செய்திகள் - 30.05.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் - கிறிஸ்தவ வாழ்வு என்பது விலைகொடுத்து பெறமுடியாத இறைவனின் கொடை
2. ஜூன் 8ம் தேதி, பாலஸ்தீனா அரசுத் தலைவரும், இஸ்ரேல் அரசுத் தலைவரும் வத்திக்கானுக்கு வருகை தர சம்மதித்துள்ளனர்
3. அகில உலக அருங்கொடை இயக்க மாநாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் கலந்துகொள்வார்
4. ஜூன் 16, Canterbury பேராயரும், திருத்தந்தையும் வத்திக்கானில் சந்திப்பு
5. ஐரோப்பாவில் பணியாற்றும் கத்தோலிக்கத் திருஅவை, மற்றும் ஆர்த்தடாக்ஸ் சபைகள் இணைந்து, Belarus நாட்டில் நடத்தும் கருத்தரங்கு
6. மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவத் தாயை உடனடியாக விடுவிப்பது சூடான் நாட்டின் கடமை - கனடா நாட்டு ஆயர்கள்
7. உடல் எடை கூடுதல் உலகெங்கும் அதிகரித்துள்ளது - மருத்துவ ஆய்வு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் - கிறிஸ்தவ வாழ்வு என்பது விலைகொடுத்து பெறமுடியாத இறைவனின் கொடை
மே,30,2014. கிறிஸ்தவ வாழ்வு ஒரு விழாக் கொண்டாட்டம் அல்ல, மாறாக, அது நம்பிக்கையில் எழும் மகிழ்வு என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி காலை ஆற்றியத் திருப்பலியில் மறையுரையாற்றினார்.
புனித பூமி பயணத்தையொட்டி, கடந்த சில நாட்களாகத் தடைபட்டிருந்த தன் காலைத் திருப்பலியை இவ்வெள்ளியன்று மீண்டும் தொடர்ந்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்' என்று இயேசு தன் சீடர்களுக்குக் கூறிய வார்த்தைகளை தன் மறையுரையின் மையமாக்கினார்.
கிறிஸ்தவ வாழ்வு என்பது விலைகொடுத்து பெறமுடியாத இறைவனின் கொடை என்று கூறியத் திருத்தந்தை, இம்மகிழ்வு நம்பிக்கையிலிருந்து பிறக்கிறது என்ற கருத்தை வலியுறுத்தினார்.
திருத்தூதர் பவுல் அடியார், துணிவுடன் கிறிஸ்துவை அறிவித்தார் எனினும், அவர் மனதிலும் அச்சங்கள் சூழ்ந்தன என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இருப்பினும், அவர் இவ்வுலக நியதிகளோடு சமரசம் செய்துகொள்ளாமல், தன் அறிவிப்புப்பணியைத் தொடர்ந்தார் என்று கூறினார்.
நோயுறுதல், போதிய ஊதியம் இல்லாமை, குடும்பத்தில் உருவாகும் உறவுப் பிரச்சனைகள் என்ற பல எடுத்துக்காட்டுகளைக் கூறியத் திருத்தந்தை, இத்துன்பங்களைக் கண்டு, நமக்கு எதிரானவர்கள் மகிழக்கூடும்; இருப்பினும், இத்துன்பங்கள் மத்தியில் இறைவன் நம்முடன் இருக்கிறார் என்ற நம்பிக்கையே, நமது மகிழ்வுக்கு அடித்தளம் என்று எடுத்துரைத்தார்.
பேறுகால
வேதனையில் உள்ள பெண்ணை இயேசு ஓர் எடுத்துக்காட்டாக சீடர்களுக்குக்
கூறியதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குழந்தை பிறப்பின்போது, தாய் அடையும் வேதனை, மகிழ்வாக மாறுவதுபோல், நமது வேதனைகளையும் இறைவன் மகிழ்வாக மாற்றுவார் என்று தன் மறையுரையில் குறிப்பிட்டார்.
மேலும், "ஒவ்வொரு கிறிஸ்தவரும் தன் பணியிடங்களில், தன் வார்த்தைகள் வழியாக மட்டுமல்லாமல், தன் நேரிய வாழ்வினால் கடவுளின் சாட்சிகளாக வாழ முடியும்" என்ற வார்த்தைகளுடன் கூடிய Twitter செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளி காலை வெளியிட்டார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. ஜூன் 8ம் தேதி, பாலஸ்தீனா அரசுத் தலைவரும், இஸ்ரேல் அரசுத் தலைவரும் வத்திக்கானுக்கு வருகை தர சம்மதித்துள்ளனர்
மே,30,2014. வருகிற ஜூன் 8ம் தேதி, ஞாயிறன்று, பாலஸ்தீனா அரசுத் தலைவர் மஹ்முத் அப்பாஸ் அவர்களும், இஸ்ரேல் அரசுத் தலைவர் ஷிமோன் பெரெஸ் அவர்களும் வத்திக்கானுக்கு வருகை தர சம்மதித்துள்ளனர் என்று திருப்பீடச் சேதித் தொடர்பாளர், இயேசு சபை அருள் பணியாளர், Federico Lombardi அவர்கள் அறிவித்துள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் மேற்கொண்ட புனித பூமி பயணத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக, அவர், பாலஸ்தீனா, இஸ்ரேல் நாடுகளின் அரசுத் தலைவர்களை வத்திக்கானில் உள்ள தன் இல்லத்திற்கு வருகைதந்து தன்னோடு இணைந்து, அமைதிக்காகச் செபிக்குமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
திருத்தந்தையின் அழைப்பை ஏற்று, இரு அரசுத் தலைவர்களும் ஜூன் மாதம் 8ம் தேதியை ஒரு சேர தெரிவு செய்திருப்பது, இந்த சமாதான முயற்சியின் முதல் வெற்றி என்று ஊடகங்கள் கூறியுள்ளன.
திருத்தந்தையின் புனித பூமி திருப்பயணத்தில் அவருடன் பயணித்த சமூகத் தொடர்பு குழுவின் தலைவர், இயேசு சபை அருள் பணியாளர் David Neuhaus அவர்கள், ஜூன் 8ம் தேதி நிகழ்வைப் பற்றி பேசியபோது, இவ்விரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், இதுவரை செபத்தின் வழியாக இந்த முயற்சியை யாரும் மேற்கொள்ளவில்லை என்றும், இந்த முயற்சியைத் துவக்கி வைக்க திருத்தந்தை முயன்றிருப்பது, அவர் ஓர் ஆன்மீகத் தலைவர் என்பதை இவ்வுலகிற்கு மீண்டும் எடுத்துரைக்கிறது என்றும் எடுத்துரைத்தார்.
உலகின் பல மொழி பேசும் மக்களை ஒருங்கிணைத்த 'பெந்தகோஸ்து' திருவிழா, அதாவது, தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவை, ஜூன் 8ம் தேதி, ஞாயிறன்று, கத்தோலிக்கத் திருஅவை கொண்டாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. அகில உலக அருங்கொடை இயக்க மாநாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் கலந்துகொள்வார்
மே,30,2014. உரோம் நகரில் ஜூன் 1,2
ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் அகில உலக அருங்கொடை இயக்கத்தின்
மாநாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொள்வார் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற ஞாயிறு, திங்கள் ஆகிய இருநாட்கள் நடைபெறும் 37வது அகில உலக அருங்கொடை இயக்க மாநாட்டில், 50 நாடுகளிலிருந்து 50,000த்திற்கும் அதிகமானோர் கலந்துகொள்கின்றனர்.
ஞாயிறு காலை, 10.30 மணியளவில் உரோம் நகரின் ஒலிம்பிக் விளையாட்டுத் திடலில் ஆரம்பமாகும் இந்த மாநாட்டில், மாலை 5 மணியளவில் திருத்தந்தை கலந்து கொள்கிறார்.
இந்த மாநாட்டில், புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் தலைமை அருள் பணியாளர், கர்தினால் Angelo Comastri, மற்றும் பொதுநிலையினர் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் Stanislaw Rylko ஆகியோர் உட்பட, பல ஆயர்கள் கலந்துகொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில உலக அருங்கொடை இயக்க மாநாட்டில் திருத்தந்தை ஒருவர் கலந்துகொள்வது இதுவே வரலாற்றில் முதல் முறை என்று Zenit கத்தோலிக்கச் செய்தி கூறியது.
ஆதாரம் : Zenit
4. ஜூன் 16, Canterbury பேராயரும், திருத்தந்தையும் வத்திக்கானில் சந்திப்பு
மே,30,2014. ஜூன் 16, திங்களன்று ஆங்கிலிக்கன் சபையின் உயர் தலைவரும், Canterbury பேராயருமான Justin Welby அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, வத்திக்கானில் சந்திக்க வருகிறார்.
உலகெங்கும் நடைபெற்றுவரும் மனித வர்த்தகம் மற்றும் இன்றைய அடிமைத்தனம் ஆகிய குற்றங்களுக்கு எதிராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், பேராயர் Welby அவர்களும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நிறுவிய Global Freedom Network என்ற அமைப்பின் செயல்பாடுகள் குறித்து இவ்விருவரும் இந்தச் சந்திப்பின்போது பேசுவர் என்று ஆங்கிலிக்கன் சபையின் அறிக்கை கூறுகிறது.
பேராயர் Welby அவர்கள், திருத்தந்தையைச் சந்திப்பது இது இரண்டாவது முறை என்றும், கடந்த ஆண்டு ஜூன் மாதம் இவர்கள் இருவருக்கும் இடையே வத்திக்கானில் ஒரு சந்திப்பு நிகழ்ந்ததென்றும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், பேராயர் Welby அவர்கள் கடந்த ஒரு வாரமாக பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா ஆகிய மூன்று நாடுகளிலும் மேற்கொண்ட பயணத்தின்போது, கிறிஸ்தவர்களுக்கு
எதிராக பாகிஸ்தானில் நடைமுறையில் உள்ள தேவ நிந்தனைச் சட்டத்தை அரசு
திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கையை அவர் விடுத்துள்ளார் என்றும்
ஆங்கிலிக்கன் சபையின் அறிக்கை கூறுகிறது.
ஆதாரம் : Zenit / ICN
5. ஐரோப்பாவில் பணியாற்றும் கத்தோலிக்கத் திருஅவை, மற்றும் ஆர்த்தடாக்ஸ் சபைகள் இணைந்து, Belarus நாட்டில் நடத்தும் கருத்தரங்கு
மே,30,2014. ஐரோப்பாவில் பணியாற்றும் கத்தோலிக்கத் திருஅவை, மற்றும் ஆர்த்தடாக்ஸ் சபைகள் இணைந்து, ஜூன் 2ம் தேதி, திங்கள் முதல், 6ம் தேதி, வெள்ளி முடிய Belarus நாட்டின் Minsk நகரில் கருத்தரங்கு ஒன்றை நடத்துகின்றன.
"மதமும், கலாச்சார பன்முகமும்: ஐரோப்பாவின் கிறிஸ்தவ சபைகள் சந்திக்கும் சவால்கள்" என்ற தலைப்பில் நடைபெறும் இக்கருத்தரங்கில், பன்முகம் கொண்ட ஐரோப்பிய சமூகத்தில், மதச் சுதந்திரம், மதங்களுக்கிடையே உரையாடல் ஆகிய தலைப்புக்களில் விவாதங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்த்தடாக்ஸ் சபையினர் ஏற்பாடு செய்துள்ள இக்கருத்தரங்கில், கர்தினால் Péter Erdő அவர்களின் தலைமையில், இத்தாலி, பிரான்ஸ், பெல்ஜியம், போலந்து, ஜெர்மனி, பெலாருஸ் ஆகிய நாடுகளின் ஆயர்களில் பலர், கத்தோலிக்கத் திருஅவையின் சார்பில், கலந்து கொள்கின்றனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவத் தாயை உடனடியாக விடுவிப்பது சூடான் நாட்டின் கடமை - கனடா நாட்டு ஆயர்கள்
மே,30,2014. சூடான் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவத் தாய் Meriam Yehya Ibrahim அவர்களை மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக விடுவிப்பது சூடான் நாட்டின் கடமை என்று கனடா நாட்டு ஆயர்கள் கூறியுள்ளனர்.
Meriam என்ற இளம்பெண் மருத்துவர், ஒரு இஸ்லாம் தந்தைக்குப் பிறந்தவர் என்பதால், அவர் ஒரு கிறிஸ்தவரை மணந்தது சட்டப்படி செல்லாது என்றும், அவர் ஏற்கனவே ஒரு குழந்தைக்குத் தாயானதும், தற்போது மற்றொரு குழந்தையைப் பெறவிருப்பதும் சட்டப்படி குற்றம் என்றும் கூறி, சூடான் உச்ச நீதி மன்றம் அவருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்ட Meriam அவர்களுடன் அவரது இரண்டு வயது மகன் மார்ட்டினும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இந்நிலையில், Meriam மற்றொரு பெண் குழந்தையை சிறையில் ஈன்றெடுத்தார் என்று செய்திகள் கூறுகின்றன.
இளம் மருத்துவர் Meriamன் தந்தை, சிறுவயதிலேயே தாயைவிட்டுப் பிரிந்ததால், Meriam குழந்தைப் பருவம் முதல் கிறிஸ்தவ வழியில் வளர்ந்தார் என்பதைச் சுட்டிக்காட்டிய போதும், இஸ்லாமிய நீதி மன்றம் அவருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது.
அவருக்கு
வழங்கப்பட்டுள்ள தண்டனை எவ்வகையிலும் பொருளற்றது என்று சூடான் ஆயர்கள் அவை
ஏற்கனவே தன் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. தற்போது கனடா நாட்டு ஆயர்கள்
சார்பில், ஆயர் François Lapierre அவர்கள் தன் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
ஆதாரம் : Zenit
7. உடல் எடை கூடுதல் உலகெங்கும் அதிகரித்துள்ளது - மருத்துவ ஆய்வு
உலக அளவில் உடல் பருமன் அதிகரித்து வருகிறது என்றும், அதிகரித்துவரும்
இந்த போக்கை குறைப்பதில் கடந்த முப்பது ஆண்டுகளில் எந்த ஒரு நாடும்
வெற்றிபெறவில்லை என்றும் ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.
ஏறத்தாழ 190 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு ‘Lancet’ என்ற
மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகையில் 30
விழுக்காட்டினர் அதிக எடை உள்ளவர்கள் என்று கருதலாம் என்று
கண்டறிப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை, பெரியவர்கள், குழந்தைகள், ஆண்கள், பெண்கள்
என எல்லா தரப்பு மக்களிடையேயும் அதிகரித்து வருகிறது என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளிலும் வளரும் நாடுகளிலும் இந்த
எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பொதுவாக, வருமானங்கள் அதிகரிக்க, அதிகரிக்க, இந்த உடல் எடையும் அதிகரிப்பதாகவும், அமெரிக்காவில் முப்பது விழுக்காடு மக்கள் உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் என்றும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment