Friday, 20 September 2013

செய்திகள் - 18.09.13

செய்திகள் - 18.09.13
------------------------------------------------------------------------------------------------------

1. 20 அருள்பணியாளர்கள் குருத்துவப் பணியின் 25 ஆண்டுகள் நிறைவுக்கு திருத்தந்தையின் வாழ்த்து

2. திருத்தந்தையின் தர்மச்செயல்களுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட பேரருள்திரு Krajewski, பேராயராகத் அருள்பொழிவு

3. பணிபுரியாளரை ஒரு விற்பனைப்பொருளாக நோக்காமல், மனிதர்களாக மதிக்கவேண்டும் - கர்தினால் பீட்டர் டர்க்சன்

4. திருத்தந்தையின் செபங்களும், இறந்தோரின் உயிர் தியாகங்களும் சிரியாவில் நல்லதொரு திருப்பத்தைக் கொணர்ந்துள்ளன

5. காங்கோ குடியரசைச் சேர்ந்த அருள் சகோதரி Angélique Namaika அவகளுக்கு ஐ.நா. விருது

6. திருத்தந்தையின் வருகை தங்கள் நாட்டுக்கு ஆறுதலைக் கொணரும் - காங்கோ குடியரசு அரசுத் தலைவரின் மனைவி திருத்தந்தைக்கு கடிதம்

7. 30 ஆண்டுகளுக்கு முன்னர் நிலவிய அடக்குமுறை ஆட்சிக்கு மீண்டும் திரும்புவது போன்ற ஒரு நிலை தென் கொரியாவில் உருவாகிவருகிறது - தலத்திருஅவை

8. ஐரோப்பிய யூனியன் வழங்கும் மனித உரிமை விருதிற்கு மலாலா பரிந்துரை

------------------------------------------------------------------------------------------------------

1. 20 அருள்பணியாளர்கள் குருத்துவப் பணியின் 25 ஆண்டுகள் நிறைவுக்கு திருத்தந்தையின் வாழ்த்து

செப்.18,2013. அருள் பணியாளர் நிலையில் 25 ஆண்டுகள் நிறைவு செய்யும் இத்தருணம், இப்பணியில் இன்னும் ஆழமான ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பையும் உருவாக்கும் தருணமாக அமையட்டும் என்று 20 அருள்பணியாளர்களிடம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
தென்கொரியாவின் Seoul உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்த 20 அருள்பணியாளர்கள் தங்கள் குருத்துவப் பணியின் 25 ஆண்டுகள் நிறைவை இத்திங்களன்று கொண்டாடியதையொட்டி அவர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியத் திருத்தந்தை, வெள்ளிவிழா காணும் நாயகர்களையும், அவர்களின் குடும்பத்தினர் அனைவரையும் வாழ்த்துவதாகக் கூறினார்.
திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே அவர்கள், Seoul பேராயர் Andrew Yeom Soo Jung அவர்களுக்கு அனுப்பியுள்ள இந்த வாழ்த்துத் தந்தியில், அன்னை மரியா, மற்றும் கொரிய மறைசாட்சிகளின் பரிந்துரைகளால் அருள்பணியாளர்களின் அனைத்து பணிகளும் இன்னும் அதிகம் பலன் தரும் என்று திருத்தந்தை வாழ்த்தியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தையின் தர்மச்செயல்களுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட பேரருள்திரு Krajewski, பேராயராகத் அருள்பொழிவு

செப்.18,2013. தேவையில் இருப்போருக்குப் பணிபுரிவது என்பது அவர்களை வரவேற்பதிலும், அவர்களுடன் உறவை வளர்ப்பதிலும், முக்கியமாக அமைந்துள்ளது என்று வத்திக்கான் நகரின் தலைமைப் பொறுப்பாளராக இருக்கும் கர்தினால் Giuseppe Bertello அவர்கள் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றும் அனைத்து பொது வழிபாடுகளிலும் அவருக்கு உதவிகள் செய்துவந்த பேரருள்திரு Konrad Krajewski அவர்களை, கர்தினால் Bertello அவர்கள் இச்செவ்வாய் மாலை புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் பேராயராக அருள்பொழிவு செய்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சார்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து தர்மச் செயல்களுக்கும் பொறுப்பாக பேரருள்திரு Krajewski அவர்களை, திருத்தந்தை நியமித்ததையடுத்து, அவர் பேராயராகத் அருள்பொழிவு செய்யப்பட்டார்.
இந்த அருள்போழிவுத் திருப்பலியில், இயேசு சபையினர் நடத்தும் Astalli புலம்பெயர்ந்தோர் மையத்தில், சில நாட்களுக்கு முன்னர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய உரையின் ஒருசில வரிகளை தன் மறையுரையில், மேற்கோளாகக் கூறிய கர்தினால் Bertello அவர்கள், வறியோருக்குப் பணிபுரிவது திருஅவையின் முக்கியமான பணிகளில் ஒன்று என்று குறிப்பிட்டார்.
பேராயர் Krajewski அவர்கள் அருள் பொழிவு செய்யப்பட்ட இத்திருப்பலியில், மக்களில் ஒருவராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் கலந்துகொண்டு அவரை ஆசீர்வதித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், இப்புதன் காலையில், பேராயர் Krajewski அவர்களையும், அவரது உறவினர்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனிப்பட்ட முறையில் சந்தித்து, தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. பணிபுரியாளரை ஒரு விற்பனைப்பொருளாக நோக்காமல், மனிதர்களாக மதிக்கவேண்டும் - கர்தினால் பீட்டர் டர்க்சன்

செப்.18,2013. வர்த்தக உலகின் முதலாளிகள், தங்களிடம் பணிபுரிவோரை ஒரு விற்பனைப்பொருளாக நோக்காமல், நன்னெறி, சமுதாய விழுமியங்களின் அடிப்படையில், அவர்களை மனிதர்களாக மதிக்கவேண்டும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
"வர்த்தகத் தலைவர்களின் பணி அழைப்பு" என்ற பெயரில் வத்திக்கான் நூல் வெளியீட்டுத் துறை போர்த்துகீசிய மொழியில் உருவாக்கியிருந்த நூல் ஒன்றுபோர்த்துகல் நாட்டின் லிஸ்பன் நகரில் இச்செவாயன்று மாலை வெளியிடப்பட்டது.
இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு, நீதி அமைதி திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், தான் அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியில், வர்த்தக உலகம் பின்பற்றக்கூடிய ஒழுக்க நெறிகளை சுட்டிக்காட்டுகையில் இவ்வாறு கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்ற திருப்பலியில், அரசியல், சமுதாயம், வர்த்தகம் என்ற அனைத்துத் துறைகளிலும் தலைமைப் பொறுப்பில் இருப்போருக்கு அவர் விடுத்த அழைப்பை தன் செய்தியில் நினைவுகூர்ந்த கர்தினால் டர்க்சன் அவர்கள், தன் செய்தியின் இறுதியில், போர்த்துகல் நாட்டு பாத்திமா அன்னையின் பரிந்துரை அனைவருக்கும் கிடைப்பதாக என்ற வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.
போர்த்துகீசிய மொழியில் எழுதப்பட்டுள்ள இந்நூல், தற்போது இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மானியம், அரேபியம் உட்பட எட்டு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. சீன, கொரிய, இரஷ்ய மற்றும் தாய்லாந்து மொழிகளில் இந்நூல் விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தையின் செபங்களும், இறந்தோரின் உயிர் தியாகங்களும் சிரியாவில் நல்லதொரு திருப்பத்தைக் கொணர்ந்துள்ளன

செப்.18,2013. கடந்த ஈராண்டுகளுக்கும் மேலாக, சிரியா நாட்டில் தொடர்ந்துவரும் துயர நிலைக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செபங்களும், தாக்குதல்களில் இறந்தோரின் உயிர் தியாகங்களும் ஒரு நல்ல திருப்பத்தைக் கொணர்ந்துள்ளன என்று தமஸ்கு நகரில் பணியாற்றும் திருப்பீடத் தூதர் பேராயர் மாரியோ செனாரி கூறினார்.
சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட வேதியத் தாக்குதல்கள் அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்பட்டனவா அல்லது போராட்டக் குழுக்களின் தரப்பில் மேற்கொள்ளப்பட்டனவா என்பதில் தெளிவில்லை என்று ஐ.நா. விடுத்துள்ள அறிக்கையினைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீது இராணுவ படையெடுப்பு நிறுத்தப்பட்டிருப்பதைக் குறித்து தன் நிம்மதியை வெளியிட்ட பேராயர் செனாரி இவ்வாறு கூறினார்.
ஆகஸ்ட் 21ம் தேதி தமஸ்கு நகருக்கு அருகே Ghouta எனுமிடத்தில் மேற்கொள்ளப்பட்டத் தாக்குதல்களில், வேதியப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டன என்ற உண்மை, மனிதகுலம் எவ்வளவு தாழ்ந்த ஒரு நிலைக்கு வந்துள்ளது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு என்று பேராயர் செனாரி ஆழ்ந்த வருத்தத்துடன் கூறினார்.
இராணுவத் தலையீடு நிறுத்தப்பட்டுள்ளது என்ற முடிவும், வேதியத் தளவாடங்களைக் கண்டறிந்து அவற்றை முற்றிலும் அழிப்பது என்ற முடிவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செப்டம்பர் மாதம் 7ம் தேதி மேற்கொண்ட செப முயற்சியின் ஒரு விளைவே என்று தமஸ்கு நகரின் திருப்பீடத் தூதர் பேராயர் செனாரி கூறியுள்ளார்.

ஆதாரம் : AsiaNews

5. காங்கோ குடியரசைச் சேர்ந்த அருள் சகோதரி Angélique Namaika அவகளுக்கு ஐ.நா. விருது

செப்.18,2013. போரினால் சிதைக்கப்படும் குடும்பங்களில் ஒரு தனி மனிதரின் முயற்சியால் எவ்விதம் மீண்டும் நல்ல மாற்றங்களைக் கொணரமுடியும் என்பதற்கு அருள் சகோதரி Angélique Namaika நல்லதொரு எடுத்துக்காட்டு என்று ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
UNHCR என்றழைக்கப்படும் ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் அமைப்பின் சார்பில் வழங்கப்படும் Nansen புலம்பெயர்ந்தோர் விருது, காங்கோ குடியரசைச் சேர்ந்த அருள் சகோதரி Namaika அவகளுக்கு வழங்கப்படும் என்று இச்செவ்வாயன்று அறிவித்த ஐ.நா. உயர் அதிகாரி António Guterres அவர்கள் இவ்வாறு கூறினார்.
புனித அகஸ்டின் துறவுச் சபையைச் சேர்ந்த அருள் சகோதரி Namaika அவர்கள், காங்கோ குடியரசின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் உழைத்து வருபவர். குறிப்பாக, LRA என்றழைக்கப்படும் வன்முறைக் கும்பலால் பாதிக்கப்பட்ட இளையோருக்கு அருள் சகோதரி Namaika அவர்கள் ஆற்றிவரும் பணிகளுக்காக இவ்விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
2009ம் ஆண்டு உருவான இனக் கலவரங்களால் தான் வாழ்ந்த பகுதியை விட்டு துரத்தப்பட்ட அருள் சகோதரி Namaika அவர்கள், தான் நடத்தும் ஒரு மையத்தின் வழியாக இதுவரை 2000க்கும் அதிகமான இளம் பெண்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளார் என்று ஐ.நா.வின் அறிக்கையொன்று கூறுகிறது.
இவ்விருது அறிவிக்கப்பட்ட இதே நாளில், LRA வன்முறை கும்பலால் 2008ம் ஆண்டிலிருந்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,20,000 என்ற விவரத்தையும் UNHCR நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அருள் சகோதரி Angélique Namaika அவர்கள் இவ்விருதினை செப்டம்பர் மாதம் 30ம் தேதி ஜெனீவாவில் பெறுவார் என்றும், இதைத் தொடர்ந்து, அவர் அக்டோபர் மாதம் 2ம் தேதி திருத்தந்தையைச் சந்திப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Fides / ICN

6. திருத்தந்தையின் வருகை தங்கள் நாட்டுக்கு ஆறுதலைக் கொணரும் - காங்கோ குடியரசு அரசுத் தலைவரின் மனைவி திருத்தந்தைக்கு கடிதம்

செப்.18,2013. காங்கோ குடியரசில் நிலையான அமைதி நிலவ திருத்தந்தை குறிப்பாகச் செபிக்கவேண்டும் என்றும், காயப்பட்டிருக்கும் தங்கள் நாட்டுக்கு திருத்தந்தையின் வருகை ஆறுதலைக் கொணரும் என்றும் காங்கோ குடியரசு அரசுத் தலைவரின் மனைவி திருத்தந்தைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
கத்தோலிக்கர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள காங்கோ குடியரசின் அரசுத் தலைவர் Joseph Kabila அவர்களின் மனைவி, Marie Olive Lembe Kabilakabange அவர்கள் அண்மையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் தங்கள் நாட்டில் வாழும் கத்தோலிக்கர்கள் அமைதியையும், நல்லுறவையுமே விரும்புகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக தங்கள் நாடு சந்தித்துவரும் தொடர்ந்த வன்முறைகளால் மக்கள் தங்கள் உயிரையும், உடைமைகளையும் இழந்ததோடு, தங்கள் மன வலிமையையும் இழந்து வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ள அரசுத் தலைவரின் மனைவி Kabilakabange அவர்கள், திருத்தந்தையின் செபங்களும், அவரது வருகையும் தங்கள் நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை உருவாக்கும் என்று தன் கடிதத்தில்  குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : Fides

7. 30 ஆண்டுகளுக்கு முன்னர் நிலவிய அடக்குமுறை ஆட்சிக்கு மீண்டும் திரும்புவது போன்ற ஒரு நிலை தென் கொரியாவில் உருவாகிவருகிறது - தலத்திருஅவை

செப்.18,2013. பொதுநலனிலும், சமுதாய விவகாரங்களிலும் கத்தோலிக்கர்கள் ஈடுபடவேண்டும் என்று திருத்தந்தை தன் மறையுரையில் சொன்னதை நாம் கவனமாகச் செவி மடுக்கவேண்டும் என்று தென்கொரிய தலத்திருஅவை கூறியுள்ளது.
அரசு புலனாய்வு சேவை என்ற பெயரில் தென்கொரிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஓர் அமைப்பின் செயல்பாடுகள், மக்களின் தனிப்பட்ட வாழ்வை கண்காணிக்கும் செயல்களாக அமைந்துள்ளன என்று, கடந்த சில வாரங்களாக Seoul நகரில் கத்தோலிக்கர்கள், கிறிஸ்தவர்கள், புத்தமதத்தினர் அனைவரும் இணைந்து போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசின் புலனாய்வுச் சேவைக்கு எதிராக தென்கொரிய தலத்திருஅவை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கைக்கு அந்நாட்டின் 15 கத்தோலிக்க மறைமாவட்டங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
அரசு உருவாக்கியிருக்கும் இந்த அமைப்பினால், நாட்டில் உள்ள அனைவரின் தனிப்பட்ட வாழ்க்கை கண்காணிக்கப்படும் என்றும், இதுபோன்ற ஒரு வாழ்வு கண்ணாடியில் அமைந்த வீட்டில் அரசின் பார்வையில் வாழும் ஒரு பாதுகாப்பற்ற வாழ்வாக அமையும் என்றும் தலத்திருஅவை கூறிவருகிறது.
30 ஆண்டுகளுக்கு முன்னர் தென் கொரியாவில் நிலவிய அடக்குமுறை ஆட்சிக்கு மீண்டும் திரும்புவது போன்ற ஒரு நிலை தற்போது உருவாகிவருவது ஆபத்து என்பதையும் தென் கொரியத் தலத்திருஅவை தெரிவித்துள்ளது.

ஆதாரம் : AsiaNews

8. ஐரோப்பிய யூனியன் வழங்கும் மனித உரிமை விருதிற்கு மலாலா பரிந்துரை

செப்.18,2013. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஆண்டுதோறும் மனித உரிமைக்காகப் பாடுபடுவோர்களில் சிறந்தவரைத் தெரிவு செய்து விருது வழங்குவது வழக்கம்.
Sakharov விருது என்ற பெயரில் வழங்கப்படும் இவ்விருது, ஐரோப்பிய நாடுகளின் உயரிய விருதாக கருதப்படுகிறது. இவ்விருதினைப் பெற்றவர்களில் பர்மாவைச் சேர்ந்த ஆங் சங் ஸூ கி, தென் ஆப்ரிக்காவின் நெல்சன் மண்டேலா போன்றவர்கள் அடங்குவர்.
இவ்வாண்டிற்கான மனித உரிமை விருதினைப் பெறத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் கூட்டம் சமீபத்தில் Brussels நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 7 பேர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக இத்திங்களன்று ஐரோப்பிய பாராளுமன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பரிந்துரை செய்யப்பட்டுள்ளவர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த Malala Yousafzaiயும், அமெரிக்காவின் Edward Snowdenனும் அடங்குவர்.
16 வயதான மலாலா பள்ளிக்குச் செல்லும்போது தலிபான் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு உயிர்பிழைத்தவர். பெண்கள் கல்விக்காக குரல் கொடுக்கும் இவர் மூன்று உள்ளூர் தேர்தல் குழுவினரால் இந்த விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் Edward Snowden அமெரிக்க அரசு மற்ற நாடுகளை வேவு பார்ப்பதை ஆதாரத்துடன் உலகிற்குத் தெரிவித்தார்.
பசுமைச் சூழல் அமைப்பு ஒன்றினால் இவர் இந்த விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவர்கள் ஏழு பேரில் இறுதியாகத் தேர்வு செய்யப்படுவோருக்கு 50 ஆயிரம் யூரோக்கள் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : AP

No comments:

Post a Comment