Monday, 9 September 2013

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், சென்னையிலிருந்து 75 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. வேடந்தாங்கலைச் சுற்றி அமைந்துள்ள மரங்களும், அதற்கு நடுவிலுள்ள ஏரியும், பறவைகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்ற சூழ்நிலையாக இருப்பதால், பல ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்கான மிகச் சிறந்த இடமாக இது திகழ்கிறது. இந்தியாவில் உள்ள மிகப் பழமையான பறவைகள் சரணாலயம் என்றும் இதனைக் கூறலாம். 1700ம் ஆண்டுகளில் இவ்விடம், பறவைகளை வேட்டையாடுவதற்கு ஏற்ற இடமாக இருந்துள்ளது. அதனால், இவ்விடத்தை வேடர்கள் தங்கிய இடமாக அழைத்துள்ளனர். அதுதான் பின்னாளில் மருவி வேடந்தாங்கல் என்று ஆனது. வேடந்தாங்கலைச் சுற்றியுள்ள மக்களின் முயற்சியாலும், சமூக ஆர்வலர்களின் முயற்சியின் பலனாகவும், 1858ம் ஆண்டு செங்கல்பட்டு ஆட்சியரின் ஆணைப்படி இவ்விடம் பறவைகளின் சரணாலயமாக மாறியது. பொதுவாக எப்போதும் மூடப்பட்டிருக்கும் இந்தச் சரணாலயம், பறவைகள் வரும் காலத்தில் மட்டுமே திறந்திருக்கும். நவம்பர் முதல் மார்ச் வரை இங்குச் செல்ல உகந்த காலமாகும். நவம்பர், டிசம்பர் மாதங்களில்  ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் மிகவும் குளிரான காலநிலை இருக்கும். அதில் இருந்து தப்பிக்கவே, பறவைகள் இந்தியா போன்ற வெப்ப நாடுகளுக்கு வந்து இனப்பெருக்கம் செய்கின்றன. பின்டெய்ல், கார்கனே, கிரேவாக்டெய்ல் என பல்வேறு வகையான பறவைகள் வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து இனப்பெருக்கம் செய்கின்றன.
இங்கு வரும் பறவைகள், அங்குள்ள மரங்களில் அழகான கூடுகள் அமைத்து, அதில் முட்டையிட்டு, குஞ்சு பொரித்து, அவை கடல் கடந்து செல்லும் அளவுக்கு தயாராகும்போது, பறவைகள் குஞ்சுகளுடன் தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்புகின்றன.
இந்த வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தைப் பாதுகாக்க, அதனைச் சுற்றி உள்ள கிராம மக்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பறவைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதோடு, பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்த்தல் போன்ற விடயங்களிலும் அம்மக்கள் ஒற்றுமையோடு ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், வேடந்தாங்கல் பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் தீபாவளிப் பண்டிகையை அமைதியான பண்டிகையாகக் கொண்டாடுகின்றனர்.

ஆதாரம் : தினமணி
 

No comments:

Post a Comment