செய்திகள் - 27.03.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் - இறைவன் வழங்கும் தூண்டுதல்களுக்குச் செவிசாய்த்து வாழ்வது மீட்படையும் வழி
2. அமெரிக்க அரசுத் தலைவர் பாரக் ஒபாமா அவர்கள், வத்திக்கானில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் மேற்கொண்ட சந்திப்பு
3. இதுவரை, 12 அமெரிக்க அரசுத் தலைவர்கள் 6 திருத்தந்தையரைச் சந்தித்துள்ளனர்
4. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித பூமியில் மேற்கொள்ளவிருக்கும் 3 நாள் மேய்ப்புப்பணி பயணத்தின் விவரங்கள்
5. திருத்தந்தை பிரான்சிஸ் - கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் இணைந்து, மரியன்னை முன்னிலையில் தங்கள் பக்தியை வெளிப்படுத்தியிருப்பது மகிழ்வைத் தருகிறது
6. திருத்தந்தை அறிவித்துள்ள 'மன்னிப்பு விழா'வில் இந்தியத் திருஅவை முழுமையாக ஈடுபடும் - கர்தினால் ஆஸ்வல்ட் கிரேசியஸ்
7. புதிய அரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, லெபனான் நாட்டுக்கு மட்டுமே உரியது - கர்தினால் Boutros Rai
8. ஆர்க்டிக் துருவத்தில் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் - இறைவன் வழங்கும் தூண்டுதல்களுக்குச் செவிசாய்த்து வாழ்வது மீட்படையும் வழி
மார்ச்,27,2014. வெளிப்புற நடத்தைகளில் மட்டும் கவனம் செலுத்துவது வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்குச் சமம் என்றும், இறைவன்
வழங்கும் தூண்டுதல்களுக்குச் செவிசாய்த்து வாழ்வது மீட்படையும் வழி
என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் காலை திருப்பலியில்
மறையுரையாற்றினார்.
மார்ச் 27, இவ்வியாழன் காலை, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், இத்தாலிய பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அவர்களது குடும்பத்தினர் உட்பட, ஏறத்தாழ 500 பேருக்குத் திருப்பலியாற்றியத் திருத்தந்தை, தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
இயேசுவின் காலத்தில், மக்களிடமிருந்து சிறிது சிறிதாக விலகி, தங்களுடைய கொள்கைகளைக் காப்பதிலேயே கவனம் செலுத்திய ஆதிக்க வர்க்கத்தினர், இறுதியில் இலஞ்சம் போன்ற குற்றங்களிலும் மூழ்கியிருந்தனர் என்பதை திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
நம்பிக்கையின் அடிப்படையில் உருவாகும் இறையியலுக்குப் பதிலாக, கடமைகளின் அடிப்படையில் உருவாகும் இறையியலை நம்பி வாழ்வது உண்மையான விடுதலை அளிக்காது என்பதையும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
அன்பின்
அடிப்படையில் உருவாகும் விடுதலையை நோக்கி இத்தவக்காலத்தில் இறைவன் நம்
அனைவரையும் அழைத்துச் செல்ல வேண்டுவோம் என்ற விண்ணப்பத்துடன் திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையை நிறைவு செய்தார்.
மேலும், “மனமாற்றம் பெற்று, நம் திருமுழுக்கை முழுமையாக வாழ்வதற்கு தவக்காலம் என்ற அருள்நிறைந்த காலம் நமக்கு வழங்கப்பட்டுள்ளது” என்ற Twitter செய்தியை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று வெளியிட்டார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி/AsiaNews
2. அமெரிக்க அரசுத் தலைவர் பாரக் ஒபாமா அவர்கள், வத்திக்கானில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் மேற்கொண்ட சந்திப்பு
மார்ச்,27,2014. மார்ச் 27, இவ்வியாழன் காலை 10.30 மணிக்கு, அமெரிக்க அரசுத் தலைவர் பாரக் ஒபாமா அவர்கள், வத்திக்கானுக்கு வருகைதந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தார்.
ஏறத்தாழ 50 நிமிடங்கள், மூடிய கதவுகளுக்குப் பின் நடைபெற்ற இச்சந்திப்பின் இறுதியில், ஏனைய விருந்தினர்கள் முன்னிலையில், அமெரிக்க அரசுத் தலைவரும், திருத்தந்தையும் நினைவுப் பரிசுகளைப் பரிமாறிக் கொண்டனர்.
திருத்தந்தையின் சந்திப்பிற்குப் பிறகு, அரசுத் தலைவர் ஒபாமா அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரொ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீட அவையின் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தி அவர்களையும் சந்தித்தார்.
உலகின் பல பகுதிகளிலும் நிலவும் பிரச்சனைகள், மனிதாபிமான அடிப்படையிலும், மனித மாண்பின் அடிப்படையிலும் தீர்க்கப்படவேண்டும் என்ற கருத்துக்கள் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றதென திருப்பீடம் அறிவித்துள்ளது.
திருப்பீடத்திற்கும் அமெரிக்க அரசுக்கும் இடையே நிலவும் உறவுகள் குறித்த கருத்துப் பரிமாற்றத்தில், மதச் சுதந்திரம் குறித்து கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டன என்று கூறப்படுகிறது.
உலகெங்கும் நிலவிவரும் மனித வர்த்தகத்தை ஒழிக்கும் முயற்சிகள் தீவிரமாக்கப்படுவது குறித்தும் இச்சந்திப்பில் பேசப்பட்டது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. இதுவரை, 12 அமெரிக்க அரசுத் தலைவர்கள் 6 திருத்தந்தையரைச் சந்தித்துள்ளனர்
திருத்தந்தையர்களுக்கும், அமெரிக்க அரசுத் தலைவர்களுக்கும் இடையே வரலாற்றில் நிகழ்ந்துள்ள சந்திப்புக்களில், அரசுத் தலைவர் பாரக் ஒபாமா திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வியாழனன்று சந்தித்தது, 28வது முறை என்று அமெரிக்க ஆயர் பேரவை அறிக்கை விடுத்துள்ளது.
முதல் உலகப் போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து, 1919ம் ஆண்டு சனவரி 4ம் தேதி, அரசுத் தலைவர் Woodrow Wilson அவர்கள், திருத்தந்தை
15ம் பெனடிக்ட் அவர்களைச் சந்தித்தார். இவ்விருவரும் உலக அமைதிக்கென
முயற்சிகள் மேற்கொண்டனர் என்பதையும் இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
40 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, 1959ம் ஆண்டு, அரசுத் தலைவர், Dwight Eisenhower அவர்கள் திருத்தந்தை 23ம் ஜான் அவர்களை, வத்திக்கானில் சந்தித்தார் என்றும், இதுவரை, 12 அமெரிக்க அரசுத் தலைவர்கள் 6 திருத்தந்தையரைச் சந்தித்துள்ளனர் என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.
1965ம் ஆண்டு, திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு முதன்முதலாக மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களும், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு பயணங்கள் மேற்கொண்டுள்ளனர்.
தன் நீண்ட தலைமைப் பணி காலத்தில், திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களுக்கும், 5 அமெரிக்க அரசுத் தலைவர்களுக்கும் இடையே, வத்திக்கானிலும், அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் 15 சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் அடக்கத் திருப்பலி 2005ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி நடைபெற்றபோது, அமெரிக்க அரசுத் தலைவர் George Bush Jr., அவர்களும், முன்னாள் அரசுத் தலைவர்கள் George Bush Sr., Bill Clinton ஆகியோரும் இச்சடங்கில் கலந்துகொண்டனர்.
ஆதாரம் : USCCB
4. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித பூமியில் மேற்கொள்ளவிருக்கும் 3 நாள் மேய்ப்புப்பணி பயணத்தின் விவரங்கள்
மார்ச்,27,2014. மேமாதம் 24ம் தேதி முதல், 26ம்
தேதி முடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித பூமியில்
மேற்கொள்ளவிருக்கும் 3 நாள் மேய்ப்புப்பணி பயணத்தின் விவரங்களை வத்திக்கான்
இவ்வியாழனன்று வெளியிட்டது.
மே 24, சனிக்கிழமை காலை 8.15க்கு மணிக்கு, உரோம் நகர் லியோனார்தோ தாவின்சி விமான நிலையத்திலிருந்து துவங்கும் திருத்தந்தையின் பயணம், மே 26, திங்களன்று இரவு 11 மணிக்கு, உரோம் நகர் Ciampino விமான நிலையத்தில் முடிவடைகின்றது.
மே 24 மதியம் ஒரு மணி அளவில், ஜோர்டான் நாட்டுத் தலைநகர் அம்மானைச் சென்றடையும் திருத்தந்தை, அந்நாட்டு அரசர், அரசியைச் சந்தித்தபின், அந்நாட்டு அரசு அதிகாரிகளுக்கு உரையாற்றுவார்.
மாலை 4 மணியளவில், அம்மானில் உள்ள ஒரு பன்னாட்டு விளையாட்டுத் திடலில் திருத்தந்தை அவர்கள் திருப்பலியாற்றுவார்.
மாலை 7 மணிக்கு, யோர்தான் நதிக்கரையில் இயேசு திருமுழுக்கு பெற்ற புனிதத் தலத்திற்குச் செல்லும் திருத்தந்தை, அங்கு, மாற்றுத் திறனாளிகளையும், புலம் பெயர்ந்தோரையும் சந்திப்பார்.
மார்ச் 25, ஞாயிறன்று காலை, ஹெலிகாப்டர் மூலம் பெத்லகேம் செல்லும் திருத்தந்தை, பாலஸ்தீனிய அரசுத்தலைவரைச் சந்தித்தபின், அந்நாட்டு அரசு அதிகாரிகளுக்கு உரை வழங்குவார்.
காலை 11 மணிக்கு, இயேசுவின் பிறப்பிடமான பெத்லகேமில் தித்தந்தை ஆற்றும் திருப்பலி அன்றைய நாளின் முக்கிய நிகழ்வாக அமையும்.
பிற்பகல், Dheisheh என்ற முகாமில் தங்கியுள்ள அகதிகளையும், குழந்தைகளையும் சந்திக்கும் திருத்தந்தை, மாலை 4.30 மணிக்கு, ஹெலிகாப்டர் மூலம் இஸ்ரேல் நாட்டின் Tel Aviv விமான த்லாத்தைச் சென்றடைவார்.
அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம், மாலை 5.45 மணிக்கு எருசலேம் சென்றடையும் திருத்தந்தை, கான்ஸ்டாண்டிநோபிள், கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தையைத் தனிப்பட்ட முறையில் சந்திப்பார்.
மாலை 7 மணிக்கு, எருசலேம் புனித கல்லறை பசிலிக்காவில் நடைபெறும் கிறிஸ்தவ ஒன்றிப்புக் கூட்டத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிறப்புரையாற்றுவார்.
திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் கிறிஸ்தவ ஒன்றிப்பின் அடையாளமாக, முதுபெரும் தந்தை முதலாம் Athenagoras அவர்களைச் சந்தித்ததன் 50ம் ஆண்டையொட்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்பயணத்தை மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 26, திங்களன்று காலையில், இஸ்ரேல் அரசுத்தலைவர், பிரதமர், மற்றும் அரசு உயர் அதிகாரிகள் அனைவரையும் சந்திக்கும் திருத்தந்தை, மாலையில் கெத்சமனிக்கு அருகே அமைந்துள்ள கோவிலில் அருள் பணியாளர், துறவியர் அனைவரையும் சந்தித்து உரையாற்றுவார்.
மாலை 5.30 மணிக்கு, இயேசுவின் இறுதி இரவுணவு நடைபெற்ற அறையை ஒட்டிய ஓர் அரங்கத்தில் திருத்தந்தை ஆற்றும் திருப்பலி அன்றைய உச்ச நிகழ்வாக அமையும்.
மாலை 8.00 மணியளவில் Tel Aviv விமான நிலையம் சென்றடையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு வழங்கப்படும் வழியனுப்பு விழாவுக்குப் பிறகு, அங்கிருந்து கிளம்பி, இரவு 11 மணிக்கு உரோம் நகர் Ciampino விமான நிலையம் வந்தடைவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. திருத்தந்தை பிரான்சிஸ் - கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் இணைந்து, மரியன்னை முன்னிலையில் தங்கள் பக்தியை வெளிப்படுத்தியிருப்பது மகிழ்வைத் தருகிறது
மார்ச்,27,2014. கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் இணைந்து, மரியன்னை முன்னிலையில் தங்கள் பக்தியை வெளிப்படுத்தியிருப்பது மகிழ்வைத் தருகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
மார்ச் 25, கடந்த செவ்வாயன்று கொண்டாடப்பட்ட கிறிஸ்துபிறப்பு அறிவிப்புத் திருநாளன்று, லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரில், புனித
யோசேப்பு பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு
விழாவில் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் இணைந்து வந்தனர்.
கடந்த எட்டு ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும் நடைபெற்றுவரும் இந்த ஆண்டு விழாவிற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு தந்தியின் மூலம் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
Harissa என்ற இடத்தில் அமைந்துள்ள லெபனான் நாட்டின் அன்னைமரியா திருத்தலம் அருள் மிகுந்த ஓர் இடம் என்பதையும், அங்கு கிறிஸ்தவரும் இஸ்லாமியரும் இணைந்து அமைதிக்காகச் செபிக்க வேண்டும் என்றும் திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.
அன்னை
மரியாவின் பாதுகாவலில் அனைத்து லெபனான் மக்களையும் ஒப்படைத்து
செபிப்பதாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் வாழ்த்துத் தந்தியில்
குறிப்பிட்டிருந்தார்.
ஆதாரம் : VIS
6. திருத்தந்தை அறிவித்துள்ள 'மன்னிப்பு விழா'வில் இந்தியத் திருஅவை முழுமையாக ஈடுபடும் - கர்தினால் ஆஸ்வல்ட் கிரேசியஸ்
மார்ச்,27,2014. மார்ச் 28, 29 ஆகிய இரு நாட்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ள 'மன்னிப்பு விழா'வில் இந்தியத் திருஅவை முழுமையாக ஈடுபடும் என்று மும்பைப் பேராயர் கர்தினால் ஆஸ்வல்ட் கிரேசியஸ் அவர்கள் கூறினார்.
மன்னிப்பு பெறுவதும் தருவதும் நாம் பெறக்கூடிய அற்புதக் கோடைகள் என்றும், இறைவன்
இக்கொடைகளை வழங்க எப்போதும் சலிப்பதில்லை என்றும் திருத்தந்தை
கூறியுள்ளதைக் கொண்டாட இவ்விழாவின் மூலம் நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று
கர்தினால் கிரேசியஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.
மார்ச் 28, வெள்ளி மாலை மும்பை குருத்துவப் பயிற்சி இல்லத்தில் திருப்பலியுடன் இவ்விழா துவங்கும் என்றும், அன்றிரவு மும்பை நகரின் பல்வேறு ஆலயங்கள் திருவிழிப்பு வழிபாட்டுக்காகவும், ஒப்புரவு அருள் சாதனத்திற்காகவும் திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்றும் கர்தினால் கிரேசியஸ் அவர்கள் ஆசிய செய்தியிடம் கூறினார்.
வெள்ளி மாலைத் திருப்பலிக்குப் பின்னர், ஏறத்தாழ 25,000 பேர் கொண்ட ஒரு திருப்பயணம் மும்பை சிலுவைத் திடலிலிருந்து கிளம்பி, 25 கிலோமீட்டர்கள் நடந்து, இறுதியில், மலை மரியன்னை பசிலிக்காவில் நிறைவுபெறும் என்றும் கர்தினால் கிரேசியஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஆதாரம் : AsiaNews
7. புதிய அரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, லெபனான் நாட்டுக்கு மட்டுமே உரியது - கர்தினால் Boutros Rai
மார்ச்,27,2014. லெபனான் நாட்டின் புதிய அரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் கடமையும் அந்த நாட்டுக்கு மட்டுமே உரியது என்றும், ஈரான், சவூதி அரேபியா, அமேரிக்கா ஆகிய நாட்டினரின் உரிமை இதுவல்ல என்றும் அந்நாட்டு கர்தினால் ஒருவர் கூறியுள்ளார்.
லெபனான் நாட்டின் தற்போதைய அரசுத் தலைவரின் பதவிக் காலம் மே மாதம் 25ம் தேதி நிறைவடையும் தருணத்தில், அடுத்தத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமையே என்று அந்தியோக்கியாவின் மாரனைட் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, கர்தினால் Bechara Boutros Rai அவர்கள், தொலைக்காட்சியில் அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
தற்போதைய அரசுத் தலைவர் Michel Sleiman அவர்கள் பதவி இறங்கும்போது, அந்நாட்டின் அமைப்பு முறைப்படி, அரசுத் தலைவர் பதவி ஒரு கிறிஸ்தவருக்கே உரியது என்பதை கர்தினால் Boutros Rai அவர்கள் சுட்டிக்காடியுள்ளார்.
ஈரான், சவூதி அரேபியா, அமேரிக்கா போன்ற நாட்டுகளின் தலையீட்டால், திரைமறைவில் பல ஏற்பாடுகள் நடப்பது லெபனான் நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்பதையும் கர்தினால் Boutros Rai அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
ஆதாரம் : Fides
8. ஆர்க்டிக் துருவத்தில் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்
மார்ச்,27,2014. 20 இலட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு, முற்றிலும் பனியால் நிறைந்திருப்பது ஒரு பிரம்மாண்டமான காட்சிதான் என்றாலும், இங்கு உருகிச் செல்லும் பனியின் அளவு கவலையை உருவாக்குகிறது என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் கூறினார்.
புவி வெப்பமடைவதால் உருகிவரும் பனிப்பாறைகளை, கிரீன்லாந்துக்குச் சென்று இப்புதனன்று நேரடியாகப் பார்வையிட்ட பான் கி மூன் அவர்கள், செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
ஆர்க்டிக் துருவத்தில் அமைந்துள்ள Uummannaq என்ற ஊருக்கு, பனியில் சறுக்கிச் செல்லும் வண்டியில் சென்றடைந்த பான் கி மூன் அவர்கள், அங்குள்ள ஒரு கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செப வழிபாட்டில் கலந்துகொண்டார்.
சுற்றுச்சூழல் மாற்றம் குறித்து செப்டம்பர் 23ம் தேதி துவங்கவிருக்கும் அகில உலக உச்சி மாநாட்டிற்கு ஒரு தயாரிப்பாக, ஐ.நா. பொதுச் செயலரின் இப்பயணம் அமைந்ததென்று ஐ.நா. அறிக்கையொன்று கூறுகிறது.
ஆதாரம் : UN
No comments:
Post a Comment