Wednesday, 14 May 2014

செய்திகள் - 13.05.14

செய்திகள் - 13.05.14
 ------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் - நம் இதயங்களை, தூய ஆவியாருக்குத் திறப்பதன் வழியாக மட்டுமே கடவுளின் வழிகளை அறிந்துகொள்ள முடியும்

2. திருத்தந்தை: வாழ்வில் முக்கியமானவை அன்பும் கருணையும்

3. திருத்தந்தை பிரான்சிஸ் - கல்வி மட்டுமே ஒருவரை அருள் பணியாளராக உருவாக்க முடியாது

4. வெனிஸ் நகர் முன்னாள் முதுபெரும் தந்தை இறைபதம் சேர்ந்ததையொட்டி திருத்தந்தையின் அனுதாபத் தந்தி

5. மதங்கள் ஆற்றவேண்டிய முக்கிய பங்களிப்பு, மக்களை அமைதி நோக்கி ஊக்குவிப்பதே

6. மிக நீண்ட காலம் ஆட்சி செய்யும் தாய்லாந்து மன்னருக்கு புதியப் புனிதர்களின் புனிதப் பொருட்கள் பரிசு

7. மத்திய ஆப்ரிக்கக் குடியரசு திறந்தவெளி சிறைச்சாலையைப் போல் உள்ளது - ஆயர்கள்
கவலை

8. 2016ல் ஆஸ்துமா நோயாளிகள் எண்ணிக்கை 3.50 கோடியாக அதிகரிக்கும்'

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் - நம் இதயங்களை, தூய ஆவியாருக்குத் திறப்பதன் வழியாக மட்டுமே கடவுளின் வழிகளை அறிந்துகொள்ள முடியும்

மே,13,2014. கடவுளின் வழிகளை நம் அறிவின் வழியே அறிந்துகொள்ள முடியாது, மாறாக, நம் இதயங்களை, தூய ஆவியாருக்குத் திறப்பதன் வழியாக மட்டுமே அறிந்துகொள்ள முடியும் என்று இச்செவ்வாயன்று காலைத் திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
எவருக்கும் நம் கதவுகளை மூடாமல், தூய ஆவியார் காட்டும் பாதையில் நடைபோடுவதே, இறைவனின் வழிகளை அறிந்துகொள்வதற்கு சிறந்த வழி என்று, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றியத் திருப்பலியில் நிகழ்த்திய மறையுரையில் கூறினார் திருத்தந்தை.
புனித ஸ்தேவான் மரணத்திற்குப் பின் பல இடங்களுக்கும் சிதறி ஓடிய இயேசுவின் சீடர்கள், தங்களுடன் நற்செய்தியின் விதைகளையும் எடுத்துச் சென்றனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.
அன்றையச் சீடர்கள், யூதர்களுக்கு மட்டும் பணியாற்றவேண்டும் என்று தங்களைக் குறுக்கிக் கொள்ளவில்லை, மாறாக, புறவினத்தாருக்கும், கிரேக்கர்களுக்கும் தங்கள் பணிகள் உரியன என்ற பரந்த உள்ளத்துடன் செயல்பட்டனர் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியார் காட்டிய வழியில் அவர்கள் நடந்தனர் என்று மேலும் கூறினார்.
இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மறை வல்லுனர்கள் அவரோடு வாக்குவாதம் செய்வதையே விரும்பினர், ஏனெனில் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் போதும் என்று நம்பிய அவர்கள், மக்களின் இதயங்களைப் பற்றிக் கவலைப்படவே இல்லை என்பதையும் வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்தகையோரைப் போல வாழாமல், தூய ஆவியாருக்கு நம் இதயத்தை திறந்தவர்களாக செயல்படவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை: வாழ்வில் முக்கியமானவை அன்பும் கருணையும்

மே 13,2014. 'ஒவ்வொரு நாளும் ஒரு சிறு பகுதி என நாம் நற்செய்தியை வாசிப்போம். அதன் வழி நம் வாழ்வில் எது முக்கியமானது என்பதை நாம் கற்றுக்கொள்வோம். அவையாவன : அன்பும் கருணையுமாகும்' என இச்செவ்வாய்க்கிழமையன்று தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்
ஒவ்வொரு நாளும் 9 மொழிகளில் தன் டுவிட்டர் பக்கத்தில் மக்களுக்கான குறுஞ்செய்திகளை வெளியிட்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெரும்பாலும் இறையன்பு, பிறரன்பு, கருணை, ஆகியப் பண்புகளை வளர்க்க அழைப்புவிடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை பிரான்சிஸ் - கல்வி மட்டுமே ஒருவரை அருள் பணியாளராக உருவாக்க முடியாது

மே,13,2014. உரோம் நகரில் இயங்கிவரும் பாப்பிறை அருள் பணியாளர் பயிற்சி இல்லங்களில் பயிலும் பல்வேறு நாடுகளின் குருத்துவ மாணவர்களை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மத்தியக் கிழக்கு நாடுகள் மற்றும் உக்ரைன் நாடு அனுபவித்துவரும் துன்ப நிலைகளில் தானும் பங்கு கொள்வதாகவும், துன்புறும் மக்களுடன் தான் செபத்தில் ஒன்றித்திருப்பதாகவும் கூறினார்.
ஒவ்வொரு குருத்துவ மாணவரும் நான்கு விதமான பயிற்சிகளைப் பெறவேண்டும் என்பதை எடுத்துரைத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆன்மீகப் பயிற்சி, கல்விப் பயிற்சி, சமுதாய வாழ்வுக்கான பயிற்சி, மற்றும் அப்போஸ்தலிக்கப் பயிற்சி என்பன இந்த நான்கு பயிற்சிகள் என்று சுட்டிக்காட்டினார்.
கல்வி மட்டுமே ஒருவரை அருள் பணியாளராக உருவாக்க முடியாது, அத்துடன், சமுதாய வாழ்வு, ஜெப வாழ்வு, அப்போஸ்தலிக்க வாழ்வு ஆகியவையும் இன்றியமையாதவை என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. வெனிஸ் நகர் முன்னாள் முதுபெரும் தந்தை இறைபதம் சேர்ந்ததையொட்டி திருத்தந்தையின் அனுதாபத் தந்தி

மே 13,2014. வெனிஸ் நகர முன்னாள் முதுபெரும் தந்தை கர்தினால் Marco Cè அவர்களின் மரணத்தையொட்டி தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல் தந்தியை அம்மறைமாவட்டத்திற்கு அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மறைந்த கர்தினாலுக்கான செப உறுதிகளையும், அவர் உறவினர்கள் மற்றும் மறைமாவட்ட மக்களுக்கான ஆறுதலையும் தன் இரங்கற்தந்தியில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வாண்டு மார்ச் 19ம்தேதி முதல் உடல் நலக்குறைவு காரணமாக வெனிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்தினல் Marco Cè அவர்கள், திங்கள் இரவு உள்ளூர் நேரம் 8 மணி 10 நிமிடங்களுக்கு இறைபதம் சேர்ந்ததாக வெனிஸ் முதுபெரும்தந்தை ஃபிரான்செஸ்கோ மொராலியா அவர்கள் தெரிவித்தார்.
1925ம் ஆண்டு ஜூலை மாதம் 8ம் தேதி இத்தாலியின் Crema மறைமாவாட்டத்தில் உள்ள    Izano எனுமிடத்தில் பிறந்த  கர்தினால் அவர்கள், உரோமை கிரகோரியன் பாப்பிறைப் பலகலைக்கழகத்தில் உயர் படிப்பை முடித்தார். 1948ம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட இவர், 1979ம் ஆண்டு புனிதத் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.
23 ஆண்டுகள் வெனிஸ் நகரின் முதுபெரும் தந்தையாகப் பணியாற்றிய கர்தினால் அவர்கள், 2002ம் ஆண்டு ஓய்வு பெற்றாலும், கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை கூட, குருக்களுக்குத் தியானமளித்தல் போன்ற மேய்ப்புப்பணி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திங்கள் இரவு இறைபதம் சேர்ந்த கர்தினால் அவர்கள், கடந்த மாதம் 13ம் தேதி குருத்து ஞாயிறன்று, நோயில் பூசுதல் என்ற இறுதி திருவருட்சாதனத்தை பெற்றார் என அறிவித்தார் தற்போதைய வெனிஸ் முதுபெரும் தந்தை மொராலியா.
கர்தினால் அவர்களின் மறைவுடன் திருஅவையில் கர்தினால்களின் எண்ணிக்கை 215 ஆகக் குறைந்துள்ளது. இதில் 120 பேர் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதிற்குட்பட்டோர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. மதங்கள் ஆற்றவேண்டிய முக்கிய பங்களிப்பு, மக்களை அமைதி நோக்கி ஊக்குவிப்பதே

மே 13,2014. இவ்வுலகில் மதங்கள் ஆற்றவேண்டிய முக்கியப் பங்களிப்பு, மக்களை அமைதி நோக்கி ஊக்குவிப்பதேயாகும் என உரைத்தார் திருப்பீட உயர் அதிகாரி கர்தினால் Jean-Louis Tauran.
'அமைதிக்கான கல்வி' என்ற தலைப்பில் ஜோர்டன் நாட்டில் ஏற்பாடுச் செய்யப்பட்ட கருத்தரங்கில், அமைதிக்கானப் பாதைகளில் மதத்தலைவர்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் உரையாற்றிய மதங்களிடையே உரையாடல் பணியாற்றிவரும் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Tauran அவர்கள், வன்முறை என்பது வீரத்துவச்செயல் அல்ல, மாறாக, கண்மூடித்தனமான கோபவெறி என்பதால், முதலில் வன்முறைகள் ஒழிக்கப்படவேண்டும் என்றார்.
எச்சூழலிலும் வன்முறைகள் நியாயப்படுத்தப்பட முடியாதவை என்பது தெளிவாக்கப்படுவதுடன், மன்னிப்பு மற்றும் ஒப்புரவு மூலம் நம் எண்ணங்கள் தூய்மை பெறவேண்டும் என்பதையும் வலியுறுத்தினார் கர்தினால் Tauran.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இம்மாதம் புனித பூமியில் மேற்கொள்ளவிருக்கும் திருப்பயணத்திற்கு முன்னோடியாக, இக்கருத்தரங்கு, ஜோர்டனிலுள்ள இத்தாலியத் தூதரகம், ஐரோப்பிய அவையின் பிரதிநிதிக்குழு, ஜோர்டன் மன்னரின் மதங்களிடையே உரையாடல் கல்விக்கழகம் ஆகியவை ஏற்பாடுச் செய்துள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. மிக நீண்ட காலம் ஆட்சி செய்யும் தாய்லாந்து மன்னருக்கு புதியப் புனிதர்களின் புனிதப் பொருட்கள் பரிசு

மே,13,2014. அண்மையில் புனிதர்களாக அறிவிக்கப்பட்ட இரு திருத்தந்தையர்களுடன் நட்புறவு பாராட்டிய தாய்லாந்து மன்னர், Bhumibol Adulyadej அவர்களை, தாய்லாந்து ஆயர்கள் இஞ்ஞாயிறன்று அவரது அரசு இல்லத்தில் சந்தித்து, புதியப் புனிதர்களின் புனிதப் பொருட்களை அவருக்கு அளித்துள்ளனர்.
தாய்லாந்தின் 10 மறைமாவட்டங்களைச் சேர்ந்த ஆயர்கள் ஒன்றிணைந்து, கர்தினால் Michael Michai Kitbunchu அவர்களின் தலைமையில், மன்னர் Adulyadej அவர்களைச் சந்தித்தபோது, புனிதத் திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் தோலின் ஒரு சிறு பகுதி அடங்கியப் பேழையையும், புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களின் இரத்தம் தோய்ந்த சிறு துணியையும் மன்னருக்குப் பரிசாக வழங்கினர்.
உலகிலேயே மிக நீண்ட காலம் ஆட்சி செய்யும் மன்னர் என்ற சாதனையுடன் 67 ஆண்டுகளுக்கு மேலாக தாய்லாந்து மன்னராக இருக்கும் 87 வயதான Adulyadej அவர்கள், புனிதர்களாக உயர்த்தப்பட்ட இரு திருத்தந்தையரையும் சந்தித்துள்ளார்.
6 கோடியே 50 இலட்சம் மக்களைக் கொண்ட தாய்லாந்து நாட்டில், 4 இலட்சம் கத்தோலிக்கர்கள் வாழ்கின்றனர்.

ஆதாரம் : AsiaNews

7. மத்திய ஆப்ரிக்கக் குடியரசு திறந்தவெளி சிறைச்சாலையைப் போல் உள்ளது - ஆயர்கள்
கவலை

மே,13,2014. மத்திய ஆப்ரிக்கக் குடியரசு இன்று வன்முறையாளர்களின் கைகளில் சிக்குண்டு, திறந்தவெளி சிறைச்சாலையைப் போல் இருப்பதாக, தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
மத்திய ஆப்ரிக்கக் குடியரசு முழுவதும் பேச்சுரிமை, நடமாடுவதற்கான உரிமை மறுக்கப்பட்டு, அந்நாடு, ஒரு சிறைச்சாலை போல மாறிவிட்டதென கூறிய ஆயர்கள், ஆயுதம் தாங்கிய கும்பல்கள் ஆட்சியைக் கைப்பற்றப் போராடிவருவதால், வன்முறைகள் பெருகியுள்ளன என்றும் தெரிவித்தனர்.
சட்டத்திற்குப் புறம்பாக செயல்படும் குழுக்களிலிருந்து ஆயுதங்கள் பறிக்கப்பட்டு, தேசிய காவல்படை மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என்ற அழைப்பையும் ஆயர்கள் முன்வைத்துள்ளனர்.
வன்முறைகளின் துணையுடன், நாட்டின் வளங்கள் சட்ட விரோதமாகச் சுரண்டப்படுவது குறித்தும் தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர், மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் ஆயர்கள்.

ஆதாரம் : Fides

8. 2016ல் ஆஸ்துமா நோயாளிகள் எண்ணிக்கை 3.50 கோடியாக அதிகரிக்கும்'

மே 13,2014. 'வரும் 2016ம் ஆண்டிற்குள், இந்தியாவில் ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை, 3.50 கோடியாக அதிகரிக்கும்' என, நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
உலகில் ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், மே மாத முதல் செவ்வாய்க்கிழமையன்று, உலக ஆஸ்துமா தினமாக கொண்டாடப்பட்டதையொட்டி . சென்னை சுவாச ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் நரசிம்மன் கூறுகையில், நம் நாட்டில், 2006ம் ஆண்டு, 2.8 கோடியாக இருந்த ஆஸ்துமா நோயாளிகள் எண்ணிக்கை, 2016ல், 3.5 கோடியாக மாற வாய்ப்புள்ளது என்றார்.
காற்றில் இருக்கும் புகை, மாசு மற்றும் சில வகை உணவுகள் கூட, ஆஸ்துமா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வாமையாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றும், ஆஸ்துமா குறித்த அறிகுறிகள் இருந்தால், உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் கூறினார் மருத்துவர் நரசிம்மன்.
ஆஸ்துமாவுக்கு, 'இன்ஹேலர்'கள் நுகரப்படுவது முக்கிய மருத்துவ முறையாக உள்ளது என்பதையும் வலியுறுத்திய மருத்துவர் நரசிம்மன், ஆஸ்துமா குறித்து விழிப்புணர்வே, அதிலிருந்து மீள சிறந்த வழி, அதைத்தான் எங்கள் அறக்கட்டளை மூலம், செய்து வருகிறோம் என மேலும் தெரிவித்தார்.

ஆதாரம் : தின மலர்

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...