Saturday, 29 March 2014

செய்திகள் - 28.03.14

செய்திகள் - 28.03.14
 ------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ்,  கிரீஸ் அரசுத்தலைவர் சந்திப்பு

2. திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவர்களின் கடவுள், காணாமல்போன தம் மகனுக்காக எப்போதும் காத்திருக்கும் ஒரு தந்தை போன்றவர்

3. திருத்தந்தை : ஒப்புரவு அருளடையாளத்தில் கடவுளின் கருணை வெளிப்படுகின்றது

4. மடகாஸ்கர் ஆயர்களிடம் திருத்தந்தை : குடிமக்களுக்கான பணியில் எப்பொழுதும் நீதியையும் ஒன்றிப்பையும் தேடுங்கள்

5. நம் தவறுகளுக்கு எதிராகப் போராடுவதற்குத் தவக்காலம் நமக்கு உதவுகின்றது, திருத்தந்தை பிரான்சிஸ்

6. ஒளிவு மறைவில்லாத மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைதிக்குச் சிறந்ததொரு வாய்ப்பு, யாங்கூன் பேராயர்

7. இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்யப்பட கிறிஸ்தவ ஆர்வலர்கள் வேண்டுகோள்

8. 11 ஆசிய நாடுகளில் போலியோ நோய் ஒழிக்கப்பட்டுவிட்டது, உலக நலவாழ்வு நிறுவனம்

9. உலகில் மரணதண்டனைகள் அதிகரிப்பு

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ்,  கிரீஸ் அரசுத்தலைவர் சந்திப்பு

மார்ச்,28,2014. கிரீஸ் நாட்டு அரசுத்தலைவர் Karolos Papoulias அவர்களை இவ்வெள்ளிக் கிழமையன்று திருப்பீடத்தில் 35 நிமிடங்கள் தனியே சந்தித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அதற்குப் பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி ஆகிய இருவரையும் சந்தித்தார் அரசுத்தலைவர்   Karolos Papoulias.
திருப்பீடத்துக்கும் கிரீஸ் நாட்டுக்கும் இடையே நிலவும் நல்லுறவு, குறிப்பாக, அந்நாட்டில் சமயக் குழுக்களின் அதிகாரப்பூர்வ நிலைமை, சமுதாயத்தில் மதத்தின் பங்கு, கிறிஸ்தவ சபைகளிடையே ஒத்துழைப்பு போன்ற விவகாரங்கள் இச்சந்திப்புகளில் இடம்பெற்றதாக திருப்பீட பத்திரிகை அலுவலகம்  அறிவித்தது.
மேலும், உலக அளவில் காணப்படும் பொருளாதார நெருக்கடி, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கிரீஸ் நாட்டின் பங்களிப்பு, மத்திய கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்களின் எதிர்காலம், உலகின் பல்வேறு பகுதிகளைப் பாதித்துள்ள மோதல்கள், அரசியல் உறுதியற்றதன்மை ஆகிய விவகாரங்களும் இச்சந்திப்புகளில் பேசப்பட்டதாக அப்பத்திரிகை அலுவலகம் கூறியது.
ஆண்கள், பெண்கள் என எட்டுப் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்த அரசுத்தலைவர் கிரீஸ் Karolos Papoulias அவர்கள் ஆர்த்தடாக்ஸ் சபையின் மகிமை என்ற தொகுப்பை திருத்தந்தைக்கு வழங்கினார். திருத்தந்தையும், அமைதியின் வானதூதர் என்ற உருவத்தையும், "நற்செய்தியின் மகிழ்வு"(Evangelii gaudium) என்ற தனது திருத்தூது அறிவுரை பிரதி ஒன்றையும் பரிசாக வழங்கினார்.
அவ்வாறு கொடுத்தபோது, நாம் இப்போது பேசிய அனைத்துச் சமூகப் பிரச்சனைகளும் இந்நூலில் அலசப்பட்டுள்ளன என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவர்களின் கடவுள், காணாமல்போன தம் மகனுக்காக எப்போதும் காத்திருக்கும் ஒரு தந்தை போன்றவர்

மார்ச்,28,2014. கடவுள் எப்போதும் மன்னிப்பவர், ஒவ்வொரு மனிதரும் தம்மிடம் திரும்பி வரும்போது அதனை அவர் கொண்டாடுகிறார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்
இவ்வெள்ளி காலை வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில், இறைவாக்கினர் ஓசேயா புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்நாளைய முதல் வாசகத்தை மையமாக வைத்து ஆற்றிய மறையுரையில் கடவுளின் கருணை பற்றிப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடவுளுக்கு மன்னிப்பதைத் தவிர வேறு என்ன செய்வது எனத் தெரியாது என்றும், அவர் மன்னிக்கும் கடவுள், இரக்கத்தின் கடவுள், மன்னிப்பதில் சோர்வடையாத கடவுள், நம் அனைவருக்காகவும் அவர் எப்போதும் காத்திருக்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை.
நம்மை மனம் மாறுவதற்கு அவர் அழைக்கும்போதுகூட அவரது கனிவு தெரிகின்றது என்றும், கிறிஸ்தவர்களாகிய நமக்கு அவர் எப்போதும் காத்திருக்கும் ஒரு தந்தையாக உள்ளார் என்றும் உரைத்த திருத்தந்தை, காணாமல்போன மகன் உவமை பற்றியும் இம்மறையுரையில் குறிப்பிட்டார்.
நான் நிறையப் பாவங்கள் செய்துள்ளேன், எனவே கடவுள் மகிழ்வாரா எனத் தெரியாது என்று யாரும் சொன்னால், அவரிடம் சென்று முயற்சி செய்யலாம், ஏனெனில் அவர் அன்புடன் எப்போதும் நம்மை வரவேற்கிறார் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
காணாமல்போன மகனின் தந்தை, அம்மகனை பெரிய விருந்து வைத்து வரவேற்றது போல, கடவுள் தம் அன்பில் எப்பொழுதும் வெற்றியடைகிறார், அவரை அணுகிச் செல்ல துணிச்சல் கொண்டவர்கள் அவரது கொண்டாட்ட்டத்தில் மகிழ்வைக் கண்டடையலாம் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.    

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை : ஒப்புரவு அருளடையாளத்தில் கடவுளின் கருணை வெளிப்படுகின்றது

மார்ச்,28,2014. ஒப்புரவு அருளடையாளம், தீர்ப்பு வழங்கும் நீதிமன்றம் அல்ல, மாறாக அது வானகத்தந்தையின் மன்னிப்பையும் கருணையையும் அனுபவிப்பதாகும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
வத்திக்கான் பாவமன்னிப்புச்சலுகை நிறுவனம் நடத்திய பயிற்சியில் பங்குபெற்ற ஏறக்குறைய 600 பேரை இவ்வெள்ளியன்று சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றுவதில் மையமாகச் செயல்படுபவர் தூய ஆவியானவர் என்பதால், இவ்வருள் அடையாளத்தை நிறைவேற்றும்  அருள்பணியாளர்கள் தூய ஆவியின் மனிதர்கள் என்றும் கூறினார்.
ஒப்புரவு அருளடையாளத்தைப் பெற வரும் விசுவாசிகளை இவர்கள், நீதிபதியாக இல்லாமல், ஏன், சாதாரண மனிதராகக்கூட இல்லாமல், கடவுளின் அன்போடு வரவேற்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
ஒப்புரவு அருளடையாளத்தின் இரு கூறுகள் பற்றி விளக்கிய திருத்தந்தை, ஒப்புரவு உயிர்த்த ஆண்டவரின் புதிய வாழ்வை வழங்கி திருமுழுக்கு அருளைப் புதுப்பிக்கின்றது என்பதால், இதனை நிறைவேற்றும் அருள்பணியாளர்கள் இதனைத் தாராளமனத்துடன் பிறருக்கு வழங்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறுவதற்கு விசுவாசிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மன்னிப்பு மற்றும் மீட்பின் அருளடையாளத்தை வழங்குவதற்கு ஒவ்வொரு மறைமாவட்டமும் பங்குத்தளங்களும் மிகுந்த அக்கறை காட்டுமாறு வலியுறுத்தியுள்ளார்.
விசுவாசிகள் ஒவ்வொரு பங்கிலும் இந்த அருளடையாளத்தைப் பெறுவதற்குரிய நேரத்தை அறிந்திருக்க வழிவகை செய்யப்படுமாறும் திருத்தந்தை பிரான்சிஸ் பரிந்துரைத்தார்.
வத்திக்கான் பாவமன்னிப்புச்சலுகை நிறுவனம் ஒவ்வோர் ஆண்டும் புதிய குருக்களுக்கு ஒப்புரவு அருளடையாளம் குறித்து பயிற்சி அளித்து வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. மடகாஸ்கர் ஆயர்களிடம் திருத்தந்தை : குடிமக்களுக்கான பணியில் எப்பொழுதும் நீதியையும் ஒன்றிப்பையும் தேடுங்கள்

மார்ச்,28,2014. பல ஆண்டுகளாக கடினமான சூழலை எதிர்நோக்கியுள்ள மடகாஸ்கர் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் பணியில் ஒவ்வொரு மனிதரின் உரிமைகளும் கடமைகளும் மதிக்கப்பட வேண்டுமெனக் கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆயர்கள் ஐந்தாண்டுக்கொருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் அட் லிமினா சந்திப்பில், இவ்வெள்ளியன்று மடகாஸ்கர் நாட்டின் 25 ஆயர்களைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், அதிகாரிகளுடன் சுமுகமான உறவை மேற்கொண்டு, குடிமக்களுக்கான பணியில் நீதியையும் ஒன்றிப்பையும் எப்பொழுதும் தேடுமாறு வலியுறுத்தினார்.
ஆயர்களின் செயல்களும் பேச்சும் அவர்களுக்கிடையே ஒற்றுமை நிலவுவதை வெளிப்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, நற்செய்தி அறிவிப்புக்கும் மனித முன்னேற்றத்துக்கும் இடையே இருக்கும் நெருக்கமான தொடர்பைச் சுட்டிக்காட்டினார்.
மடகாஸ்கர் சமுதாயத்தின் கல்வியறிவை மேம்படுத்தவும், அரசுப் பள்ளிகளில்  கிறிஸ்தவ விழுமியங்கள் போதிக்கப்படுவதில் கவனம் செலுத்தவும் ஆயர்கள் முயற்சிக்குமாறும் கூறிய திருத்தந்தை, உறுதியான குடும்பங்களைக் கட்டி எழுப்பவும், கிறிஸ்தவர்களின் விசுவாச வாழ்வு அன்றாட வாழ்வில் வெளிப்படுத்தப்படவும் ஆவன செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
குருத்துவ மற்றும் துறவற வாழ்வுக்கானப் பயிற்சிகளில் கன்னிமையும் பணிவும் உயரிய இடத்தைக் கொண்டிருப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்குமாறும், தனிமை, வளங்கள் பற்றாக்குறை, பலவீனமானவர்கள் என ஒவ்வொரு குருவின் வாழ்வு நிலையைப் புரிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை ஆயர்கள் செய்யுமாறும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்தியப் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மடகாஸ்கர் தீவு நாட்டின் ஆயர்களின் பணிகளை ஊக்குவித்ததோடு அந்நாட்டினருக்குத் தனது ஆசீரையும் செபங்களையும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. நம் தவறுகளுக்கு எதிராகப் போராடுவதற்குத் தவக்காலம் நமக்கு உதவுகின்றது, திருத்தந்தை பிரான்சிஸ்

மார்ச்,28,2014.   நாம் அனைவரும் நல்ல வாழ்வுக்காக நம்மை மேம்படுத்த வேண்டும், அதற்காக மாற வேண்டும், நம் தவறுகளுக்கு எதிராகப் போராடுவதற்குத் தவக்காலம் நமக்கு உதவுகின்றது என்று, தனது டுவிட்டர் செய்தியில் இவ்வெள்ளியன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும்,  இவ்வெள்ளி மாலை 5 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் ஆண்டவரோடு 24 மணி நேரம் என்ற பக்தி முயற்சியை துவக்கி வைக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வழிபாட்டில் ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றும் அருள்பணியாளர்களுள் ஒருவராக திருத்தந்தையும் இருக்கிறார்.
இவ்வெள்ளி இரவு மற்றும் இச்சனிக்கிழமை முழுவதும் உலகெங்கும் அனைத்து மறைமாவட்டங்களும் இந்தப் பக்தி முயற்சியைக் கடைப்பிடிக்கப்படுகின்றன. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. ஒளிவு மறைவில்லாத மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைதிக்குச் சிறந்ததொரு வாய்ப்பு, யாங்கூன் பேராயர்
மார்ச்,28,2014. நீண்ட காலம் துன்பங்களை அனுபவித்துள்ள மியான்மாரில் இடம்பெறவிருக்கும் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, அந்நாட்டில் அமைதி நிலவுவதற்கு பெரும் வாய்ப்பாக உள்ளது என்று யாங்கூன் பேராயர் சார்லஸ் போ அவர்கள் கூறியுள்ளார்.
மியான்மாரில் கடந்த முப்பது ஆண்டுகளில் முதன்முறையாக நடக்கவிருக்கும் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புப் பற்றிக் கருத்து தெரிவித்த பேராயர் போ அவர்கள், அரசின் இவ்வறிவிப்பு, இனக்குழுக்கள், வெளிநாட்டுப் பார்வையாளர்கள் உட்பட நாட்டு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தாலும், ஒளிவு மறைவின்றி நேர்மையாக இது எடுக்கப்பட்டால், அந்நாட்டில் அமைதி ஏற்படுவதற்குச் சிறந்ததொரு வாய்ப்பாக அமையும் எனக் கூறியுள்ளார்.
இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு, மியான்மாரில் அமைதி மற்றும் வளர்ச்சித் திட்டங்களைச் சிறப்பாகத் திட்டமிடுவதற்கு உதவியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ள யாங்கூன் பேராயர், இக்கணக்கெடுப்பு அனைத்துலகப் பார்வையாளர்களின் மேற்பார்வையில் ஒளிவு மறைவின்றி இடம்பெற வேண்டுமெனக் கேட்டுள்ளார்.
மியான்மாரில் 135க்கும் அதிகமான இனக் குழுக்கள் உள்ளன.

ஆதாரம் : AsiaNews                 

7. இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்யப்பட கிறிஸ்தவ ஆர்வலர்கள் வேண்டுகோள்

மார்ச்,28,2014. இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்யப்பட்டு, அநீதியாக கைது செய்யப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யப்படுமாறும், தடுப்புக்காவலில் இருப்போரின் மனித மற்றும் சட்ட உரிமைகள் காக்கப்படுமாறும்  அந்நாட்டின் கிறிஸ்தவ மனித உரிமை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இலங்கையின் உள்நாட்டுப்போரின் போதும், அதற்குப் பின்னரும் காணாமற்போயுள்ளவர்களின் உறவினர்கள் உட்பட, பல கிறிஸ்தவ மனித உரிமை ஆர்வலர்கள் தலைநகர் கொழும்புவில் இவ்வாரத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எதிர்த்து ஊர்வலம் மேற்கொண்டனர்.
சனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் மனு ஒன்றையும் இந்த ஊர்வலத்தினர் நீதி அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளனர்.
கிறிஸ்தவ ஒருமைப்பாட்டு இயக்கத்தின் உறுப்பினர்கள் அருள்பணியாளர்கள் Ashok Stephen,  Marimuttu Sathivil ஆகிய இருவரும் நீதி அமைச்சரைச் சந்தித்து இம்மனுவைக் கொடுத்துள்ளனர்.

ஆதாரம் : AsiaNews

8. 11 ஆசிய நாடுகளில் போலியோ நோய் ஒழிக்கப்பட்டுவிட்டது, உலக நலவாழ்வு நிறுவனம்

மார்ச்,28,2014. ஆசியாவில் 11 நாடுகளில் போலியோ என்ற இளம்பிள்னைவாத நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக, WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியா, இலங்கை, மியான்மார், பங்களாதேஷ், இந்தோனேசியா, பூட்டான், நேபாளம், கொரியா, மாலத்தீவுகள், தாய்லாந்து, திமோரே- லெஸ்தே ஆகிய 11 ஆசிய நாடுகளில் போலியோ நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக, WHO நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி தற்போது உலகின் மக்கள்தொகையில் 80 விழுக்காட்டினர் போலியோ நோய் அற்ற பகுதிகளில் வாழ்கின்றனர் என்றும் WHO நிறுவனம் கூறியுள்ளது.

ஆதாரம் : UN

9. உலகில் மரணதண்டனைகள் அதிகரிப்பு

மார்ச்,28,2014. உலகம் முழுவதும் மரண தண்டனை நிறைவேற்றும் நடவடிக்கை 15 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அனைத்துலக மனித உரிமைகள் அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது.
இலண்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் "ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல்' அரசு-சாரா மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில்,  உலக அளவில் சீனா, ஈரான், இராக், சவுதி அரேபியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில்தான் அதிக அளவு மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.
இதில் கடந்த 2012ம் ஆண்டில் 682 ஆக இருந்த மரணதண்டனையின் எண்ணிக்கை 15 விழுக்காடு அதிகரித்து 778 ஆக கடந்த 2013ம் ஆண்டில் உயர்ந்துள்ளது.
குறிப்பாக, ஈரானில் கடந்த ஆண்டு மட்டும் 369 மரண தண்டனைகளும், ஈராக்கில் 169 மரண தண்டனைகளும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே உலக நாடுகள் அனைத்தையும்விட சீனாவில் மரண தண்டனைகள் அதிகம் நிறைவேற்றப்படுவதாகவும், அதை, சீனா வெளியிடாமல் இரகசியமாய் வைத்திருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

ஆதாரம் : Tamilwin

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...