செய்திகள் - 19.09.13
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. மேலான பதவிகளைப் பற்றி கனவுகண்டு, தற்போதைய பணியை நிறைவின்றி செய்யக்கூடாது - திருத்தந்தை பிரான்சிஸ்
2. லித்துவேனியப் பிரதமர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சந்திப்பு
3. மெக்சிகோ புயல்களால் பாதிக்கப்பட்டோருக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள அனுதாபத் தந்தி
4. இஸ்லாமிய மதகுரு Ahmed al-Tayyeb அவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள பாராட்டு
5. திருத்தந்தை Cagliari நகரில் மேற்கொள்ளும் மேய்ப்புப்பணி பயணத்தின் முழு விவரங்கள்
6. 'Te Deum' நன்றிப்பாடலுடன் தங்கள் தேசிய நாளைக் கொண்டாடும் வெகு சில நாடுகளில் Chile நாடும் ஒன்று
7. முதுபெரும் தந்தை சாக்கோ Kurdistan பகுதி தேர்தலையொட்டி வெளியிட்டுள்ள செய்தி
8. பேராயர் Oscar Romero அவர்கள், இங்கிலாந்தின் Southwark பேராலயத்தில் கௌரவிக்கப்பட்டார்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. மேலான பதவிகளைப் பற்றி கனவுகண்டு, தற்போதைய பணியை நிறைவின்றி செய்யக்கூடாது - திருத்தந்தை பிரான்சிஸ்
செப்.19,2013. மக்களின் ஆயர்களாக நம்மை நாமே நியமித்துக் கொள்வதில்லை, மாறாக, இந்த நியமனம் கிறிஸ்து நமக்கு வழங்கும் ஒரு கொடை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இவ்வாண்டு
புதிதாகப் பொறுப்பேற்ற இலத்தீன் மற்றும் கீழை வழிபாட்டு முறைகளைச் சார்ந்த
120 கத்தோலிக்க ஆயர்கள் வத்திக்கானில் மேற்கொண்ட ஒரு கூட்டத்தின்
இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைத் திருப்பீடத்தில் இவ்வியாழன்
காலை சந்தித்தபோது, அவர்களிடம் ஆயர்கள் பணியைக் குறித்து மூன்று கருத்துக்களை திருத்தந்தை எடுத்துரைத்தார்.
தாங்கள் ஏற்றுள்ள பொறுப்பை தாராள மனதுடன் நிறைவேற்றுவது, மந்தையுடன் இணைந்து நடப்பது, மக்களுடன் தங்குவது என்ற மூன்று கருத்துக்கள் ஆயர்களின் அழைப்பில் அடங்கியுள்ள அடிப்படை உண்மைகள் என்று திருத்தந்தை கூறினார்.
மந்தையுடன் இணைந்து நடப்பது என்ற கருத்தை திருத்தந்தை விளக்கியபோது, மறைமாவட்டத்தில் உழைக்கும் அருள் பணியாளர்களுக்கு நேரம் ஒதுக்கி, அவர்களுடைய கடினமானச் சூழல்களைப் புரிந்துகொள்வதும் ஆயர்களின் ஒரு முக்கிய கடமை என்பதை வலியுறுத்தினார்.
மக்களுடன் தங்குவது என்ற கருத்தை எடுத்துரைத்தபோது, தங்களுக்கு வழங்கப்பட்ட மறைமாவட்டங்களில் மக்களுடன் முழுநேரம் தங்கியிருப்பதில் ஆயர்கள் நிறைவுகாண வேண்டும் என்றும், அவர்களுடைய தற்போதைய நிலையைவிட மேலான பதவிகளைப் பற்றி கனவுகண்டு, தற்போதைய பணியை நிறைவின்றி செய்யக்கூடாது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவுறுத்தினார்.
ஆயர்கள் திருப்பீடப் பேராயத்தின் தலைவர் கர்தினால் Marc Ouellet, கீழை வழிபாட்டு முறை திருப்பீடப் பேராயத்தின் தலைவர் Leonardo Sandri, மற்றும் மணிலா பேராயர் கர்தினால் Luis Antonio Tagle ஆகியோர் புதிய ஆயர்களோடு திருத்தந்தையைச் சந்தித்தனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. லித்துவேனியப் பிரதமர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சந்திப்பு
செப்.19,2013. செப்டம்பர் 19, இவ்வியாழன் காலை உரோம் நேரம் 11 மணியளவில், லித்துவேனியப் பிரதமர் Algirdas Butkevičius அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைத் திருப்பீடத்தில் சந்தித்து பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டார்.
இரு தலைவர்களுக்கும் இடையேயான இச்சந்திப்பு அரைமணி நேரம் நீடித்தது. அதன்பின், பிரதமர் Algirdas Butkevičius அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்த்தோனே அவர்களையும், பன்னாட்டு உறவுகளின் திருப்பீடச் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி அவர்களையும் சந்தித்து உரையாடினார்.
இச்சந்திப்புகளின்போது, லித்துவேனியாவுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவு குறித்தும், கல்வி, சமுதாய மேம்பாடு ஆகியவைகளில் இவ்விரு தரப்பினரும் எவ்வகையில் இன்னும் இணைந்து செயலாற்ற முடியும் என்பது குறித்தும் பேசப்பட்டது.
குடும்பங்களுக்கான ஆதரவு, மற்றும், ஆன்மீக மதிப்பீடுகள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தல் போன்றவைகளில் திருஅவையின் அர்ப்பணம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றிப்பு அவையின் தலைமைப் பொறுப்பை தற்போது லித்துவேனியக் குடியரசு மேற்கொண்டிருப்பதால், மத்தியக்கிழக்குப் பகுதியில் அமைதியை நிலைநாட்டவேண்டியதில் ஐரோப்பாவின் பங்கு, குறிப்பாக சிரியாவில் அரசியல் தீர்வு, பேச்சுவார்த்தைகள் மூலம் காணப்படவேண்டியதன் அவசியம் ஆகியவை குறித்து இச்சந்திப்புகளின்போது விவாதிக்கப்பட்டது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. மெக்சிகோ புயல்களால் பாதிக்கப்பட்டோருக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள அனுதாபத் தந்தி
செப்.19,2013.
கடந்த சில நாட்களாக மெக்சிகோவில் வீசிவரும் புயல்களால்
பாதிக்கப்பட்டோருக்கு தன் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் தந்தியொன்றை அனுப்பியுள்ளார்.
திருத்தந்தையின் சார்பில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே அவர்கள், மெக்சிகோ ஆயர்கள் பேரவையின் தலைவர் கரத்தினால் José Francisco Robles Ortega அவர்களுக்கு அனுப்பியுள்ள இத்தந்தியில், புயலால் உயிரிழந்தவர்களுக்கு தன் செபங்களையும், உறவுகளையும் உடைமைகளையும் இழந்தோருக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
"Ingrid" மற்றும் "Manuel" என்ற இரு புயல்கள் ஒன்றன்பின் ஒன்றாக தாக்கியதால், இதுவரை 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்றும், மேலும் 58 பேர் காணாமற் போயுள்ளனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.
இவ்விரு புயல்களால் பாதிக்கப்பட்டோரையும், துயர்துடைப்புப் பணிகளில் ஈடுபட்டிருப்போரையும் Guadalupe அன்னைமரியாவின் பாதுகாவலில் ஒப்படைப்பதாகக் கூறியத் திருத்தந்தை, அனைவருக்கும் தன் செபங்களையும், ஆசீரையும் அனுப்புவதாகவும் இத்தந்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. இஸ்லாமிய மதகுரு Ahmed al-Tayyeb அவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள பாராட்டு
கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் இடையே புரிந்துகொள்ளுதலை ஊக்குவிக்கவும், உலகில் அமைதியையும், நீதியையும் கட்டியெழுப்பவும் எகிப்தின் கெய்ரோ நகரில் அமைந்துள்ள Al-Azhar இஸ்லாமியப் பல்கலைக்கழகம் ஆற்றி வரும் பணிகளுக்கு, தன் பாராட்டை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கெய்ரோவின் Al-Azhar இஸ்லாமியப் பல்கலைக்கழகத் தலைவரும், இஸ்லாமிய மதகுருவுமான Ahmed al-Tayyeb அவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில், இஸ்லாம் மீதும், முஸ்லீம்கள் மீதும் தான் கொண்டுள்ள மதிப்பை வெளியிட்டுள்ளார்.
எகிப்திற்கான திருப்பீடத் தூதர் பேராயர் Jean-Paul Gobel அவர்கள் வழியாக வழங்கப்பட்டுள்ள திருத்தந்தையின் இச்செய்தி, இஸ்லாமியர்கள் மீது கத்தோலிக்கத் திருஅவையும், திருப்பீடமும், திருத்தந்தையரும் கொண்டிருக்கும் ஆழமான அன்பையும், மதிப்பையும்
வெளிப்படுத்துவதாக உள்ளது என்று அலெக்சாந்திரியாவின் காப்டிக் கத்தோலிக்க
வழிபாட்டு முறை தலைமையகம் கருத்து தெரிவித்துள்ளது.
கத்தோலிக்க மதத்திற்கும், இஸ்லாமுக்கும் இடையே நிலவும் தவறான எண்ணங்களைக் களைந்து, இரு தரப்பினரிடையிலும் பேச்சு வார்த்தைகளை மீண்டும் துவக்க, திருத்தந்தையின் இக்கடிதம் தூண்டுதலாக இருக்கும் என்று வல்லுனர்கள் நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. திருத்தந்தை Cagliari நகரில் மேற்கொள்ளும் மேய்ப்புப்பணி பயணத்தின் முழு விவரங்கள்
செப்.19,2013. செப்டம்பர் 22, வருகிற ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சர்தேனியா என்ற தீவில் அமைந்துள்ள Cagliari என்ற நகருக்கு மேற்கொள்ளும் மேய்ப்புப்பணி பயணத்தின் முழு விவரங்கள் இவ்வியாழனன்று வெளியிடப்பட்டன.
ஞாயிறு காலை 7.30 மணிக்கு உரோம் நகர் Ciampino விமான நிலையத்திலிருந்து புறப்படும் திருத்தந்தையின் விமானம், 8.15 மணிக்கு Cagliari-Elmas என்ற விமான நிலையத்தை அடையும். அங்கிருந்து காரில் பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை அவர்கள், 8.45 மணிக்கு Carlo Felice என்ற சதுக்கத்தில் தொழில் உலகின் பல்வேறு பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாற்றுவார்.
அங்கிருந்து மீண்டும் காரில் புறப்படும் திருத்தந்தை, இந்த மேய்ப்புப்பணிப் பயணத்தை அவர் மேற்கொள்ள முக்கியக் காரணமாக அமைந்த பொனாரியா (Bonaria) அன்னை மரியா திருத்தலத்திற்கு 9.45 மணிக்கு சென்றடைவார்.
நகரின் முக்கிய அதிகாரிகளை இத்திருத்தலத்தின் முகப்பில் சந்திக்கும் திருத்தந்தை, 10.00 மணிக்கு, இத்திருத்தலப் பேராலயத்தில் நோயுற்றோரை முதலில் சந்திக்கிறார். அதன்பின், 10.30 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றும் திருப்பலி துவங்கும்.
மதியம் 1 மணிக்கு சர்தேனியாவில் உள்ள ஆயர்களுடன் மதிய உணவு அருந்தும் திருத்தந்தை, மீண்டும் திருத்தலப் பேராலயத்திற்குச் சென்று, அங்கு, காரித்தாஸ் பணிகளால் பயன்பெறும் வறியோரையும், சிறைக் கைதிகளையும் சந்திப்பார்.
மாலை 4 மணியளவில், பாப்பிறைக் கல்விக்கூடங்களில் பயிலும் இறையியல் மாணவர்களையும், ஆசிரியர்களையும், பயிற்சிப் பொறுப்பாளர்களையும் சந்தித்து உரையாற்றுவார்.
மாலை 5 மணிக்கு மீண்டும் ஒருமுறை Carlo Felice சதுக்கத்தில் இளையோரைச் சந்தித்து உரையாற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாலை 6.30 மணியளவில் மீண்டும் விமான நிலையத்திலிருந்து உரோம் நகருக்குத் திரும்புவார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. 'Te Deum' நன்றிப்பாடலுடன் தங்கள் தேசிய நாளைக் கொண்டாடும் வெகு சில நாடுகளில் Chile நாடும் ஒன்று
செப்.19,2013. செப்டம்பர் 18 இப்புதனன்று, Chile நாடு, தன் 203ம் ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடியதையொட்டி அந்நாட்டின் ஆயர் பேரவை ஒரு புதிய வலைதளத்தைத் துவக்கியுள்ளது.
Chile நாட்டின் தலைநகர் Santiagoவில் அமைந்துள்ள பேராலயத்தில் இந்நாளையொட்டி பாடப்பட்ட 'Te Deum' என்ற நன்றிப்பாடலுடன் இவ்வலைத்தளம் துவக்கிவைக்கப்பட்டது.
உலகில், 'Te Deum' நன்றிப் பாடலுடன் தங்கள் தேசிய நாளைக் கொண்டாடும் வெகு சில நாடுகளில் Chile நாடும் ஒன்று. இவ்வாண்டு இந்த நன்றிப் பாடல் ஒரு கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சியாக மேற்கொள்ளப்பட்டது என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
மேலும், இந்த தேசிய நாளையொட்டி, Concepcion உயர்மறைமாவட்டப் பேராயர் Fernando Chomali அவர்கள், அந்நகரில் அமைந்துள்ள El Manzano சிறைக் கைதிகளுக்குத் திருப்பலியாற்றி மறையுரை வழங்கினார்.
நாடு முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருக்கும் இவ்வேளையில், சிறையில் அடைபட்டிருப்பது வேதனையைத் தரும் ஓர் அனுபவம் என்று கூறிய பேராயர் Chomali அவர்கள், நாம் எத்தகையக் குற்றங்களைப் புரிந்திருந்தாலும், இயேசு எப்போதும் நம்முடன் வாழ்கிறார் என்பதை உணர்வது ஆறுதல் தரும் என்று எடுத்துரைத்தார்.
ஆதாரம் : Fides
7. முதுபெரும் தந்தை சாக்கோ Kurdistan பகுதி தேர்தலையொட்டி வெளியிட்டுள்ள செய்தி
செப்.19,2013. ஈராக் சமுதாயத்தின் அடிப்படை விழுமியமாக மதச்சுதந்திரமும், அனைத்து
மக்களின் ஒருங்கிணைந்த வாழ்வும் அமையவேண்டும் என்ற இலக்கை நோக்கி
கிறிஸ்தவர்கள் உழைக்க முன்வர வேண்டும் என்று பாக்தாத் முதுபெரும் தந்தை
லூயிஸ் சாக்கோ கூறினார்.
செப்டம்பர் 21, வருகிற சனிக்கிழமையன்று நடைபெறவிருக்கும் Kurdistan பகுதி தேர்தலையொட்டி செய்தி வெளியிட்டுள்ள கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், மதம், இனம் இவற்றின் அடிப்படையில் வெறுப்பை வளர்க்கும் போக்கினை அனைத்து வேட்பாளர்களும் புறக்கணிக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கிடையே, சிரியா நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகள் குறித்து, அங்குள்ள கிரேக்க கத்தோலிக்க முதுபெரும் தந்தை 3ம் Gregory Laham சார்பில் தலத்திருஅவை பேச்சாளர் அருள்தந்தை Mtanios Haddad அவர்கள், செய்தி வெளியிட்டுள்ளார்.
சிரியாவில் அழிந்துள்ள பள்ளிகள், மருத்துவமனைகள், கோவில்கள் என்ற கட்டிடங்களை எழுப்புவதற்கு முன்னர், அந்நாட்டில் அமைதி கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று அருள் பணியாளர் Haddad அவர்கள் கூறினார்.
ஆதாரம் : AsiaNews / Fides
8. பேராயர் Oscar Romero அவர்கள், இங்கிலாந்தின் Southwark பேராலயத்தில் கௌரவிக்கப்பட்டார்
செப்.19,2013. San Salvador உயர்மறைமாவட்டத்தில் பணியாற்றியபோது, கொல்லப்பட்ட பேராயர் Oscar Romero அவர்கள், செப்டம்பர் 19, இவ்வியாழனன்று இங்கிலாந்தின் Southwark பேராலயத்தில் கௌரவிக்கப்பட்டார்.
Southwark பேராயர் பீட்டர் ஸ்மித் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பல்வேறு கிறிஸ்தவ சபையைச் சார்ந்தவர்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில், El Salvador நாட்டு கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் 13 அடி உயரம் கொண்ட ஒரு தனித்துவம் மிக்க சிலுவை திறந்துவைக்கப்பட்டது.
இச்சிலுவையில், பேராயர் Romero அவர்கள் பயன்படுத்திய தொப்பியும், அவர் கொல்லப்பட்ட வேளையில் அணிந்திருந்த பூசை உடையின் ஒரு பகுதியும் இணைக்கப்பட்டுள்ளன.
ஏழைகளைப் பற்றி அடிக்கடி பேசிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைப் போலவே, குரலற்ற வறியோரின் சார்பில் பேசிய பேராயர் Romero அவர்கள் விரைவில் முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்படும் நாளை எதிர்பாத்திருக்கிறோம் என்று Southwark புனித ஜார்ஜ் பேராலயத்தின் பொறுப்பாளர் Canon John O'Toole அவர்கள் கூறினார்.
No comments:
Post a Comment