Monday, 3 March 2014

செய்திகள் - 27.02.14

செய்திகள் - 27.02.14
------------------------------------------------------------------------------------------------------

1. முரண்பட்ட வாழ்வு நடத்தும் கிறிஸ்தவர், மற்றவர்களைப் பாவத்தில் விழச் செய்கிறார், திருத்தந்தை பிரான்சிஸ்

2. நம்மிடையே உடன்பிறந்தோருக்குரிய அன்பை வெளிப்படுத்துவதே இயேசு நமக்குத் தந்துள்ள நற்செய்தி, திருத்தந்தை

3. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மார்ச், ஏப்ரல் மாத நிகழ்வுகள்

4. புனித ஜான் இலாத்தரன் குருத்துவ மாணவர் இல்லத்துக்கு திருத்தந்தை பிரான்சிஸ்

5. திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி/பிலிப்பீன்ஸுக்கு காரித்தாஸ் உதவி

6. எங்களுக்கு உணவு தேவையில்லை, உண்மை தேவை, மன்னார் ஆயர்

7. வெனெசுவேலா கலவரங்கள் குறித்து அந்நாட்டு ஆயர்கள் கவலை

8. பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்தவ உடமைகளுக்கு பாதுகாப்பளிக்க அரசியல் தலைவர்கள் உறுதி

------------------------------------------------------------------------------------------------------

1. முரண்பட்ட வாழ்வு நடத்தும் கிறிஸ்தவர், மற்றவர்களைப் பாவத்தில் விழச் செய்கிறார், திருத்தந்தை பிரான்சிஸ்

பிப்.27,2014. "முரண்பட்ட வாழ்வு நடத்தும் கிறிஸ்தவர், மற்றவர்களைப் பாவத்தில் விழச் செய்கிறார்; பிறரைப் பாவத்தில் விழச் செய்வது, கொலை செய்வதற்குச் சமம்" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் காலை மறையுரையில் கூறினார்.
புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இவ்வியாழன் காலை ஆற்றியத் திருப்பலியில், 'உறுதிப் பூசுதல்' என்ற அருள் சாதனம் வழியே ஒவ்வொரு கிறிஸ்தவரும் பெறும் அழைப்பை அடிப்படையாகக் கொண்டு தன் மறையுரையை வழங்கினார்.
இந்த இறுதி நாள்களில் செல்வத்தைக் குவித்து வைத்திருக்கின்றீர்களே! உங்கள் வயலில் அறுவடை செய்த வேலையாள்களுக்குரிய கூலியைப் பிடித்துக் கொண்டீர்கள்: அது கூக்குரலிடுகிறது. அறுவடை செய்தவர்களின் கூக்குரல், படைகளின் ஆண்டவருடைய செவிக்கு எட்டியுள்ளது என்று திருத்தூதர் யாக்கோபு கூறும் வார்த்தைகளைக் கேட்கும் ஒருவர், கம்யுனிசக் கொள்கை உடைய ஒருவர் பேசியிருப்பதைப் போல் உணரக்கூடும். ஆயினும், இது இன்று நமக்கு வழங்கப்பட்டுள்ள ஆண்டவரின் அருள்வாக்கு என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
மற்றவர்களைப் பாவத்தில் விழச் செய்பவர்களைக் குறித்து இயேசு கூறும் வார்த்தைகளும் இன்றைய நற்செய்தியில் ஆணித்தரமாக ஒலிக்கின்றன என்பதை எடுத்துரைத்தத் திருத்தந்தை, இயேசுவின் படிப்பினைகளுக்கு முரண்பட்டு வாழும் கிறிஸ்தவர்கள், திருஅவைக்கும் பெரும் பாதிப்பை உருவாக்குகின்றனர் என்று கூறினார்.
நமது நம்பிக்கையும், வாழும் விதமும் ஒன்றுக்கொன்று முரணாக மாறாமல் இருப்பதற்கு, நமக்கு செபம் மிகவும் முக்கியமான தேவை என்பதை திருத்தந்தை தன் மறையுரையில் வலியுறுத்தினார்.
நாம் அனைவருமே பாவிகள், தவறக் கூடியவர்கள், எனவே, இறைவனின் இரக்கத்தையும், மன்னிப்பையும் நாட வேண்டியவர்கள்; மன்னிப்பதில் இறைவன் என்றும் மனம் தளர்வதில்லை என்ற ஆறுதலான வார்த்தைகளுடன் திருத்தந்தை தன் மறையுரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. நம்மிடையே உடன்பிறந்தோருக்குரிய அன்பை வெளிப்படுத்துவதே இயேசு நமக்குத் தந்துள்ள நற்செய்தி, திருத்தந்தை

பிப்.27,2014. நமது இயல்பு, பிறந்த இடம், வயது என்று நம்மிடையேயுள்ள பல வேறுபாடுகளையும் தாண்டி உடன்பிறந்தோருக்குரிய அன்பை நாம் வெளிப்படுத்துவதே இயேசு நமக்குத் தந்துள்ள நற்செய்தி என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மறையுரையில் கூறினார்.
ஃபோக்கோலாரே பக்த இயக்கத்தைச் சேர்ந்த 77 ஆயர்களை, இவ்வியாழன் மதியம் திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், கிறிஸ்துவின் சீடர்கள் மத்தியில் நிலவிய அன்பு என்பதை, அவர்கள் இவ்வாண்டுக் கூட்டத்தின் மையக் கருத்தாகக் கொண்டிருப்பதையும் பாராட்டினார்.
ஒற்றுமையின், ஒப்புரவின் இல்லமாகவும், பள்ளியாகவும் திருஅவையை மாற்றுவதே இந்தப் புதிய மில்லென்னியத்தில் நாம் சந்திக்கும் மிகப்பெரும் சவால் என்று முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் தன் சுற்றுமடலில் கூறியதை மேற்கோளாகக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், ஒப்புரவும், ஒற்றுமையும் உலகின் மிக ஆழமான ஏக்கம் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
மனிதர்களை ஒன்றிணைக்கும் இல்லத்தை, பள்ளியை உருவாக்குவது நற்செய்தி அறிவிப்பின் சிகரமாக விளங்கும் ஓர் அர்ப்பணிப்பு என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் தன் உரையில் எடுத்துரைத்தார்.
ஃபோக்கோலாரே பக்த இயக்கம் நடத்தும் கூட்டத்துக்கு அன்னைமரியின் துணையை வேண்டி அவர்கள் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மார்ச், ஏப்ரல் மாத நிகழ்வுகள்

பிப்.27,2014. வருகின்ற மார்ச், ஏப்ரல் மாதங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் நிகழ்வுகள் இவ்வியாழனன்று வெளியிடப்பட்டன.
மார்ச் 5 திருநீற்றுப் புதனன்று மாலை 4.30 மணியளவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித ஆன்சல்ம் பசிலிக்காவில் பாவ மன்னிப்பு வழிபாட்டை நிறைவேற்றிய பின், அங்கிருந்து ஊர்வலமாக புனித சபினா பசிலிக்காவில் திருநீற்றுப் புதன் திருப்பலியை நிகழ்த்துவார்.
மார்ச் 9 ஞாயிறு முதல் வெள்ளி முடிய வத்திக்கானில் வாழும் கர்தினால்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள் அனைவரோடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் இவ்வாண்டுக்கான ஆன்மீகப் பயிற்சிகளை மேற்கொள்வார்.
மார்ச் 16 தவக்கால 2ம் ஞாயிறன்று உரோமையிலுள்ள மன்றாட்டுக்களின் புனித அன்னைமரியா பங்குத்தளத்தில் மாலை திருப்பலி நிகழ்த்தி பங்கு மக்களைச் சந்திப்பார். அதேபோல் ஏப்ரல் 6 தவக்கால 3ம் ஞாயிறன்று உரோமையில் மற்றொரு பங்கில் திருப்பலி நிகழ்த்தி மக்களைச் சந்திப்பார்.
ஏப்ரல் 13 குருத்தோலை ஞாயிறுடன் துவங்கும் புனித வார நிகழ்ச்சிகள் அனைத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் புனித பேதுரு பசிலிக்காவிலும், வளாகத்திலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 20 உயிர்ப்பு ஞாயிறன்று ஊருக்கும் உலகுக்கும் என்று பொருள்படும் Urbi et Orbi செய்தியைத் திருத்தந்தை வழங்குவார் என்றும், அதைத் தொடர்ந்து ஏப்ரல் 27 இறைஇரக்க ஞாயிறன்று முத்திப்பேறுபெற்ற திருத்தந்தையர் 23ம் ஜான் அவர்களும்,  2ம் ஜான் பால் அவர்களும் புனிதர்களாக உயர்த்தப்படும் திருவழிபாட்டையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்துவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. புனித ஜான் இலாத்தரன் குருத்துவ மாணவர் இல்லத்துக்கு திருத்தந்தை பிரான்சிஸ்

பிப்.27,2014. பிப்ரவரி 28 இவ்வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித ஜான் இலாத்தரன் பாப்பிறைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள உரோம் நகரின் அருள்பணியாளர்கள் பயிற்சி இல்லத்துக்குச் செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 28 இவ்வெள்ளியன்று கொண்டாடப்படும் நம்பிக்கையின் நாயகியான அன்னைமரியாவின் திருநாளன்று, அவ்வன்னையின் பெயரால் தொடங்கப்பட்ட இப்பயிற்சி இல்லத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் துவக்கி வைக்கிறார்.
இப்பயிற்சி இல்லத்தில் தங்கியுள்ள குருமாணவர்களையும், பயிற்சியாளர்களையும் சந்திக்கும் திருத்தந்தை, குருமாணவர்கள் எழுப்பும் சில கேள்விகளுக்குப் பதில் அளிப்பார் என்றும், இதைத் தொடர்ந்து பயிற்சி இல்லத்தில் மாலை செபவழிபாட்டிலும், இரவு உணவிலும் பங்கேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 28 இவ்வெள்ளியன்று துவங்கும் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள், மார்ச் 1ம் தேதி சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சார்பில் உரோம் மறைமாவட்ட ஆயராகப் பணியாற்றும் கர்தினால் அகுஸ்தினோ வல்லினி  அவர்கள் தலைமையேற்று நடத்தும் திருப்பலியுடன் நிறைவுறும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி/பிலிப்பீன்ஸுக்கு காரித்தாஸ் உதவி

பிப்.27,2014. யாருக்கு உதவி அதிகம் தேவையோ அவர்களைத் தன் பொறுப்பில் ஏற்றுக்கொள்வது குடும்பங்களில் இயல்பாகவே காணப்படும். எனவே பலமற்ற நிலை கண்டு பயப்பட வேண்டாம் என்பது திருத்த்ந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியாக அமைந்தது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிலிப்பீன்ஸ் நாட்டைத் தாக்கிய ஹையான் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரோம் மறைமாவட்டம் 1,50,056 யூரோக்கள் உதவித்தொகையை அனுப்பியுள்ளது.
ஹையான் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கென உரோம் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் திரட்டப்பட்ட இந்த நிதியை, இத்தாலிய காரித்தாஸ் அமைப்பின் வழியாக பிலிப்பீன்ஸ் மக்களுக்கு அனுப்பியுள்ளதாக, உரோம் காரித்தாஸ் இயக்குனர் அருள்பணியாளர் என்ரிக்கோ ஃபெரோச்சி அவர்கள் கூறினார்.
அகில உலக காரித்தாஸ் அமைப்பு, பிலிப்பீன்ஸ் நாட்டின் அனைத்து மறைமாவட்டங்களுடன் இணைந்து அந்நாட்டில் மேற்கொண்டுள்ள அனைத்துச் சீரமைப்புப் பணிகளுக்கும் அந்த நிதி உதவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. எங்களுக்கு உணவு தேவையில்லை, உண்மை தேவை, மன்னார் ஆயர்

பிப்.27,2014. எங்களுக்கு உணவு தேவையில்லை, உண்மை தேவை, அதாவது எங்கள் உறவினர்களுக்கும், ஏனையத் தமிழர்களுக்கும் என்ன நடந்தது என்ற உண்மை தேவை என்று இலங்கையின் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் கூறினார்.
இலங்கையின் வடபகுதியில் திருக்கீத்தீஸ்வரர் கோவிலுக்கு அருகே புதைக்கப்பட்டிருந்த 80 பேருக்கும் அதிகமானவர்களின் எலும்புக்கூடுகள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டன.
அடையாளம் தெரியாமல் இறந்துபோன இவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காகத் திருப்பலி ஒப்புக்கொடுத்த ஆயர் ஜோசப், அங்குப் புதைக்கப்பட்டவர்களுக்கு உண்மையிலேயே என்ன ஆயிற்று என்பதைத் தெரிவிக்க அரசு கடமைப்பட்டுள்ளது என்று வலியுறுத்தினார்.
ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப்போரில் இறந்தோர் மற்றும் காணாமற்போனோர் அனைவரையும் குறித்த உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்கும் தார்மீகக் கடமை அரசுக்கு உள்ளதென்றும் மன்னார் ஆயர் ஜோசப் கூறினார்.
ஆதாரம் : AsiaNews


7. வெனெசுவேலா கலவரங்கள் குறித்து அந்நாட்டு ஆயர்கள் கவலை
பிப்.,27.2014. வெனெசுவேலா நாட்டின் கலவரங்களில் இறந்தவர்கள் அனைவரும், அரசைச் சார்ந்தவர்கள், அல்லது எதிர்தரப்பைச் சார்ந்தவர்கள் என்று எண்ணிப் பார்ப்பதைவிட அவர்கள் அனைவரும் பல்வேறு குடும்பங்களைச் சார்ந்தவர்கள் என்று எண்ணிப் பார்ப்பது அவசியம் என்று வெனெசுவேலா ஆயர்கள் கூறியுள்ளனர்.
San Cristobal என்ற பகுதியில் மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே உருவான மோதல்கள் கடந்த மூன்று வாரங்களாக வெனெசுவேலா நாட்டின் பல பகுதிகளிலும் பரவியுள்ளன.
இந்த மோதல்கள் குறித்து கவலை வெளியிட்டுள்ள ஆயர்கள், மாணவர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிடுவது அவர்களின் அடிப்படை உரிமை என்றாலும், தங்கள் கருத்துக்களை வெளியிடும் முறைகளில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
மோதல்களில் முதன் முதலாகப் பலியாவது உண்மைகளே என்பதை வலியுறுத்திக் கூறியுள்ள ஆயர்கள், அரசும், மாணவர் அமைப்புகளும், மோதல்களில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் உரையாடலை மேற்கொள்வது ஒன்றே தகுந்த தீர்வு என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆதாரம் : Fides

8. பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்தவ உடமைகளுக்கு பாதுகாப்பளிக்க அரசியல் தலைவர்கள் உறுதி
பிப்.,27.2014. பாகிஸ்தானில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களும், அவற்றைச் சார்ந்த நிறுவனங்களும், நிலங்களும் பாதுகாக்கப்படும் என்று அரசியல் தலைவர்கள் கூறியுள்ளனர்.
அண்மையில் லாகூர் உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பொறுப்பேற்ற Sebastian Francis Shaw அவர்களைச் சந்தித்த அரசியல் தலைவர்கள் இந்த உறுதியை அவரிடம் அளித்தனர்.
National Assembly என்ற அரசியல் கட்சியின் தலைவரான Ayaz Sadiq அவர்கள், தான் புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளியில் பயின்றவர் என்பதையும், கத்தோலிக்கக் கல்வியே தன்னை கட்டுப்பாட்டிலும், ஆளுமையிலும் வளர்த்தது என்பதையும் பேராயரிடம் மகிழ்வுடன் கூறினார்.
பாகிஸ்தான் காரித்தாஸ் அமைப்புக்குச் சொந்தமான ஓர் இடத்தை 2012ம் ஆண்டு வன்முறை கும்பல் அபகரித்ததைச் சுட்டிக்காட்டிப் பேசிய திருவாளர் Sadiq அவர்கள், இந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்படும் என்றும் கூறினார்.
பஞ்சாப் மாநிலத்தின் மனித உரிமை மற்றும் சிறுபானமைத்துறையின் அமைச்சரான, Khalil Tahir Sindhu என்ற கத்தோலிக்கர், சிறுபான்மை சமுதாயத்தினர், குறிப்பாக கிறிஸ்தவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு, தான் தனிப்பட்ட கவனம் செலுத்துவேன் என்று பேராயர் Shaw அவர்களிடம் கூறியுள்ளார்.

ஆதாரம் : Fides

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...