செய்திகள் - 28.02.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : திருஅவை இளையோரிடம் அணுகும்போது இயேசுவைப் பின்பற்றுகிறது
2. ஒரு திருமணம் முறியும்போது அத்தம்பதியரைத் தீர்ப்பிடக் கூடாது, திருத்தந்தை பிரான்சிஸ்
3. திருத்தந்தை பிரான்சிஸ் : திருநற்கருணை நமக்கு முக்கியமானது
4. திருத்தந்தை பிரான்சிஸ் : ஆயர்கள் நிர்வாகிகள் அல்ல, மாறாக அவர்கள் உயிர்த்த கிறிஸ்துவுக்குச் சான்று பகர்பவர்கள்
5. அமெரிக்க ஐக்கிய நாட்டில் இடம்பெறும் பெருமளவான கைதுகள் குறித்து கிறிஸ்தவத் தலைவர்கள் நடவடிக்கை
6. எயிட்ஸ் நோயை ஒழிப்பதற்கு கத்தோலிக்கத் திருஅவை, ஐ.நா. ஒன்றிணைந்த முயற்சி
7. எயிட்ஸ் நோயாளிகள் எதிர்நோக்கும் பாகுபாடுகள் களையப்பட வேண்டும், ஐ.நா.
8. இலங்கையில் காணாமல் போனவர்கள் குறித்து செஞ்சிலுவைச் சங்கம் ஆய்வு
9. சீனாவில் 382 குழந்தைகள் மீட்பு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : திருஅவை இளையோரிடம் அணுகும்போது இயேசுவைப் பின்பற்றுகிறது
பிப்.28,2014. இளையோருக்குக் கல்வி புகட்டி அவர்களை மறைப்பணித்தூதர்களாக மாற்றுவது கடினமான பணியாக இருந்தாலும், அப்பணியை பொறுமையுடனும், உடனடியாகவும் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வாரத்தில்
ஆண்டுக் கூட்டத்தை நட்த்தும் திருப்பீட இலத்தீன் அமெரிக்க அவையின் 45
உறுப்பினர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவும் பணக்கார இளைஞரும் பற்றிய நற்செய்திப் பகுதியை மையமாக வைத்துப் பேசினார்.
திருஅவை இளையோரிடம் அணுகும்போது இயேசுவைப் பின்பற்ற விரும்புகிறது என்றும், சிறந்த இளம் போதகர் இயேசு கிறிஸ்து என்பதை உறுதியாய் நம்புகிறது என்றும், அதே உணர்வை அனைவரிலும் ஏற்படுத்த விரும்புகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருஅவையின் எந்தப் போதனையிலும் வரவேற்கும் பண்பு மிளிரவேண்டும், கிறிஸ்து அந்தப் பணக்கார இளைஞரைப் பாசத்தோடும் அன்போடும் நோக்கியதுபோல, ஆண்டவர் ஒவ்வொரு மனிதரின் சூழ்நிலையிலும், தன்னைப் புறக்கணிக்கும் நிலையிலும்கூட தம்மை வைக்கிறார் என்றும் விளக்கினார் திருத்தந்தை.
பள்ளிக்குச் செல்லாமை, வேலைவாய்ப்பின்மை, தனிமை, முறிந்த
குடும்பங்களில் கசப்புணர்வு போன்ற பல கடும் இன்னல்களை இலத்தீன்
அமெரிக்காவில் இளையோர் எதிர்கொள்கின்றனர் என்றுரைத்த திருத்தந்தை, நாம் இளையோரைக் கைவிடக் கூடாது என்றும் கூறினார்.
இளையோரை எப்போதும் வரவேற்று அவர்களுடன் நேர்மையாக உரையாடி, கிறிஸ்துவின் நண்பர்களாக அவர்கள் மாறுவதற்கு உதவ வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இலத்தீன் அமெரிக்கத் திருஅவைகளுக்கு ஆலோசனை வழங்கி உதவுவதற்கென 1958ம் ஆண்டில் திருப்பீட இலத்தீன் அமெரிக்க அவை உருவாக்கப்பட்டது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. ஒரு திருமணம் முறியும்போது அத்தம்பதியரைத் தீர்ப்பிடக் கூடாது, திருத்தந்தை பிரான்சிஸ்
பிப்.28,2014. திருமண வாழ்வில் தோல்வியை அனுபவிப்பவர்களைத் தீர்ப்பிடாமல், அவர்களுடன்
திருஅவை உடனிருக்க வேண்டுமென்று இவ்வெள்ளி காலை வத்திக்கான் புனித
மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில் கூறினார்
திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்நாளைய நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், திருமணத்தின் அழகு பற்றிப் பேசியதோடு, திருமணவிலக்குப் பெற்று வாழும் மக்களைத் தீர்ப்பிடுவதை எச்சரித்தார்.
பரிசேயர்கள் இயேசுவிடம் முன்வைத்த மணவிலக்குப் பற்றிய பிரச்சனை குறித்து விளக்கிய திருத்தந்தை, இயேசு இப்பிரச்சனையின் மையத்துக்கே சென்று, படைப்பின் நாள்கள் பற்றிக் கூறியதை எடுத்துச் சொன்னார்.
படைப்பின் தொடக்கமுதல் கடவுள் மனிதரை ஆணும்பெண்ணுமாகப் படைத்தார், இதனாலேயே ஓர் ஆண் தனது பெற்றோரைவிட்டு தனது மனைவியோடு வாழ்கிறார் என்று உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், கிறிஸ்து திருஅவையின் மணவாளர் என்பதால் திருஅவையின்றி கிறிஸ்துவைப் புரிந்துகொள்ள முடியாது என்றும் கூறினார்.
கிறிஸ்து திருஅவைமீது வைத்திருக்கும் அன்பின் அழகு பற்றியும் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ், இந்நாளைய நற்செய்திப் பகுதி, கடவுள்
தம் படைப்பின் உன்னதப் படைப்பாக ஆசீர்வதித்துள்ள கிறிஸ்தவத் திருமணத்தின்
அன்புப் பயணம் குறித்து தியானிப்பதற்கு அழைப்பு விடுக்கிறது என்று
கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை பிரான்சிஸ் : திருநற்கருணை நமக்கு முக்கியமானது
பிப்.28,2014. திருநற்கருணை நமக்கு முக்கியமானது: கிறிஸ்து நம் வாழ்வில் நுழைய விரும்புகிறார் மற்றும் தம் அருளால் நிறைக்கிறார் என்று, தனது டுவிட்டர் செய்தியில் இவ்வெள்ளியன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், அர்ஜென்டினாவில் 2012ம் ஆண்டில் இரயில் விபத்தில் இறந்தவர்களில் ஒருவரின் தாய்க்கு, தனது அனுதாபங்களைத் தெரிவிக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த
இரயில் விபத்து நடந்த இடத்தில் அண்மையில் இடம்பெற்ற ஆண்டு நினைவு
திருவழிபாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இக்கடிதம்
வாசிக்கப்பட்டது.
2012ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதியன்று புவனோஸ் ஐரெஸ் இரயில் நிலையம் வந்த இரயில் மோதியதில் பலர் இறந்தனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி/ CNA
4. திருத்தந்தை பிரான்சிஸ் : ஆயர்கள் நிர்வாகிகள் அல்ல, மாறாக அவர்கள் உயிர்த்த கிறிஸ்துவுக்குச் சான்று பகர்பவர்கள்
பிப்.28,2014. ஓர் ஆயரைத் தேர்ந்தெடுக்கும்போது, நமக்கு நிர்வாகிகளோ, ஒரு நிறுவனத்தை நிர்வகிப்பவர்களோ நமக்குத் தேவையில்லை, மாறாக
தம் மந்தைக்காக வாழும் மற்றும் தம் மந்தைக்கு அருகிலிருக்கும் உயிர்த்த
கிறிஸ்துவுக்குச் சான்று பகர்பவர்கள் தேவை என்று ஆயர்கள் குழு ஒன்றிடம்
கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீட ஆயர்கள் பேராயத்தினரோடு இவ்வியாழனன்று கூட்டம் நடத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஓர் ஆயரை ஆயர் என்று காட்டுவது எது என்பது குறித்து விளக்கினார்.
ஓர் ஆயரைத் தேர்ந்தெடுக்கும்போது ஒரு நிர்வாகியோ, ஒரு நிறுவன நிர்வாகியோ தேவையில்லை, மாறாக, நற்செய்தியால் வழங்கப்படும் சுதந்திரத்தோடு இவ்வுலகைக் கவரும் செப மனிதர் தேவை என்றும் கூறிய திருத்தந்தை, ஆயர் என்பவர், திருத்தூதர்களின் வழிசெல்வதற்கு அழைக்கப்படுபவர் என்றும் தெரிவித்தார்.
மக்களிடம்
நெருக்கமாக இருப்பவர்கள் ஆயர்களாகத் தெரிவுசெய்யப்பட வேண்டுமென்று கடந்த
ஆண்டில் திருப்பீடத் தூதர்களிடம் தான் கூறியதையும் குறிப்பிட்ட திருத்தந்தை
பிரான்சிஸ், ஆயர்கள் தங்கள் பதவிக்கு ஆவல் கொள்பவர்களாக இருக்கக் கூடாது என்றும் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. அமெரிக்க ஐக்கிய நாட்டில் இடம்பெறும் பெருமளவான கைதுகள் குறித்து கிறிஸ்தவத் தலைவர்கள் நடவடிக்கை
பிப்.28,2014. அமெரிக்க
ஐக்கிய நாட்டில் அதிக எண்ணிக்கையில் இடம்பெறும் கைதுகள் குறித்து பொது
மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு அந்நாட்டுக் கத்தோலிக்க
ஆயர்கள் உட்பட பல கிறிஸ்தவத் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் மனித மாண்பைப் பாதுகாப்பதற்கு அனைத்து மக்களுக்கும் அறநெறி சார்ந்த கடமை உள்ளது என்றும், பெருமளவில் இடம்பெறும் கைதுகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கிறிஸ்தவத் தலைவர்களின் அறிக்கை கூறுகிறது.
அமெரிக்க ஐக்கிய நாட்டுச் சிறைகளில் 1980ம் ஆண்டில் 5 இலட்சம் கைதிகள் இருந்தனர், அவ்வெண்ணிக்கை 2010ம் ஆண்டில் 22 இலட்சத்துக்கு அதிகமாக இருந்தது என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
அந்நாட்டின் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையில் 1980ம் ஆண்டில் 41 ஆயிரம் போதைப்பொருள் குற்றவாளிகள் சிறைகளில் இருந்தனர், இக்குற்றவாளிக்
கைதிகளின் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் 5 இலட்சமாக உயர்ந்துள்ளது எனவும்
அமெரிக்க கிறிஸ்தவத் தலைவர்களின் அறிக்கை கூறுகிறது
ஆதாரம் : CNS
6. எயிட்ஸ் நோயை ஒழிப்பதற்கு கத்தோலிக்கத் திருஅவை, ஐ.நா. ஒன்றிணைந்த முயற்சி
பிப்.28,2014. உலக அளவில் எயிட்ஸ் நோயை ஒழிப்பதற்கு கத்தோலிக்கத் திருஅவை, ஐக்கிய நாடுகள் நிறுவனம், இன்னும் பிற சமய அமைப்புகள் இணைந்து செயல்படுவதற்குத் திட்டமிட்டுள்ளன.
கடந்த வாரத்தில் உரோமையில் நடந்த இரண்டு நாள் கூட்டத்தில் ஐ.நா. எயிட்ஸ் கட்டுப்பாட்டு மையமும், பிற நிறுவனங்களும் இவ்வாறு திட்டமிட்டுள்ளன.
சில
நாடுகளில் இயங்கும் எயிட்ஸ் நோயாளிகள் பராமரிப்பு மையங்களில் 50
விழுக்காடுவரை கத்தோலிக்கத் திருஅவை நடத்துகின்றது என்று இக்கூட்டத்தில்
அறிவிக்கப்பட்டது.
இது குறித்து வத்திக்கான் வானொலியில் பேசிய, அனைத்துலக காரித்தாஸ் நிறுவனப் பொதுச்செயலர் Michael Roy அவர்கள், எயிட்ஸ் ஒழிப்பு நடவடிக்கையில் இன்னும் அதிகத் தூரம் செய்ய வேண்டியுள்ளது எனத் தெரிவித்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
7. எயிட்ஸ் நோயாளிகள் எதிர்நோக்கும் பாகுபாடுகள் களையப்பட வேண்டும், ஐ.நா.
பிப்.28,2014.
உலகில் எயிட்ஸ் நோயாளிகள் எதிர்நோக்கும் பாகுபாடுகள் களையப்பட்டு
அவர்களிடம் அனைவரும் சகிப்புத்தன்மையுடன் நடந்துகொள்ளுமாறு கேட்டுள்ளார்
ஐ.நா. எயிட்ஸ் கட்டுப்பாட்டு மைய இயக்குனர் Michel Sidibé.
மார்ச் முதல் தேதியன்று, பாகுபாடற்ற உலக நாள் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி நடந்த நிகழ்வு ஒன்றில் இவ்வாறு கேட்டுக்கொண்டார் Sidibé.
பிறரைப் பாகுபாட்டுடன் நடத்துபவர்கள் பிறரின் உலகத்தையும், தங்களது உலகத்தையும் குறுகியதாக அமைக்கின்றனர் என்றுரைத்த Sidibé, ஒவ்வொரு மனிதரும் மாண்புடன் வாழக்கூடிய உலகம் உருவாகும் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்தார்.
மனிதர் எந்நிலையில் இருந்தாலும், ஒவ்வொருவரும்
முழுமனித மாண்புடன் வாழ்வதற்கு அவர்களுக்கு இருக்கும் உரிமையை வலியுறுத்தி
அதனை ஊக்குவிக்கும் நோக்கத்தில் பாகுபாடற்ற உலக நாள்
கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆதாரம் : UN
8. இலங்கையில் காணாமல் போனவர்கள் குறித்து செஞ்சிலுவைச் சங்கம் ஆய்வு
பிப்.28,2014.
இலங்கையில் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் தேவைகள் குறித்த மதிப்பீடு
ஒன்றைத் தொடங்கியுள்ளதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
காணாமல் போனவர்கள் குறித்த விபரங்கள் எதுவும் தெரியாமல் இருக்கும் நிகழ்வுகள் குறித்து மறு ஆய்வு செய்து, உறுதி செய்யவும், அதேபோன்று
இந்த விவகாரம் குறித்து தீர்வு காணப்பட்ட விடயங்களை முடிவுக்கு
கொண்டுவரவும் இந்த மதிப்பீடு உதவும் என்றும் செஞ்சிலுவைச் சங்கம்
கூறுகிறது.
இலங்கை அரசின் ஒப்புதலுடனேயே இந்த மதிப்பீடு செய்யப்படுவதாகக் கூறியுள்ள செஞ்சிலுவைச் சங்கம், 16,000த்துக்கும் அதிகமான காணாமல் போன நிகழ்வுகள் குறித்த பதிவுகள் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இலங்கையில் 2009ல் போர் முடிவுக்கு வந்த பின்னர், காணாமல் போனவர்கள் குறித்து ஓர் அநைத்துலக அமைப்பு மேற்கொள்ளும் முதலாவது கணிப்பீடு இதுவாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆதாரம் : BBC
9. சீனாவில் 382 குழந்தைகள் மீட்பு
பிப்.28,2014. சீனாவில் குழந்தைகளைக் கடத்தும் கும்பல்களிடமிருந்து 382 குழந்தைகளை மீட்டுள்ளதோடு, குழந்தைகளைக் கடத்தும் குற்றக்கும்பல் வலையமைப்பைச் சேர்ந்த 1094 பேரையும் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
சிறாரைத் தவறாகப் பயன்படுத்தல், மனித உரிமை மீறல்கள், ஊழல்
குறித்தக் குற்றக்கும்பல்கள் இணையதளங்களில் அதிகாரபூர்வமற்ற தத்து
கொடுக்கும் நிறுவனங்களாக இயங்கி குழந்தைகளை விற்றுவந்துள்ளதாக அதிகாரி
ஒருவர் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் கடத்தலை முறியடிப்பதில் நவீன தொழிநுட்பங்கள் பெரும் சவாலாக இருப்பதாக சீன அரசின் ஊடகம் கூறுகிறது.
சீனாவில்
பாரம்பரியமாகவே ஆண்குழந்தைகளை விரும்புகின்ற போக்கும் கடுமையான குடும்பக்
கட்டுப்பாட்டுக் கொள்கையும் குழந்தைகள் கடத்தி விற்கப்படுவதற்கு மேலும்
சாதகமாக அமைந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.
குழந்தைகளைக்
கடத்துதல் அல்லது பெற்றோரிடமிருந்து வாங்குதல் போன்ற குற்றச்செயல்களில்
ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் அளிக்கப்படும் என்று சீன அதிகாரிகள்
கூறியுள்ளனர்.
ஆதாரம் : The Guradian
No comments:
Post a Comment