Thursday 1 May 2014

செய்திகள் - 01.05.14

செய்திகள் - 01.05.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் வியாழன் டுவிட்டர் செய்தி

2. ஒரிசாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்வதாகக் கவலை

3. மங்கோலியாவில் கிறிஸ்தவம் வளர்கிறது

4. அமெரிக்காவில் சூறாவளிப் புயலால் பாதிக்கப்பட்டவர்களை காப்பதில் கத்தோலிக்க அமைப்புகள்

5. சிரியாவில் குழந்தைகள் மீதான தாக்குதல் குறித்து UNICEF கண்டனம்

6. பாகிஸ்தானில் சமூகத்தொடர்பாளர்களுக்கு அச்சுறுத்தல் தொடர்கிறது

7. நோய் எதிர்ப்பு மருந்துகள் செயலிழக்கும் நிலை உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரிக்கை

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் வியாழன் டுவிட்டர் செய்தி

மே 01,2014. 'அரசியல் பொறுப்பில் இருப்போர் இரு விடயங்களை மனதில் கொள்ளவேண்டும் என ஒவ்வொருவரையும் கேட்டுக்கொள்கிறேன். அவையாவன : மனித மாண்பும், பொது நலனும்' என தன் டுவிட்டர் பக்கத்தில் இவ்வியாழனன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வியாழன், மே மாதம் முதல் தேதி, உலக தொழிலாளர் தினம் உலகெங்கும் சிறப்பிக்கப்படும் இவ்வேளையில், மனித மாண்பிற்கும் பொது நலனுக்கும் அரசியல் வலிமையுடையோர் முதலிடம் கொடுக்கவேண்டும் என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விண்ணப்பித்துள்ளது முக்கியத்துவம் நிறைந்த ஒன்றாக உள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. ஒரிசாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்வதாகக் கவலை

மே 01,2014. ஒரிசாவில் 2008ம் ஆண்டின் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள், இன்னும் அமைதியில் வாழமுடியாமல், அடக்குமுறைகளையும் உரிமை மீறல்களையும் எதிர்நோக்கி வருவதாக அப்பகுதி திருஅவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கிறிஸ்தவர்களுக்கு எதிரான 2008ம் ஆண்டு படுகொலைகளிலிருந்து தப்பித்த ஒரு குடும்பத்தின் வீடு அண்மையில் எரிக்கப்பட்டதாகக் கூறினார், மனித உரிமை நடவடிக்கையாளரான கத்தோலிக்க அருட்பணியாளர் அஜய் குமார் சிங்
Budruka  என்ற கிராமத்தில் Praful Digal என்ற கத்தோலிக்கர் அண்மையில் சீரமைத்த வீட்டை, இந்து தீவிரவாதிகள் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக Sudershan Mallick, Pabitra Mallick, Mallick Nageswar என்ற மூவரை காவல் துறை கைது செய்தபோதிலும், தற்போது அவர்களை எவ்வித காரணமும் கூறாமல் விடுவித்துள்ளது.
ஒரிசாவின் கந்தமால் பகுதி படுகொலைகளுக்குப்பின், அப்பகுதியிலிருந்து கிறிஸ்தவர்களை வெளியேற்றுவதே சில குழுக்களின் நோக்கமாக இருந்து வருவதாக அப்பகுதியின் புனித பால் இளங்குருமட அதிபர் அருட்பணி Pradosh Kumar Nayak கூறினார்.

ஆதாரம் : Fides

3. மங்கோலியாவில் கிறிஸ்தவம் வளர்கிறது

மே 01,2014. மங்கோலியாவில் கம்யூனிச அதிகாரிகளின் கடும் கட்டுப்பாடுகளையும் தாண்டி கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை வளர்ச்சியடைந்து வருவதாக தலத்திருஅவை மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது.
பல ஆண்டுகளாக நாத்தீகம் பரப்பப்பட்டுவந்த மங்கோலியாவில் 1992ம் ஆண்டே வெளிநாட்டு மறைபோதகர்கள் நுழைய முடிந்துள்ள நிலையில், கடந்த 20 ஆண்டுகளில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது.
மங்கோலியாவில் மத சுதந்திரம் சட்டம் மூலம் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், அரசு அதிகாரிகளின் போக்குகளால் பல கட்டுப்பாடுகளை எதிர்நோக்கவேண்டியிருப்பதாக கிறிஸ்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசின் கட்டுப்பாடுகள் ஒருபுறம் இருக்க, கிறிஸ்தவர்கள் உலகாயுதப்போக்குகளுக்கு அடிமையாகி வருவதும், கிறிஸ்தவம் புறக்கணிக்கப்படுவதற்கு காரணமாகிறது என்றார் மங்கோலியத் திருஅவை அதிகாரி ஒருவர்.
கடந்த வாரம் இயேசுவின் உயிர்ப்புத் திருவிழாவுக்கு முந்தைய நாள் 30 இளையோரும் முதியோரும் இந்நாட்டில் திருமுழுக்குப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : AsiaNews

4. அமெரிக்காவில் சூறாவளிப் புயலால் பாதிக்கப்பட்டவர்களை காப்பதில் கத்தோலிக்க அமைப்புகள்

மே 01,2014. அமெரிக்க ஐக்கிய நாட்டின் தென்பகுதியில் கடந்த ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் தினங்களில் ஏற்பட்ட சூறாவளிப் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றன கத்தோலிக்கத் துயர்துடைப்பு நிறுவனங்கள்.
Arkansas, Mississipi ஆகிய இடங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், Oklahoma, Iowa, Alabama, Tennessee ஆகிய பகுதிகளும் பாதிக்கப்பட்டு 35 உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் கத்தோலிக்க பிறரன்பு அமைப்புகள் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட மறைமாவட்டங்கள் வழி, இழப்புகளை கணக்கிடுவதுடன், அவசர உதவிகளையும் வழங்கி வருகின்றன.
உடனடி நிவாரண உதவிகள் வழங்கப்பட்டாலும், மக்களுக்கு தங்குமிடங்களை அமைத்துக் கொடுப்பது போன்ற பணிகளில் அதிகக் கவனம் செலுத்தி வருவதாக கத்தோலிக்க உதவி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஆதாரம் : CNS

5. சிரியாவில் குழந்தைகள் மீதான தாக்குதல் குறித்து UNICEF கண்டனம்

மே 01,2014. சிரியாவில் அண்மையில் குழந்தைகள்மீது சில தீவிரவாதக் குழுக்களால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது UNICEF நிறுவனம்.
Al-Shaghour எனுமிடத்தில் கடந்த செவ்வாயன்று தொழில் கல்விக்கூடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 14 மாணவர்கள் இறந்துள்ளதையும் 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதையும் குறித்து கவலையை வெளியிட்ட UNICEF எனும் ஐ.நா.வின் குழந்தைகள் அவசரகால நிதி அமைப்பு, அகதிகள் குடியிருப்பில் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று குழந்தைகள் இறந்துள்ளது குறித்தும் வருத்தம் தெரிவித்துள்ளது.
வாகனம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு, நெரிசல் மிகுந்த Homs நகர் சாலையில் வெடித்ததில் 100பேர் உயிரிழந்ததில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் எனவும் தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது UNICEF அமைப்பு.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. பாகிஸ்தானில் சமூகத்தொடர்பாளர்களுக்கு அச்சுறுத்தல் தொடர்கிறது

மே 01,2014. பாகிஸ்தான் நாட்டில் சமூகத்தொடர்பாளர்கள் அரசு புலனாய்வு பிரிவினராலும், அரசியல் கட்சிகளாலும், ஆயுதம் தாங்கிய குழுக்களாலும் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருவதாக Amnesty International  எனும் மனித உரிமைகள் கழகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
2008ம் ஆண்டிலிருந்து அந்நாட்டில் சமூகத்தொடர்பாளர்கள், அதாவது பத்திரிகையாளர்கள் 34 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உரைக்கும் Amnesty International, எண்ணற்றோர் அச்சுறுத்தப்பட்டும் கடத்தப்பட்டும் வந்துள்ளதாகத் தெரிவிக்கிறது.
மனித உரிமை தொடர்புடைய விவகாரங்களில் பத்திரிகையாளர்கள் மௌனம் காக்கவேண்டும் என்பதையே அரசின் பல்வேறு தரப்புகளும் விரும்புகின்றன என்றார் அம்மனித உரிமைகள் அமைப்பின் அதிகாரி David Griffiths.
பத்திரிகையாளர்களுக்கு எதிராகப் பல்வேறு வன்முறைகள் இடம்பெற்ற போதிலும், பாகிஸ்தான் அரசு போதிய நடவடிடக்கை எடுக்கத் தயங்கியே வருகிறது எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஆதாரம் : Amn. Int

7. நோய் எதிர்ப்பு மருந்துகள் செயலிழக்கும் நிலை உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரிக்கை

மே 01,2014. நோயை உண்டாக்கும் கிருமிகள், உருமாறி, மிகவும் சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு மருந்துகளிடமிருந்துகூட தப்பித்துக்கொள்ளும் நிலையை எட்டியிருப்பதாகவும், இது இப்போது உலக அளவில் ஒரு பெரும் அச்சுறுத்தலைத் தோற்றுவிப்பதாகவும், உலக நலவாழ்வு நிறுவனம் தன் அறிக்கையில் கூறுகிறது.
இத்தகைய நோய் எதிர்ப்பு மருந்துகளை தேவைக்கதிகமாக பரிந்துரைப்பதும், நோயாளிகள் இத்தகைய மருந்துகளை உட்கொள்ளப் பரிந்துரைக்கப்பட்ட காலம் முழுவதும் உட்கொள்ளாமல் இடையில் நிறுத்துவது போன்ற தவறுகளும் இதற்குக் காரணம் என்று அது உரைக்கிறது.
இதனால் இந்த நோய் எதிர்ப்பு மருந்துகள் செயலிழப்பது என்பது, எதிர்பார்த்ததைவிட மிகவும் வேகமாக நடந்துகொண்டிருக்கிறது என்று அந்த அறிக்கை கூறியது.
புதிய நோய் எதிர்ப்பு மருந்துகள் விரைவாக உருவாக்கப்படவேண்டும் என்று கூறும் உலக நலவாழ்வு நிறுவனம், இவைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பார்க்க, மேலும் சிறந்த கண்காணிப்பு முறைகள் அவசியம் என்றும் கூறுகிறது.

ஆதாரம் : BBC

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...