Wednesday, 21 May 2014

செய்திகள் - 20.05.14

செய்திகள் - 20.05.14
 ------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : நம் இதயங்கள் கலங்கிட தூய ஆவி அனுமதிப்பதில்லை

2. கொலம்பிய பேருந்து விபத்து குறித்து திருத்தந்தையின் அனுதாபத் தந்தி

3. திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

4. திருத்தந்தை ஆயர்களிடம் : முகத்தில் மகிழ்வுடனும் இதய ஆர்வத்துடனும் மக்களை நாடிச் செல்லுங்கள்

5. ஜோர்டனில் திருத்தந்தை நிறைவேற்றும் திருப்பலியில் 1400 சிறார்களுக்கு புது நன்மை

6. இஸ்ராயேல் பாலைவனத்தில் புகலிடம் தேடியுள்ள ஆப்ரிக்க அகதிகளை கத்தோலிக்க குழு சந்திப்பு

7. பங்களாதேஷ் கத்தோலிக்க பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு

8. அண்டார்டிக்காவில் பனிஉருகுதல் இருமடங்காகியுள்ளது

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : நம் இதயங்கள் கலங்கிட தூய ஆவி அனுமதிப்பதில்லை

மே 20,2014. பணத்திலும் அதிகாரத்திலும் நம்பிக்கை வைப்போர் பெறுகின்ற தற்காலிக நிம்மதிகளைவிட தூய ஆவியாரை, தங்கள் வாழ்வில் வரவேற்போர் பெறுகின்ற அமைதி நிலையானது மற்றும் உறுதியானது என இச்செவ்வாய்க்கிழமை காலை, சாந்தா மார்த்தா இல்லத் திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பணமும், அதிகாரமும் தரும் அமைதி எந்நேரமும் அழிந்துபோகலாம், ஆனால் தூய ஆவியார் வழங்கும் அமைதியோ நிலையானது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உயிர்த்த இயேசு நமக்கு வழங்கியவரே இந்த தூய ஆவியார் எனவும் கூறினார்.
உலோகம் துருப்பிடிப்பது போலவும், பங்குச்சந்தை சரிவது போலவும் செல்வம் திடீரென்று மறைந்து போகலாம், அதிகாரம் தரும் அமைதிகூட ஆட்சிக் கவிழ்ப்புகளால் மறைந்து போகலாம், ஆனால் இறைவன் தரும் அமைதியான, தூய ஆவியார் எனும் கொடை  மறைந்து போகாது எனவும் தன் மறையுரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருமுழுக்கிலும், உறுதிப்பூசுதலிலும் நாம் பெற்ற தூய ஆவியார் எனும் அமைதிக்கொடை, நம்மிடம் பத்திரமாக இருக்கும்வரை நம் இதயங்கள் கவலையுறவேண்டாம் என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. கொலம்பிய பேருந்து விபத்து குறித்து திருத்தந்தையின் அனுதாபத் தந்தி

மே 20,2014. கொலம்பியாவின் Fundacion எனும் நகர் அருகே இடம்பெற்ற பேருந்து விபத்தில் குழந்தைகள் உட்பட 32 பேர் பலியாகியுள்ளது குறித்து திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல் தந்தியை அப்பகுதி ஆயருக்கு அனுப்பியுள்ளார் திருப்பீடச் செயலர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆழ்ந்த கவலையையும் செப உறுதிகளையும் தெரிவித்து திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள், கொலம்பியாவின் சாந்தா மார்த்தா மறைமாவட்ட ஆயர் Ugo Eugenio Puccini Banfiக்கு அனுப்பியுள்ள தந்திச் செய்தியில், குழந்தைகளை இவ்விபத்தில் இழந்துள்ள குடும்பங்களுக்கு திருத்தந்தையின் ஆறுதலைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிறன்று அருங்கொடை இயக்கக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேருந்தில் திரும்பிக்கொண்டிருந்தபோது வட கொலம்பியாவின் Fundacion என்ற நகர் அருகே இந்த பேருந்து தீப்பிடித்து எரிந்ததில், 32 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பான்மையினோர் 14 வயதிற்குட்பட்ட சிறார்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

மே 20,2014. 'தூய ஆவியாரே, வாரும். எங்கள் சுயநலன்களை வெற்றிகொள்ள எமக்கு உதவியருளும்' என தன் டுவிட்டர் பக்கத்தில் இச்செவ்வாய்க்கிழமையன்று செய்தி வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
உயிர்ப்புத் திருவிழாவைத் தொடர்ந்துவரும் இந்நாட்களில், தன் மறையுரைகளிலும், டுவிட்டர் செய்திகளிலும் தூய ஆவியாரின் கொடைகள் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை ஆயர்களிடம் : முகத்தில் மகிழ்வுடனும் இதய ஆர்வத்துடனும் மக்களை நாடிச் செல்லுங்கள்

மே 20,2014. இயேசு கிறிஸ்து உயிர்த்தபின் புனித பேதுருவை நோக்கி, 'என்னைப் பின்செல்' என்று கூறிய வார்த்தைகளை மையமாக வைத்து இத்திங்கள் மாலை இத்தாலிய ஆயர்களுக்கு உரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலிய ஆயர்பேரவையின் 66வது பொதுஅவையில் கலந்துகொள்ளும் ஆயர்களை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முகத்தில் மகிழ்வுடனும், இதயத்தில் விருப்பத்துடனும் மக்களை நாடிச் செல்வதற்கே இயேசு நம்மைப் பார்த்து, 'என்னைப் பின்செல்' என அழைத்துள்ளார் எனக் கூறினார்.
இயேசுவின் மந்தையைப் பராமரிக்கும் உண்மையான மேய்ப்பர்களாகச் செயல்படவேண்டிய ஆயர்கள், நம்பிக்கைக்குரிய சாட்சிகளாகச் செயல்பட்டு, உதவி தேவைப்படுபவர்களுக்குச் சோர்வின்றிப் பணிபுரிபவர்களாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உங்களுள் இருக்கும் நம்பிக்கையைக் கண்டு, அதற்கான காரணத்தை மக்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு உங்களின் செயல்பாடுகள் இருக்கவேண்டும் எனவும் இத்தாலிய ஆயர்களிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. ஜோர்டனில் திருத்தந்தை நிறைவேற்றும் திருப்பலியில் 1400 சிறார்களுக்கு புது நன்மை

மே 20,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாரம் சனிக்கிழமையன்று ஜோர்டன் நாட்டு தலைநகர் அரங்கில் திருப்பலி நிறைவேற்றும்போது 1400 குழந்தைகள் புதுநன்மை பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பூமியில் மேற்கொள்ளும் மூன்று நாள் திருப்பயணத்தில், ஜோர்டன் நாட்டுத் தலைநகர் அம்மானின் அனைத்துலக அரங்கில் திருப்பலி நிறைவேற்றும்போது, 1400 சிறார்கள் புதுநன்மை பெறுவார்கள் என அறிவித்த அருட்பணியாளர் Rifat Bader அவர்கள், சிறார்களும் அவர்களின் பெற்றோர்களும் இத்திருப்பலியில் பங்கேற்பதற்குரிய ஏற்பாடுகள் நான்கு மாதங்களுக்கு முன்னரே துவங்கிவிட்டன என்றார்.
திருநற்கருணை எனும் திருவருட்சாதனத்தை முதன் முறையாகப் பெறவிருக்கும் சிறார்களுக்கு மறைக்கல்வி வகுப்புகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாகவும் அருள்பணியாளர் Bader அவர்கள் கூறினார்.
இச்சனிக்கிழமை ஜோர்டான் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மூன்று நாள் திருப்பயணத்தில் பெத்லகேம் மற்றும் எருசலேமின் புனிதப் பகுதிகளை தரிசிப்பதுடன், அரசுத் தலைவர்களையும் விசுவாசிகளையும் சந்திப்பார்.

ஆதாரம் : CWN

6. இஸ்ராயேல் பாலைவனத்தில் புகலிடம் தேடியுள்ள ஆப்ரிக்க அகதிகளை கத்தோலிக்க குழு சந்திப்பு

மே 20,2014. இஸ்ராயேலின் பாலைவனத்தில் அமைக்கப்பட்டிருக்கும் தடுப்புக்காவல் மையத்தில் தங்கியிருக்கும் சூடான் மற்றும் எரிட்ரியா அகதிகளைச் சென்று பார்வையிட்டனர், எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தையின் பிரதிநிதிகள்.
அருள்பணியாளர்கள் மற்றும் பெண்துறவிகள் என 13 பேரைக்கொண்ட இக்குழு, இஸ்ராயேலின் Negev முகாமில் புகலிடம் தேடித் தங்கியிருக்கும் 2300 பேரைச் சந்தித்ததோடு அவர்களின் பிரச்னைகள் குறித்தும் ஆராய்ந்தது.
நகரைவிட்டு தூரத்தில் பாலைவனத்திற்கு மத்தியில் சிறைக்கைதிகள்போல் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இம்மக்களுக்கு போதிய உணவோ, கல்வி வசதிகளோ, நலத் திட்டங்களோ இல்லை என இந்தக் கிறிஸ்தவக்குழு கவலையை வெளியிட்டுள்ளது.

ஆதாரம் : Fides

7. பங்களாதேஷ் கத்தோலிக்க பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு

மே 20,2014. பங்களாதேசின் கத்தோலிக்கப் பள்ளிகள், இவ்வாண்டு மேல்நிலைப்பள்ளி தேர்வில் அதிக தேர்ச்சி விழுக்காட்டைக் காட்டியுள்ளதாக தலத்திருஅவை அறிவித்துள்ளது.
வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் அதிகத் தேர்ச்சி விழுக்காட்டைக் காண்பித்துவரும் பங்களாதேஷ் கத்தோலிக்கப் பள்ளிகள், கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு 2.95 விழுக்காடு அதிக தேர்ச்சியைக் காண்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷ் தலத்திருஅவையின் 49 உயர்நிலைப் பள்ளிகள், 109 துவக்கப் பள்ளிகள் மற்றும் 5 கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுள் ஏறத்தாழ 95 விழுக்காட்டினர் கிறிஸ்தவரல்லாதோர் எனவும் தலத்திருஅவை தெரிவிக்கிறது.

ஆதாரம் : AsiaNews  

8. அண்டார்டிக்காவில் பனிஉருகுதல் இருமடங்காகியுள்ளது

மே 20,2014. அண்டார்டிகா கண்டம் ஒவ்வோர் ஆண்டும் 160 பில்லியன் டன் எடையளவு பனிக்கட்டியை இழந்துவருவதாக அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அண்டார்டிகா கண்டத்தின் பனிப்படலம் முழுவதையும் ஆய்வுச்செய்து வெளியிடப்பட்டுள்ள இவ்வறிக்கை, நான்கு ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையைவிட தற்போது இருமடங்கு பனி உருகுவதாகவும் கூறுகிறது.
சில நூறு ஆண்டுகளில் அண்டார்டிக்காவின் மொத்தப் பனியும் உருகலாம் என்று அஞ்சப்படும் வேளையில், மொத்தப் பனியும் உருகினால், உலகமெங்கும் கடல்மட்டம் 1 மீட்டருக்கும் அதிகமாக உயர்ந்து பல நாடுகள் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : BBC 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...