செய்திகள் - 16.09.13
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. ஆட்சியில் இருப்போருக்காகச் செபிப்பது கத்தோலிக்கரின் கடமை - திருத்தந்தை பிரான்சிஸ்
2. உரோமை மறைமாவட்டக் குருக்களுடன் உரோமை ஆயரின் சந்திப்பு
3. திருத்தந்தை பிரான்சிஸ் - பாவத்தையும், தீமையையும் வெல்வதற்குத் தகுந்த எதிர்ப்புச்சக்தி கருணையே
4. புனிதர்பட்ட நிலைகளுக்கான திருப்பேராயத்தின் அதிகாரிகளுள் ஒருவராக இந்திய அருள்பணியாளர் நியமனம்
5. திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி
6. Zanzibarல் கத்தோலிக்கக்குரு அமிலத்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதற்கு அரசுத்தலைவர் கண்டனம்
7. நைஜீரியாவில் கடத்தப்பட்ட ஆங்கிலிக்கன் பேராயர் விடுவிக்கப்பட்டுள்ளார்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. ஆட்சியில் இருப்போருக்காகச் செபிப்பது கத்தோலிக்கரின் கடமை - திருத்தந்தை பிரான்சிஸ்
செப்.16,2013. ஆட்சியில் இருப்போர், முதலில் மக்கள் மீது அன்புகொள்ளவேண்டும்; அன்பில்லாமல், அதிகாரத்தை மட்டுமே பயன்படுத்தும் தலைவர்கள், மக்களை அடக்க முடியுமேதவிர, உண்மையில் அவர்களை ஆளுமை செய்யமுடியாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இத்திங்களன்று காலை, புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, நற்செய்தியில், நூற்றுவர் தலைவர் ஒருவர் தன் பணியாளரைக் குணமாக்க இயேசுவிடம் விண்ணப்பித்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு மறையுரை வழங்கினார்.
என் மக்களை நான் உண்மையில் அன்பு செய்கிறேனா என்பதும், என் மக்களை வழிநடத்த, நான் உண்மையிலேயே பணிவுள்ளம் கொண்டுள்ளேனா என்பதும், ஒவ்வொரு
தலைவரும் தனக்குள்ளே எழுப்பவேண்டிய முக்கியமான கேள்விகள் என்று
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் வலியுறுத்தினார்.
ஏனையோரே ஆட்சி செய்கின்றனர், அவர்களுக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று கிறிஸ்தவர்கள் விலகிச் செல்லக்கூடாது, ஏனெனில்
பொதுநலனில் அக்கறை கொள்ளவேண்டும் என்பதையே கத்தோலிக்கத் திருஅவை எப்போதும்
வலியுறுத்தி வருகிறது என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
ஒரு நல்ல கத்தோலிக்கர் அரசியலில் தலையிடக்கூடாது என்று சொல்வது தவறு என்று கூறியத் திருத்தந்தை, ஆட்சியில் இருப்போருக்காகச் செபிக்கவேண்டும் என்பதை புனித பவுல் அடியார் நமக்கு அறிவுரையாக வழங்கியுள்ளார் என்று சுட்டிக்காட்டினார்.
ஆட்சியில் இருப்போரை எப்போதுமே தாக்கிவரும் ஊடகங்களின் பாணியில் செல்வதற்குப் பதிலாக, தவறு செய்யும் தலைவர்களின் மன மாற்றத்திற்காகவும், நல்ல ஆட்சி அமைவதற்கும் செபிப்பது உண்மையான கத்தோலிக்கரின் கடமை என்று திருத்தந்தை தன் மறையுரையில் வலியுறுத்தினார்.
ஆதாரம் வத்திக்கான் வானொலி
SeDoc Pope Francis: Christians must pray for their leaders
2. உரோமை மறைமாவட்டக் குருக்களுடன் உரோமை ஆயரின் சந்திப்பு
செப்.16,2013. திருத்தந்தையின் எளிமையும், மக்களுடன், குறிப்பாக, ஏழைகளுடன் நெருங்கிவர விழையும் அவரது ஆவலும், அவர் மக்களுடன் நேரடியாகப்பேச விழைவதும், தவறுகளைத் துணிவுடன் கண்டிப்பதும், அனைவரின் இதயங்களையும் தொட்டுள்ளதாக அறிவித்தார் கர்தினால் Agostino Vallini.
உரோம் மறைமாவட்ட ஆயர் என்ற முறையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று
புனித ஜான் இலாத்தரன் பசிலிக்கா அருகே இருக்கும் மறைமாவட்ட தலைமை
இல்லத்தில் உரோம் மறைமாவட்ட குருக்களைச் சந்திக்கச் சென்றபோது அளித்த
வரவேற்புரையில் இவ்வாறு கூறினார் அம்மறைமாவட்டத்திற்கான திருத்தந்தையின்
பிரதிநிதி கர்தினால் Vallini.
திருஅவை மீது அக்கறையின்றி, அதிலிருந்து ஒதுங்கியிருக்கும் இக்கால மக்களிடையே நற்செய்திப்பணியை ஆற்றவேண்டிய கடமை உறுதிப்படுத்தப்படவேண்டியதன் அவசியத்தை, காலத்தின் அருங்குறியாக திருத்தந்தையிடமிருந்து தாங்கள் கற்றுக்கொள்வதாக மேலும் கூறினார் கர்தினால் Vallini.
திருத்தந்தை
வழங்கிவரும் ஊக்கத்தினால் பலம்பெற்றவர்களாக தங்கள் மேய்ப்புப்பணி கடமைகளை
திறமுடன் ஏற்றுநடத்த அனைத்து மேய்ப்பர்களும் உறுதிவழங்குகின்றனர் என்று
திருத்தந்தையிடம் எடுத்துரைத்தார் கர்தினால் Vallini.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
SEDOC Pope meets Rome diocesan priests
3. திருத்தந்தை பிரான்சிஸ் - பாவத்தையும், தீமையையும் வெல்வதற்குத் தகுந்த எதிர்ப்புச்சக்தி கருணையே
செப்.16,2013. உலகையும், மனித குலத்தையும் புற்றுநோயாக பாதித்துவரும் பாவத்தையும், தீமையையும் வெல்வதற்குத் தகுந்த எதிர்ப்புச்சக்தி கருணையே என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
தொடர்ந்து பெய்த மழையிலும், புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரம் மக்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் கருணையை மையப்படுத்தி இஞ்ஞாயிறன்று வழங்கிய நண்பகல் மூவேளைச் செப உரையில் இவ்வாறு கூறினார்.
காணாமற்போன ஆடு, காணாமற்போன நாணயம், காணாமற்போன மகன் என்று லூக்கா நற்செய்தியில் காணப்படும் மூன்று உவமைகளில், மன்னிப்பதன் வழியாக வெளிப்படும் இறைவனின் மகிழ்வு வெளிச்சமாகிறது என்று கூறினார் திருத்தந்தை.
நாம் நீதிமான்கள், எனவே, பிறரைத் தீர்ப்பிட வல்லவர்கள் என்றும், பாவிகள் தண்டிக்கப்படவேண்டும் என்றும் நமக்குள் எழும் எண்ணங்களைக் குறித்து எச்சரிக்கை வழங்கியத் திருத்தந்தை, மன்னிப்பு, கருணை ஆகிய பண்புகளே நமக்கு மீட்பளிக்கும் என்று வலியுறுத்தினார்.
உலகம் வழங்கும் நீதி, இவ்வுலகைக்
காப்பாற்றும் வலிமை பெற்றது என்று அலகை நமக்குச் சொல்லித்தரும் சோதனையை
வெல்லவேண்டும் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிலுவையில் வெளியாகும் இறைவனின் நீதியே இவ்வுலகைக் காப்பாற்றமுடியும் என்று கூறினார்.
உங்கள் அனைவரிடமும் நான் இப்போது கேட்பது இதுதான். நீங்கள் கோபம் கொண்டுள்ள ஒருவரை இப்போது நினைவில் கொணர்ந்து, அவர்களுக்காக இப்போது அமைதியில் செபியுங்கள், அவர் மீது பரிவுகொள்ள இறைவன் வரம் தரவேண்டுமென்று செபியுங்கள் என்று கூறியத் திருத்தந்தை, வளாகத்தில் கூடியிருந்த அனைவருடனும் சில மணித்துளிகள் அமைதியில் செபித்தபின், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.
ஆதாரம் வத்திக்கான் வானொலி
SeDoc Pope’s Angelus: mercy is the true force that can save man and the world from the 'cancer' of sin
4. புனிதர்பட்ட நிலைகளுக்கான திருப்பேராயத்தின் அதிகாரிகளுள் ஒருவராக இந்திய அருள்பணியாளர் நியமனம்
செப்.16,2013. இந்தியாவைச் சேர்ந்த அருள்பணி Paul Pallath அவர்களை, புனிதர்பட்ட நிலைகளுக்கான திருப்பேராயத்தின் அதிகாரிகளுள் ஒருவராக இத்திங்களன்று நியமித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இதுநாள்வரை திருப்பீடத்தின் Rota Romana எனும் நீதித்துறை அலுவலகத்தில் பணியாற்றிவந்த அருள்பணி Paul Pallath அவர்கள், தற்போது, புனிதர் பட்ட நிலைகளுக்கென திருப்பேராயத்தில், பரிந்துரைக்கப்படும் இறையடியார்களின் சார்பில் வாதிடுபவர்களுள் ஒருவராக நியமிக்கப்ப்ட்டுள்ளார்.
1959ம் ஆண்டு கேரளாவின் பாளை மறைமாவட்டத்தில் பிறந்த அருள்பணி Paul Pallath அவர்கள், 1987ம் ஆண்டு அதே மறைமாவட்ட குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். இவர் 1995ம் ஆண்டு முதல் திருப்பீடத்தில் பணியாற்றி வருகிறார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
SEDOC Pope appoints Indian priest as relator in the congregation for causes of saints.
5. திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி
செப்.16,2013. 'உலகப்பொருட்களில் மகிழ்ச்சியை நாடுவது, மகிழ்ச்சியின்றி இருப்பதற்கான நிச்சயமான பாதை' என இஞ்ஞாயிறன்று தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் டுவிட்டர் வழியாக, தன் கருத்துக்களைச் சுருக்கமாக வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று, உலகப்பொருட்களின்வழி முழு மகிழ்ச்சியை நாடுவது, அதன் எதிர்மறை விளைவுகளையேக் கொணரும் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள் ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் ஆங்கிலம், இத்தாலியம், இஸ்பானியம், பிரெஞ்ச், இலத்தீன், அரேபியம், ஜெர்மானியம், போலந்து, போர்த்துக்கீசியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகி வருகின்றன.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
SEDOC Pope’s Twitter message
6. Zanzibarல் கத்தோலிக்கக்குரு அமிலத்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதற்கு அரசுத்தலைவர் கண்டனம்
செப்.16,2013. கடந்த சனிக்கிழமையன்று கத்தோலிக்க அருள்பணியாளர் ஒருவர் Zanzibar தீவில் அமிலம் வீசி தாக்கப்பட்டுள்ளது குறித்து தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார் அத்தீவின் அரசுத்தலைவர்.
இத்தகைய கோழைத்தனமான தாக்குதல்களைக்கண்டு நாம் தொடர்ந்து அச்சத்தில் வாழ்ந்துகொண்டிருக்க முடியாது என்ற அரசுத்தலைவர் Ali Mohammed Shein, இத்தகைய கோழைகளைத் தனிமைப்படுத்த பொதுமக்களின் ஒன்றிணைந்த நடவடிக்கை தேவைப்படுகின்றது என்றார்.
அடையாளம் தெரியாத சில மனிதர்களால் அமில வீச்சுக்கு உள்ளாக்கப்படட Zanzibarன் கத்தோலிக்க அருள்பணியாளர் Amselmo Mwangambaவை மருத்துமனையில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார் அரசுத்தலைவர்.
இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட Zanzibarல் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 3 விழுக்காடேயாகும்.
ஆதாரம் : MISNA
MISNA ZANZIBAR: PRESIDENT URGES “REBELLION” IN THE WAKE OF AGGRESSION AGAINST PRIEST
7. நைஜீரியாவில் கடத்தப்பட்ட ஆங்கிலிக்கன் பேராயர் விடுவிக்கப்பட்டுள்ளார்
செப்.16,2013. நைஜீரியாவில் ஒரு வாரத்திற்கு முன்னர் கடத்திச்செல்லப்பட்ட ஆங்கிலிக்கன் பேராயர் Ignatius Kattey விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறை அறிவித்தது.
காவல்துறையின் நடவடிக்கை மூலமே அவர் விடுவிக்கப்பட்டதாகவும், அவரின் விடுதலைக்கென பிணையத்தொகை எதுவும் வழங்கப்படவில்லை எனவும் அறிவித்தார் நைஜீரிய காவல்துறையின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் Angela Agabe.
இம்மாதம் ஆறாம்தேதி ஆங்கிலிக்கன் பேராயர் Ignatius அவர்களையும் அவர் மனைவி Beatrice அவர்களையும் கடத்திச்சென்றவர்கள் ஒரு சில மணிநேரங்களிலேயே அவர் மனைவியை விடுவித்ததுடன், ஒருவாரத்திற்குப்பின் பேராயரையும் தற்போது விடுவித்துள்ளனர்.
ஆதாரம் : AP
AP Police: Kidnapped Nigerian Anglican archbishop is released
No comments:
Post a Comment