உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டய வகுப்பு ஆரம்பம்
சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டய வகுப்பின் தொடக்க விழா நேற்று (12.09.2013) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் மூ.இராசாராம், சுவடிக் கண்காட்சியையும் தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டயவகுப்பைவும் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில், “உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்று வந்த தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டய வகுப்பு பின்னர் நிறுத்தப்பட்டது. இப்பட்டய வகுப்பு சில ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆட்சியில் மீண்டும் தொடங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
தமிழின் தொன்மை, அதன் பாரம்பரியம் சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முந்தையதாகும். அப்பாரம்பரியப் பெருமைமிகு தமிழை உலகறியச் செய்து, அதன் சிறப்பினை பறைச்சாற்றுவதற்கு கல்கத்தாவில் உள்ள சாந்திநிகேதன் போன்ற உயர்கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும்.
சாந்தி நிகேதன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஓலைச் சுவடிகள் அதிக அளவில் உள்ளன. அச்சுவடிகளை தமிழாய்வாளர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு நூலாக வெளியிட வேண்டும். வட தமிழகப் பகுதிகளில் கிடைக்கின்றச் சுவடிகளை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கும், தென் தமிழகப் பகுதிகளில் கிடைக்கின்றச் சுவடிகளை மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்திற்கும் வழங்கவேண்டும் என்று தமிழறிஞர்களையும், சுவடிகளைப் பாதுகாத்துவரும் தமிழ் ஆர்வலர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
அவ்வாறு சுவடிகளை வழங்குபவர்களை தமிழக அரசு சிறப்பிக்கும்” என்று குறிப்பிட்டார். விழாவில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன், மயிலம் தமிழறிஞர் வே.சிவசுப்பிரமணியன், முனைவர் அ.சதீஷ், முனைவர் சு.தாமரைப்பாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment