செய்திகள் - 21.05.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தையின் Twitter செய்தி - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக செபிக்கும்படி அழைப்பு
2. சுற்றுச்சூழல் பிரச்சனைக்கு அறிவியல், தொழில் நுட்பம் ஆகியத் துறைகளிலிருந்து மட்டும் பதில்கள் தேடுவது, சரியான அணுகுமுறை அல்ல - பேராயர் Zimowski
3. உலகக் கால்பந்து போட்டியின் போது, மனித வர்த்தகத்தைத் தடுக்க வத்திக்கானும், அமெரிக்க ஐக்கிய நாடும் இணைந்து மேற்கொண்டுள்ள ஒரு முயற்சி
4. திருத்தந்தையின் புனித பூமித் திருப்பயணத்தின்போது கத்தோலிக்கர்களும், ஆங்கிலிக்கன் சபையினரும் இணைந்து நற்கருணை ஆராதனை
5. தென் கொரியாவைச் சேர்ந்த கர்தினால் ஒருவர், முதல் முறை வட கொரியாவுக்குப் பயணம்
6. ஐரோப்பிய நாடுகளில், கிறிஸ்தவர்களைப் பாதுகாக்கும் செயல்பாடுகள் இல்லாதது வருத்தத்தைத் தருகிறது - பேராயர் Gänswein
7. அகில உலக இயேசு சபையின் தலைவர், அருள் பணியாளர் Nicolás அவர்கள், தலைமைப் பொறுப்பைத் துறக்கவிருப்பதாக அறிவிப்பு
8. இலங்கை மடுமாதா திருத்தலத்தில் நடைபெற்ற தியானம், மற்றும் திருப்பயணத்தில் பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்டனர்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தையின் Twitter செய்தி - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக செபிக்கும்படி அழைப்பு
மே,21,2014. மாசிதோனியா அரசுத் தலைவர், Gjorge Ivanov அவர்களையும், அவரது துணைவியாரையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் காலை, சாந்தா மார்த்தா இல்லத்தில் சந்தித்து உரையாடினார்.
திருத்தந்தையோடு மேற்கொள்ளப்பட்ட இச்சந்திப்பிற்குப் பின், மாசிதோனியா அரசுத் தலைவர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரொ பரோலின் அவர்களையும், நாடுகளுடன் உறவு கொள்ளும் திருப்பீட அவையின் தலைவர், பேராயர் தோமினிக் மம்பெர்த்தி அவர்களையும் சந்தித்தார்.
மேலும், "போஸ்னியா-ஹெர்சகொவினா, செர்பியா ஆகிய நாடுகளிலும், சுற்றுப்புறப்
பகுதிகளிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக உங்கள்
அனைவரையும் செபிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்ற செய்தியை, தன் Twitter பக்கத்தில், இப்புதன் காலை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடந்த 120 ஆண்டுகளுக்கும் மேலாக, இப்பகுதியில் ஏற்படாத அளவு, மழைப் பொழிவும், வெள்ளப்பெருக்கும் உருவாகியுள்ளது என்றும், 40 இலட்சம் மக்களைக் கொண்ட செர்பியாவில், 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.
போஸ்னியாவில், 5 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர் என்று ஊடகங்கள் கணித்துள்ளன.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. சுற்றுச்சூழல் பிரச்சனைக்கு அறிவியல், தொழில் நுட்பம் ஆகியத் துறைகளிலிருந்து மட்டும் பதில்கள் தேடுவது, சரியான அணுகுமுறை அல்ல - பேராயர் Zimowski
மே,21,2014. சுற்றுச்சூழலில் ஏற்படும் விரும்பத்தகாத மாற்றங்கள், மனிதர்களால் உருவாக்கப்படும் மாற்றங்கள் என்றும், இந்த
மாற்றங்களால் உடல்நலன் தொடர்பான விளைவுகளை நாம் அதிகம்
சந்திக்கவேண்டியிருக்கும் என்றும் வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர்
கூறினார்.
மே 19, இத்திங்கள் முதல், 24, இச்சனிக்கிழமை முடிய ஜெனீவாவில் நடைபெறம் 67வது உலக நலவாழ்வு பேரவைக் கூட்டத்தில் இப்புதனன்று உரையாற்றிய, நலவாழ்வுப் பணி திருப்பீட அவையின் தலைவர், பேராயர், Zygmunt Zimowski அவர்கள், இவ்வாறு கூறினார்.
சுற்றுச்சூழல்
மாற்றங்களால் தங்கள் பிறப்பிடங்களைவிட்டு வெளியேறும் கட்டாயத்திற்கு
உள்ளாக்கப்படும் மக்களைக் குறித்து முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
அவர்கள் கூறியுள்ளதை, தன் உரையில் சுட்டிக்காட்டியப் பேராயர் Zimowski அவர்கள், இப்பிரச்சனைக்கு, அறிவியல், தொழில் நுட்பம் ஆகியத் துறைகளிலிருந்து மட்டும் பதில்கள் தேடுவது, சரியான அணுகுமுறை அல்ல என்பதைத் தெளிவுபடுத்தினார்.
பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் இப்பிரச்சனையால் அதிக அளவு பாதிக்கப்பட்டவர்கள் என்பதை எடுத்துரைத்தப் பேராயர் Zimowski அவர்கள், Autism குறையுள்ள மாற்றுத்திறனாளிகள் குறித்து, வருகிற நவம்பர் மாதம் வத்திக்கானில் ஒரு கருத்தரங்கு நடைபெறும் என்பதையும் எடுத்துரைத்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. உலகக் கால்பந்து போட்டியின் போது, மனித வர்த்தகத்தைத் தடுக்க வத்திக்கானும், அமெரிக்க ஐக்கிய நாடும் இணைந்து மேற்கொண்டுள்ள ஒரு முயற்சி
மே,21,2014. 'மனித வர்த்தகம் உலகச் சமுதாயம் என்ற உடலில் ஏற்பட்டுள்ள ஒரு காயம்' என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதை, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் இச்செவ்வாய் காலை, செய்தியாளர்கள் கூட்டத்தில் மீண்டும் நினைவுகூர்ந்தார்.
பிரேசில் நாட்டில் இவ்வாண்டு நடைபெறவிருக்கும் உலகக் கால்பந்து போட்டியின் போது, மனித வர்த்தகம் முற்றிலும் தடைசெய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன், வத்திக்கானும், அமெரிக்க ஐக்கிய நாடும் இணைந்து மேற்கொண்டுள்ள ஒரு முயற்சியைக் குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய, அர்ப்பண வாழ்வுக்கென உருவாக்கப்பட்டுள்ள திருப்பேராயத்தின் தலைவர், கர்தினால் Joao Braz de Aviz அவர்கள், இவ்வாறு கூறினார்.
இறந்துபோனதாகக் கருதப்பட்ட தொழுகைக் கூடத்துத் தலைவரின் மகளை, 'தலித்தா கும்' (Talitha Kum) அதாவது, 'சிறுமியே எழுந்திடு' என்ற சொற்களுடன் (மாற்கு நற்செய்தி 5:41) இயேசு எழுப்பிய நிகழ்வினை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 'தலித்தா கும்' என்ற அமைப்பும், வத்திக்கானும் இணைந்து, பிரேசில் நாட்டில் நடைபெறவிருக்கும் உலகக் கால்பந்து போட்டியின் நேரத்தில் மனித வர்த்தகங்கள், குறிப்பாக இளம்பெண்களின் வர்த்தகத்தை நிறுத்தும் முயற்சியில் ஈடுபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கால்பந்துப் போட்டி போன்ற ஓர் அனைத்துலக நிகழ்வில், பல கோடி மக்கள் கலந்துகொள்ளும்போது, வர்த்தக உலகம் பல்வேறு எதிர்மறையான முயற்சிகளில் ஈடுபடுகின்றது என்று வத்திக்கானில் பணியாற்றும் அமெரிக்கத் தூதர் Ken Hackett அவர்கள், செய்தியாளர்களிடம் பேசினார்.
உலகக்
கால்பந்துப் போட்டிக்கென பிரேசில் நாட்டுக்குச் செல்லும் அனைவரும்
போட்டிகளை மட்டும் கண்டு களிக்கும் மனநிலையை அவர்களுக்குள் உருவாக்குவதும், போதைப் பொருள், தகாத உடலுறவு என்ற ஏனைய ஆபத்தான வழிகளில் தங்கள் கவனத்தைத் திருப்பாமல் இருக்கவும் 'தலித்தா கும்' அமைப்பு உதவும் என்று இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளரான அருள் சகோதரி, Estrella Castalone செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி / CNA
4. திருத்தந்தையின் புனித பூமித் திருப்பயணத்தின்போது கத்தோலிக்கர்களும், ஆங்கிலிக்கன் சபையினரும் இணைந்து நற்கருணை ஆராதனை
மே,21,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித பூமித் திருப்பயணத்தின்போது, பாலஸ்தீனாவின் பெத்லகேமில் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தையைச் சந்திக்கும் அதே நேரத்தில், இங்கிலாந்தில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் கத்தோலிக்கர்களும், ஆங்கிலிக்கன் சபையினரும் இணைந்து நற்கருணை ஆராதனையில் ஈடுபட, Westminster பேராயர், கர்தினால் Vincent Nichols அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
கத்தோலிக்கத் திருஅவைக்கும் கிறிஸ்தவ ஒன்றிப்பு சபைகளுக்கும் இடையே நல்லுறவை வளர்க்கவும், புனித பூமியில் அமைதி நிலவவும் திருத்தந்தையோடு ஒன்றித்து, மக்கள் இந்த ஆராதனையை மேற்கொள்ளுமாறு கர்தினால் Nichols அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
மே 25ம் தேதி, வருகிற ஞாயிறன்று, இங்கிலாந்து நேரம் பிற்பகல் 3 முதல் 4 முடிய இந்த ஆராதனை நேரம் நடைபெறும் என்று கர்தினால் Nichols அவர்கள் அறிவித்தார்.
இதற்கிடையே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வரலாற்று சிறப்பு மிக்க புனித பூமித் திருப்பயணம் வெற்றிகரமாக அமைய, அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள 400க்கும் அதிகமான யூத மத ராபிகளும், மற்ற யூதத் தலைவர்களும் திருத்தந்தை அவர்களுக்கு வாழ்த்துக்களை அனுப்பியுள்ளனர்.
யூத மதத் தலைவர்களின் இச்செய்தி, இஸ்ரேல் நாட்டில் வெளியாகும் Ha'aretz என்ற செய்தித் தாளில், மே 25, ஞாயிறன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி / ICN
5. தென் கொரியாவைச் சேர்ந்த கர்தினால் ஒருவர், முதல் முறை வட கொரியாவுக்குப் பயணம்
மே,21,2014. தென் கொரியாவின் Seoul உயர்மறை மாவட்டத்தின் பேராயர் கர்தினால் Andrew Yeom Soo-jung அவர்கள், இப்புதன் காலையில் வட கொரியாவின் Kaesong என்ற வர்த்தக நகருக்கு ஒரு நாள் பயணம் மேற்கொண்டார்.
தென் கொரியாவைச் சேர்ந்த கர்தினால் ஒருவர், வட கொரியாவுக்குச் சென்றது இதுவே முதல் முறை என்று ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
வருகிற
ஆகஸ்ட் மாதம் 14 முதல் 18 முடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
கொரியாவுக்கு மேற்கொள்ளும் மேய்ப்புப்பணி பயணத்தின்போது அவர் ஒருவேளை, வடகொரியாவின் Pyongyang நகரில் திருப்பலி ஆற்றக்கூடும் என்ற கருத்தும் ஆசிய செய்திக் குறிப்பில் காணப்படுகிறது.
Pyongyang பகுதியின் அப்போஸ்தலிக்க நிர்வாகி என்ற பொறுப்பில், கர்தினால் Yeom Soo-jung அவர்கள் மேற்கொண்ட இப்பயணத்தில் வடகொரியாவின் அரசு அதிகாரிகளுடன் எவ்வித சந்திப்பையும் மேற்கொள்ள வில்லை என்று கூறப்பட்டுள்ளது.
"ஆசியாவின் எருசலேம்" என்ற புகழைப் பெற்றிருந்த Pyongyang பகுதியில், 1953ம் ஆண்டு முடிய, ஒரு இலட்சம் கத்தோலிக்கர்களும், 2இலட்சத்திற்கும் அதிகமான கிறிஸ்தவர்களும் வாழ்ந்தனர் என்றும், தற்போது, அங்கு வெளிப்படையாக வாழமுடியாமல் தவிக்கும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 200 முதல் 2000 ஆக இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : AsiaNews
6. ஐரோப்பிய நாடுகளில், கிறிஸ்தவர்களைப் பாதுகாக்கும் செயல்பாடுகள் இல்லாதது வருத்தத்தைத் தருகிறது - பேராயர் Gänswein
மே,21,2014. மத சார்பற்ற நிலையை ஒரு போர்கால நடவடிக்கைபோல ஏற்று செயல்படுத்தும் ஐரோப்பிய நாடுகளில், கிறிஸ்தவர்களைப் பாதுகாக்கும் செயல்பாடுகள் இல்லாதது வருத்தத்தைத் தருகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
திருத்தந்தையின் இல்லப் பொறுப்பாளராகவும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் தனிப்பட்ட செயலராகவும் பணியாற்றும் பேராயர் Georg Gänswein அவர்கள், அண்மையில் சுவிட்சர்லாந்துக்கு மேற்கொண்ட பயணத்தின்போது இவ்வாறு கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில், யூதர்கள், இஸ்லாமியர் ஆகியோருக்கு எதிராக பேசுவதையும், செயல்படுவதையும் வன்மையாகக் கண்டிக்கும் ஐரோப்பிய ஒன்றியம், கிறிஸ்தவர்கள் பாகுபாடுடன் நடத்தப்படும்போது பேசாமல் இருப்பது வருத்தத்தைத் தருகிறது என்று பேராயர் Gänswein அவர்கள் கூறினார்.
இதற்கிடையே, மே 22, இவ்வியாழன் முதல், 24, இச்சனிக்கிழமை முடிய ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால், இத்தேர்தலில் மக்கள் அனைவரும் ஆர்வமாகக் கலந்துகொண்டு, தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என்ற அழைப்பை மனித உரிமை அமைப்புக்கள் விடுத்துள்ளன.
ஆதாரம் : Zenit
7. அகில உலக இயேசு சபையின் தலைவர், அருள் பணியாளர் Nicolás அவர்கள், தலைமைப் பொறுப்பைத் துறக்கவிருப்பதாக அறிவிப்பு
மே,21,2014. கடந்த ஆறு ஆண்டுகள் அகில உலக இயேசு சபையின் தலைவராகப் பணியாற்றிய அருள் பணியாளர் Adolfo Nicolás அவர்கள், தன் தலைமைப் பொறுப்பைத் துறக்கவிருப்பதாகவும், அடுத்தத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வண்ணம், இயேசு சபையின் பொது அவையை 2016ம் ஆண்டு இறுதியில் கூட்டவிருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
தான் 78 வயதை நிறைவு செய்திருப்பதாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களோடும், தன் ஆலோசகர்களோடும், மேற்கொண்ட கலந்துரையாடலின் இறுதியில், தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அருள் பணியாளர் Nicolás அவர்கள், இச்செவ்வாய் மதியம் அனைத்துலக இயேசு சபையினர் அனைவருக்கும் எழுதியுள்ள மடலில் கூறியுள்ளார்.
2008ம் ஆண்டு சனவரி 19ம் தேதி, உரோம் நகரில் நடைபெற்ற 35வது பொது அவையால் தேர்ந்தெடுக்கப்பட்ட அருள் பணியாளர் Nicolás அவர்கள், இயேசு சபையின் அதிகாரக் கட்டமைப்பில் மாற்றங்களைக் கொணரும் முயற்சியில் கடந்த சில ஆண்டுகளாக இயேசு சபையை வழிநடத்தி வருகிறார்.
கூடவிருக்கும் 36வது பொது அவை, 2015ம் ஆண்டின் இறுதியில் அறிவிக்கப்பட்டு, ஓராண்டு தயாரிப்பு முயற்சிகளின் முடிவில், 2016ம் ஆண்டு இறுதியில் கூடும்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி / ICN
8. இலங்கை மடுமாதா திருத்தலத்தில் நடைபெற்ற தியானம், மற்றும் திருப்பயணத்தில் பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்டனர்
மே,21,2014. இலங்கையின் மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மடுமாதா திருத்தலத்தில் அண்மையில் நடைபெற்ற நான்கு நாள் தியானம், மற்றும் திருப்பயணத்தில் பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்டனர்.
2013ம் ஆண்டு நவம்பர் மாதம், இலங்கைக்
கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்களால் அறிவிக்கப்பட்ட மரியன்னை ஆண்டு
அறிக்கையையொட்டி நடைபெற்ற இந்தப் பக்தி முயற்சிகளில் இலங்கையின் பல
பகுதிகளிலிருந்து வந்திருந்த பக்தர்கள் கலந்து கொண்டனர் என்று ஆசிய
செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இந்தப் பக்தி முயற்சிகளின் துவக்கமாக, மரியன்னையின் செபமாலை, தமிழ், சிங்களம், ஆங்கிலம் என்ற மூன்று மொழிகளில் சொல்லப்பட்டது என்றும், இதைத் தொடர்ந்து, கர்தினால் இரஞ்சித் அவர்களின் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது என்றும் இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் மடுமாதா திருத்தலத்தில் ஆகஸ்ட் மாதம் 15ம் கொண்டாடப்படும் திருநாளின்போது, இலங்கை, இந்தியா, மற்றும் அண்மைய நாடுகளிலிருந்து அங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது 6 இலட்சம் என்று ஆசியச் செய்திக்குறிப்பு கூறுகிறது.
No comments:
Post a Comment