயத்திடம் எடுத்துரைத்தார்.
பள்ளிகளுக்குச் செல்வதால் மூன்று மொழிகளை நாம் பயில முடியும் என்ற புதிரை விடுத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிந்தனை மொழி, மனதின் மொழி, செயல்களின் மொழி என்பவையே இம்மூன்று மொழிகள் என்று விளக்கிக் கூறினார்.
மாலை 6 மணி வரை நீடித்த இந்த மாபெரும் நிகழ்வில் அனைவரும் ஆர்வமாகப் பங்கேற்றது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. பள்ளியின் கதவுகள் திறக்கும்போது, புதிய வாய்ப்புக்களும் நம்முன் திறக்கப்படுகின்றன - கர்தினால் Angelo Bagnasco

மே,12,2014. இன்றையக் காலக் கட்டத்தில், பள்ளிகள் சந்திக்கும் பிரச்சனைகள், உண்மையிலேயே பெரியன எனினும், ஒவ்வொரு நாள் காலையிலும் பள்ளியின் கதவுகள் திறக்கும்போது, புதிய வாய்ப்புக்களும் நம்முன் திறக்கப்படுகின்றன என்று இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் Angelo Bagnasco அவர்கள் கூறினார்.
மே 10, கடந்த சனிக்கிழமை, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்திலும், சுற்றியிருந்த பகுதிகளிலும் நிறைந்திருந்த பள்ளி மாணவ, மாணவியரைச் சந்திக்க வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வரவேற்றுப் பேசிய கர்தினால் Bagnasco அவர்கள், திருத்தந்தை வெளிப்படுத்தும் கற்பிக்கும் திறனைப் பாராட்டிப் பேசினார்.
நம்பிக்கையின் பிறப்பிடமான பள்ளிகளில், உண்மை, அழகு, நன்மை ஆகிய அனைத்தையும் பாடங்களாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முன்னர் கூறியுள்ளதை, கர்தினால் Bagnasco அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
நற்செய்தியின் விழுமியங்களை, பள்ளிகள் வாயிலாகக் கற்றுக்கொள்ளும் வழிகளை, திருத்தந்தை தங்களுக்குச் சொல்லித்தரவேண்டும் என்ற வேண்டுகோளுடன், கர்தினால் Bagnasco அவர்கள் தன் வரவேற்புரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. நைஜீரியாவில் கடத்தப்பட்டுள்ள பள்ளிச் சிறுமிகள் உடனடியாக விடுவிக்கப்பட திருத்தந்தை விண்ணப்பம்

மே,12,2014. நைஜீரியாவில் கடத்தப்பட்டுள்ள பள்ளிச்சிறுமிகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டுமென்று அனைவரும் செபத்தில் இணைவோம் என்ற டுவிட்டர் செய்தியை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்சனிக்கிழமை இரவு வெளியிட்டார்.
மனிதர்களுக்கு உரிய மதிப்பை, அதிலும் சிறப்பாக, எப்பாவமும் அறியாத, வலுவற்ற குழந்தைகளுக்கு உரிய மதிப்பை வழங்க மறுக்கும் எவரும் கடுமையான கண்டனத்துக்கு உள்ளானவர்கள் என்று திருப்பீடத்தின் சார்பில் பேசிய, இயேசு சபை அருள்பணியாளர் ஃபெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் கூறினார்.
கடந்த மாதம் நைஜீரியாவின் Chibok என்ற ஊரிலிருந்து 276 பள்ளிச் சிறுமியர் கடத்தப்பட்ட நிகழ்வை, திருப்பீடம் வன்மையாகக் கண்டிக்கிறது என்று அருள்பணியாளர் லொம்பார்தி அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வெறுப்பின் அடிப்படையில் வளரும் வன்முறைகளைகயும், அடிப்படைவாத செயல்பாடுகளையும் களைந்து, நைஜீரியாவில் அமைதியை உருவாக்கும் முயற்சிகளை அனைவரும் மேற்கொள்ளவேண்டுமென திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் அருள்பணி லொம்பார்தி அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி / Zenit

7. முன்னேற்றங்கள் அனைத்தும் பொருளாதாரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருப்பது குறித்து திருஅவை கவலை

மே,12,2014. இன்றைய உலகம் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் கண்டிருந்தாலும், இந்த முன்னேற்றங்கள் அனைத்தும் பொருளாதாரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருப்பதைக் காணும் திருஅவை கவலை கொள்கிறது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனிவாவில் செயலாற்றும் ஐ.நா. அவை அலுவலகங்களில், திருப்பீடத்தின் சார்பில், நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், World Intellectual Property Organisation (WIPO), அதாவது, அறிவு சார்ந்த உரிமைகுறித்த உலக நிறுவனத்தின் 53வது கூட்டத்தில் இவ்வாறு பேசினார்.
வளர்ச்சியடைந்துள்ள நாடுகளிலும், வளர்ச்சியடைந்துவரும் நாடுகளிலும், பொருளாதார முன்னேற்றத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது மனிதர்களின் முழுமையான முன்னேற்றத்தை உறுதிசெய்யவில்லை என்பதை பேராயர் தொமாசி அவர்கள், தன் உரையில் வலியுறுத்தினார்.
பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே கருத்தில்கொண்டு செயலாற்றும் அரசுகளில் செல்வருக்கும் வறியோருக்கும் இடையே உள்ள வேறுபாடு, நாளுக்கு நாள் பெருகி வருகிறது என்பதையும் பேராயர் தொமாசி அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
உலக முன்னேற்றத்திற்காக, புதிய கண்டுபிடிப்புகள் வெளியாகும்போது, 'அறிவுசார்ந்த உரிமை' என்ற அடிப்படையில், இக்கண்டுபிடிப்புகள், செல்வம் மிகுந்தவரால் அபகரிக்கப்படுவதும் உலக முன்னேற்றத்தை தடை செய்கிறது என்று தொமாசி அவர்கள் கவலை தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

8. தாக்குதல்கள் குறித்த இஸ்ராயேல் அரசின் மௌனத்தால் எருசலேம் முதுபெரும் தந்தை கவலை

மே,12,2014. கிறிஸ்தவக் கோவில்கள், முஸ்லீம் மசூதிகள் மற்றும் அரபுக் கட்டிடங்கள் மீது இஸ்ராயேல் தீவிரவாதிகள் நடத்திவரும் தாக்குதல்கள் குறித்து இஸ்ராயேல் அரசு மௌனம் காப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார் எருசலேம் முதுபெரும் தந்தை Fouad Twal.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எருசலேமில் மேற்கொள்ளவிருக்கும் திருப்பயணம் நெருங்குவரும் இவ்வேளையில், இத்தகையத் தாக்குதல்கள் இடம்பெறுவது குறித்து கவலையை வெளியிட்ட இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை Twal அவர்கள், குடிமக்கள் ஆட்சி என்று பெருமைப்படும் இஸ்ரேல் நாட்டிற்கு இது ஒரு பெரும் கறை என தெரிவித்தார்.
பிற மதத்தவரின் உடமைகள்மீது தாக்குதல் நடத்தும், மற்றும் பொய்ப் பிரச்சாரங்களைப் பரப்பும் இஸ்ராயேல் தீவிரவாதிகள்மீது இஸ்ராயேல் அரசு நடவடிக்கை எடுக்கத் தவறுவதன்மூலம் இக்குற்றங்கள் அதிகரிக்கின்றன எனவும் தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை Twal.

ஆதாரம் : Asia News

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...