Monday, 31 March 2014

செய்திகள் - 31.03.14

செய்திகள் - 31.03.14
 ------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை நாம் எந்த பாதையில் உள்ளோம் என்பதைச் சிந்திக்க இத்தவக்காலம் ஒரு சிறந்த நேரம்

2. இளைய சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளை புரிந்துகொண்டுச் செயல்பட சலேசிய சபையினருக்கு திருத்தந்தை அழைப்பு

3. திருத்தந்தையின் திங்கள் டுவிட்டர் செய்தி

4. கிறிஸ்துவின் ஒளிக்கு உங்களைத் திறங்கள், திருத்தந்தை பிரான்சிஸ்

5. யாங்கூன் பேராயர் : ஒப்புரவு,  ஒறுத்தல், ஒருவருக்கொருவர் அன்பு ஆகியவையே தவக்காலச்சிறப்பு

6. வெப்பம் அதிகரிப்பது தொடர்ந்தால் மனித இனம் அழியும் ஆபத்து உள்ளது

7. தமிழகத்தில் 3 மாதங்களில் 800 பேர் மாயம் - மாணவியர் எண்ணிக்கை அதிகம்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை நாம் எந்த பாதையில் உள்ளோம் என்பதைச் சிந்திக்க இத்தவக்காலம் ஒரு சிறந்த நேரம்

மார்ச்,31,2014. கிறிஸ்தவ வாழ்வு என்பது ஒரு பயணம் என்பதை கிறிஸ்தவர்கள் உணர்ந்திருந்தாலும், அவர்கள் தேர்ந்துள்ள வழிமுறைகள் மூன்று விதங்களில் வேறுபடுகின்றன என இத்திங்கள் காலை திருப்பலியில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இத்திங்கள் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், இறைவனின் வாக்குறுதிகளை நம்பி வாழ்வின் வாயில் வழியே நடந்துசெல்லும் கிறிஸ்தவர்கள் உள்ள அதே வேளையில், தேங்கிப்போன குட்டைபோல் தங்கள் விசுவாச வாழ்வை வைத்திருப்போரும், வேறுபாதையில் வழிதவறி தொடர்ந்து நடப்போரும் உள்ளனர் என்றார்.
சரியான வழியில் நடப்போர், நடக்காமலேயே முடங்கிப்போனோர், திரும்பிவர விருப்பமில்லாமல் தவறானப்பாதையில் நடப்போர் என மூன்றுவிதமான விசுவாசிகளைப்பற்றி எடுத்துரைத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் வாக்குறுதிகளை நோக்கி நடைபோட வேண்டிய நாம், நம் பயணத்தை நிறுத்துவதற்கான சோதனைகளுக்கு செவிசாய்க்கக் கூடாது என்றார்.
இன்றைய உலகில் தவறான பாதையில் செல்வது பிரச்சனையல்ல, மாறாக அது தவறான பாதை எனத் தெரிந்தவுடன் திரும்பி சரியான பாதைக்கு வராமலிருப்பதே பிரச்னையாகிறது எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம் பாவ நிலைகள் நம்மை தவறானப் பாதையைத் தேர்ந்தெடுக்க வைக்கின்றன, ஆனால் அதிலிருந்து விலகி நடக்க இறையருள் நமக்கு உதவுகின்றது என்ற திருத்தந்தை, நாம் எந்த பாதையில் உள்ளோம் என்பதைச் சிந்திக்க இத்தவக்காலம் ஒரு சிறந்த நேரம் எனவும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. இளைய சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளை புரிந்துகொண்டுச் செயல்பட சலேசிய சபையினருக்கு திருத்தந்தை அழைப்பு

மார்ச்,31,2014. நாம் வாழும் இக்காலத்தின் எதிர்பார்ப்புக்களையும் சவால்களையும் புரிந்துகொள்ள, குறிப்பாக இளைய சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொண்டு செயல்பட தூய ஆவி உதவுவாராக என இத்திங்களன்று சலேசிய சபை உயர்மட்டக் குழுவிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சலேசிய சபையின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அருட்திரு ஆஞ்சலோ ஃபெர்னான்டஸ் ஆர்த்திமே மற்றும் அத்துறவுசபையின் புதிய நிர்வாகக்குழுவை இத்திங்கள் காலை திருப்பீடத்தில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த திருத்தந்தை, ஆன்மாக்களுக்கான பணியில் உலகப் பொருட்களை நாடிச்செல்லாமல், இறைவனையும் அவர் அரசையும் நாடவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
புனித தோன்போஸ்கோவின் எடுத்துக்காட்டான வாழ்வு, நாம் பற்றற்ற வாழ்வை மேற்கொள்ளவேண்டும் எனக்கூறுவதுடன், ஏழைகளுக்கு நெருக்காமாயிருத்தலையும், நம் உடமைகளை நிர்வகிப்பதில் வெளிப்படையாகவும், பொறுப்புடனும் செயல்படவேண்டும் என்பதையும் எதிர்பார்க்கின்றது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இளைஞர்களுடன் பணியாற்றும் சலேசிய துறவுசபையினர், இளைஞர்களின் வேலைவாய்ப்பற்ற நிலைகள், அதன் எதிர்மறை விளைவுகள் போன்றவற்றை உணர்ந்து பணியாற்றுவதோடு, இளையோரை நீதி மற்றும் அமைதியின் கருவிகளாக உருவாக்கவேண்டும் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
உண்மை அன்பு இல்லாமையே பல்வேறு தீமைகளுக்குக் காரணம் என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தையின் திங்கள் டுவிட்டர் செய்தி

மார்ச்,31,2014. 'நம் பாதையை மாற்றவும், தீமை மற்றும் ஏழ்மை எனும் உண்மை தன்மைகளுக்கு பதிலுரைக்கவும் இயைந்த காலம் தவக்காலம்' என தன் டுவிட்டர் பக்கத்தில் இத்திங்களன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தவக்காலத்தில் மனம்திருந்தி இறைவனின் பாதையில் நடைபோட தொடர்ந்து அழைப்பு விடுத்துவரும் திருத்தந்தை, இத்திங்கள் டுவிட்டர் செய்தியிலும் அதனையே வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. கிறிஸ்துவின் ஒளிக்கு உங்களைத் திறங்கள், திருத்தந்தை பிரான்சிஸ்

மார்ச்31,2014. தற்பெருமை அல்லது அகப் பார்வையற்ற நிலையால் தடைசெய்யப்படாமல், கிறிஸ்துவின் ஒளிக்கு உங்களைத் திறங்கள் என்று, இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஏறக்குறைய நாற்பதாயிரம் விசுவாசிகளிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிறவியிலேயே பார்வையிழந்தவர்க்கு இயேசு பார்வையளித்த இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிலநேரங்களில் நாம் நமது தற்பெருமையின் உச்சகட்டத்தில் மற்றவர்களை, ஏன், ஆண்டவரைக்கூட தீர்ப்பிடுகிறோம், ஆனால் கிறிஸ்தவப் பண்புகளுக்கு முரணாக இருக்கும் நடத்தைகளை விட்டொழித்து, நம் வாழ்வில் நாம் கனிதரும்படியாக, கிறிஸ்துவின் ஒளிக்கு நம்மைத் திறப்பதற்கு அழைக்கப்படுகிறோம் என்று கூறினார்.
மறைநூல் வல்லுனர்கள் இயேசுவின் பணியையும், வார்த்தைகளையும் குறைத்து மதிப்பிடும் வழிகளைத் தேடினர், அதன்மூலம், அவர்கள் தங்களின் அகவாழ்வின் பார்வையற்ற நிலையில் மிக மிக ஆழமாய் மூழ்கிக்கொண்டிருந்தனர் என்றும், தங்களின் முற்சார்பு எண்ணங்களால் தங்களைப் பூட்டி வைத்திருந்த அவர்கள் ஏற்கனவே ஒளியைக் கொண்டிருப்பதாக நம்பினார்கள், இதனால் இயேசு பற்றிய உண்மைக்கு அவர்கள் தங்களைத் திறக்கவில்லை என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.
தெளிவாகத் தெரிந்த அனைத்தையும் மறுப்பதற்கு, தங்களால் இயன்ற அனைத்தையும்  மறைநூல் வல்லுனர்கள் செய்தார்கள் என்றும் கூறிய திருத்தந்தை, இயேசுவால் குணப்படுத்தப்பட்ட பார்வையிழந்தவர், இந்த  வல்லுனர்களின் செயல்களுக்கு மாறாகசிறிது, சிறிதாக ஒளியை நெருங்கினார் என்றும் விளக்கினார்.
பார்வையற்றிருந்த மனிதரின் பயணம், இயேசுவின் பெயரை அறிவதிலிருந்து ஒவ்வொரு கட்டமாக நடந்தது என்றும், இயேசுவால் குணப்படுத்தப்பட்ட பின்னர் அவர் முதலில் இயேசுவை இறைவாக்கினர் என்று கருதி, பின்னர் கடவுளுக்கு நெருக்கமான மனிதரானார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இப்புதுமை, பலரின் அகப் பார்வையற்ற தன்மையை விளக்குகிறது என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆண்டவருக்கு நம்மைத் திறப்பதற்குப் பயப்படக் கூடாது, அவர் நம்மை நல்லவர்களாக்க, நமக்கு ஒளியைக் கொடுக்க, நம்மை மன்னிப்பதற்கு அவர் நமக்காக எப்போதும் காத்திருக்கிறார், இதை நாம் மறக்கக் கூடாது என்றும் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார்.
மேலும், உலகில் அமைதி நிலவுவதற்காக, இத்தாலியின் லொரேத்தோவிலிருந்து உரோமைக்கு நடைப்பயணமாக வந்த படைவீரர்களை இவ்வுரையின் இறுதியில் வாழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. யாங்கூன் பேராயர் : ஒப்புரவு,  ஒறுத்தல், ஒருவருக்கொருவர் அன்பு ஆகியவையே தவக்காலச்சிறப்பு

மார்ச்,31,2014. தினசரி திருப்பலிகளில் கலந்துகொள்ளல், வெள்ளிக்கிழமைகளில் சிலுவைப்பாதை வழிபாடு, உண்ணா நோன்பு, பங்குதள நடவடிக்கைகளில் பங்கேற்றல் என தவக்கால சிறப்பு நடவடிக்கைகளுக்கு விடப்பட்ட அழைப்பை யாங்கூன் மக்கள் ஏற்று செயல்படுத்திவருவதாக அறிவித்தார் மியான்மாரின் பேராயர் ஒருவர்.
உயிர்ப்புப் பெருவிழாவுக்குத் தயாரிப்பாக யாங்கூன் பெருமறைமாவட்டத்தின் ஏழைகளுடனும் குழந்தைகளுடனும் ஒருமைப்பாட்டை அறிவித்து, அவர்களின் மேம்பாட்டிற்காக திட்டங்களை செயல்படுத்திவருவதாக அறிவித்தார் யாங்கூன் பேராயர் சார்ல்ஸ் போ.
ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெறுவதிலும் ஒறுத்தல் முயற்சிகளைக் கடைப்பிடிப்பதிலும் மட்டுமல்ல, இத்தவக்காலத்தின் 40 நாட்களும் ஒருவேளை உணவை மட்டுமே உண்டு, செலவைக் குறைத்து அதனை ஏழைகளுக்கு வழங்கும் பழக்கமும் பெரிய அளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகக் கூறினார் பேராயர் போ.

ஆதாரம் : AsiaNews

6. வெப்பம் அதிகரிப்பது தொடர்ந்தால் மனித இனம் அழியும் ஆபத்து உள்ளது

மார்ச்,31,2014. எரிபொருட்களைப் பயன்படுத்துவது தற்போது உள்ளதுபோல் தொடர்ந்தால், விரைவில் மனித இனம் அழியும் ஆபத்து உள்ளது என எச்சரித்துள்ளனர் ஆஸ்திரேலிய அறிவியலாளர்கள்.
உலகம் வெப்பமடைவதும், குளிர்வதும் தற்போதுபோல் எக்காலத்திலும் இடம்பெற்றதில்லை என்ற கவலையை வெளியிட்ட ஆஸ்திரேலியாவின் Canberra பல்கலைக்கழக நலத்துறை தலைவர் Helen Berry, இத்தகைய அசாதரண தட்பவெப்பநிலை மாற்றங்கள் மக்கள் நலனையும் சமூக நிலையான தன்மைகளையும் வெகு அளவில் பாதித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இன்றைய உலகில் வெப்பம் அதிகரித்துக்கொண்டுச் செல்வது, கடந்த பல ஆண்டுகளாக பெறப்பட்டுவந்த சமூக மேம்பாட்டுப் பலன்களை பெருமளவில் பாதிக்கும் எனவும், Berryயுடன் பணியாற்றிய மேலும் இரு அறிவியலாளர்கள் இணைந்து அறிவித்துள்ளனர்.

ஆதாரம் : Catholic Online

7. தமிழகத்தில் 3 மாதங்களில் 800 பேர் மாயம் - மாணவியர் எண்ணிக்கை அதிகம்

மார்ச்,31,2014. தமிழகத்தில், கடந்த மூன்று மாதங்களில், 800 பேர் காணாமல் போயிருப்பதாகவும், இதில், மாணவியர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வில் தோல்வி, காதல் தோல்வி, குடும்பப் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால், வீட்டை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது எனக்கூறும் இவ்வறிக்கை, கடந்த ஆண்டில்,  2,413 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கிறது.
இந்த ஆண்டு மார்ச் 23ம் தேதி வரை தமிழகம் முழுவதும், 800 பேர் வரை காணாமல் போயுள்ளனர் என, காவல் துறையில் புகார்கள் பெறப்பட்டு உள்ள நிலையில்,  இப்பட்டியலில், சென்னை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.
காணாமல் போனவர்கள் குறித்த விவரங்கள், புகைப்படங்களுடன், காவல்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

ஆதாரம் : தினமலர்

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...